tamilnadu

திரைப்படத் துறையில் மத துவேசத்தை பரப்ப முயற்சி கலைஞர்களின் குரலை ஒடுக்க பாசிச மிரட்டல்

திருவனந்தபுரம், ஜூலை 28- அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு எதிரான மதவாத சக்திகளின் மிரட்டல் கேரளத்தில் எடுபடாது என்றும், கலைஞர்களுக்குக் கேரள அரசு அனைத்துப் பாதுகாப்பும் வழங்கும் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதிபடத் தெரிவித்தார். மாநில திரைப்பட விருது வழங்கும் விழாவைத் துவக்கிவைத்துப் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் பேசுகையில் கூறியதாவது: திரைப்படத்துறையில் மதத் துவேஷத்தைப் பரப்பிவிடுவதற்கான முயற்சிகள் அண்மைக் காலமாகத் தேசம் தழுவிய அளவில் வலுப்பெற்று வருகின்றன. கலைஞர்களின் குரலை ஒடுக்குவதற்கான அரைப் பாசிஸ்ட் மிரட்டலின் ஒரு பகுதிதான் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு எதிராக எழுந்த மிரட்டல். நாங்கள் சொல்வதை அனுசரித்து நடக்காவிட்டால் சந்திரனுக்குப் போய்விடுங்கள் என்கிறார்கள். கேரளம் இந்தியாவுக்கும், இந்தியா உலகத்திற்கும் வழங்கிய திரையுலகப் பரிசுதான் அடூர் கோபாலகிருஷ்ணன் எனும் தனிஆளுமை. தாதாசாகேப் பால்கே விருதுவரை பெற்ற அடூரை எதிர்ப்பதன் மூலம் மதவாத சக்திகள் தங்களின் கலாச்சார வறுமையைக் காட்டிக் கொள்கிறார்கள். இத்தகையவர்களின் பயங்கரவாதச் செயலுக்கும் அச்சுறுத்தலுக்கும் கேரளம் அடங்கிப் போகிற பிரச்சனை இல்லை. சுயநல தேசியவாதத்திற்கு வலுசேர்க்கிற ஒருபிரிவு திரைப்படங்கள் வெளிவருகிற இக்காலத்தில்  ‘ஸுடானி ஃப்ரம் நைஜீரியா’  போன்ற திரைப்படங்கள் மிகச்சிறந்த கருத்தை  நம்முன் வைக்கின்றன. எல்லைகள் கடந்து சகமனிதர்களிடம் வைக்கும் நட்பையே இந்தத் திரைப்படம் நமக்குக் காட்டுகிறது என்றார்.

;