tamilnadu

img

பயங்கரவாதியை வேட்பாளராக்கிய பாரதிய ஜனதா கட்சி : மதவெறியை கையில் ஏந்தி வாக்கு கேட்டு வரும் தேசவிரோதிகள்

புதுதில்லி:

மத்தியப்பிரதேசம், போபால் தொகுதியில் பாஜகவின் வேட்பாளராக பிரக்யா சிங் தாகூர் நிறுத்தப்பட்டிருப்பது என்பது 17ஆவது மக்களவைத் தேர்தலில் மிகவும் அச்சுறுத்தும், மிகவும் இழிவானதோர் அடையாளமாகும். இதன்மூலம் பாஜக, தன்னுடைய சுயரூபத்தை, இந்துத்துவா மதவெறி நிகழ்ச்சிநிரலை அதன் எதிர்மறை விளைவுகளுடன் எவ்விதமான ஒளிவு மறைவுமின்றி வெளிப்படுத்திவிட்டது.


இதை வன்மையாகக் கண்டித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது அதிகாரப்பூர்வ ஏடான பீப்பிள்ஸ் டெமாக்ரசியில் எழுதியுள்ள தலையங்கம் வருமாறு:


யார் இந்த பிரக்யா?

பிரக்யா சிங் தாகூர், 2008ஆம் ஆண்டில் மாலேகானில் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்களில் ஒருவர். மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்திய குழுவிற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்ற அறிக்கையில், அவருடைய மோட்டார் சைக்கிளில்தான் வெடிகுண்டுத் தாக்குதலுக்கான வெடிமருந்துகள் நிரப்பப்பட்டிருந்ததாகவும், அதன்மூலம் மேற்கொள்ளப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில்தான் ஆறு பேர் கொல்லப்பட்டார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.


மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர், அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் கழுத்தை நெரித்துக் கொன்றிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அரசுத்தரப்பில் வழக்கைத் தாக்கல் செய்திருந்த தேசியப் புலனாய்வு முகமை (NIA), நீதிமன்றத்தில் அவருக்கு எதிராகப் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் எனவே அவரை விட்டுவிடலாம் எனவும் வாதிட்டது. ஆயினும் நீதிமன்றம் அதனை ஒப்புக்கொள்ளாமல், அவருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்து, வழக்கு விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. தற்போது அவர் அந்த வழக்கில் பிணையில் வெளிவந்திருக்கிறார்.

இப்படியாக ஒரு பயங்கரவாத வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் பேர்வழியைத்தான் பாஜக, போபாலில் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது. பிரக்யா சிங் தாகூர், கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழ்வதிலும், இந்துத்துவா வெறியை வெளிப்படுத்துவதிலும் எவ்வித ஒளிவுமறைவுமின்றியே செயல்பட்டு வந்திருக்கிறார்.

பிரக்யா சிங் தாகூர் வேட்புமனு தாக்கல் செய்தவுடனேயே, தன் மீது வழக்கு தொடுத்த மகாராஷ்டிட்ரா காவல்துறையில் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் தலைவராக இருந்த ஹேமந்த் கார்க்கரேவை மிகவும் இழிவாகப் பேசினார். ஹேமந்த் கார்க்கரே தான் மாலேகான் வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கின் புலன்விசாரணையை மேற்கொண்டு பிரக்யாசிங் தாகூரையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்தவர். பிரக்யா சிங் தாகூர், தான் ஹேமந்த் கார்க்கரேக்கு எதிராக சாபமிட்டதால்தான், அதன்பின்னர் 45 நாட்களில் பயங்கரவாதிகளின் குண்டுகள் துளைத்து அவர் இறந்தார் என்று கூறி யிருக்கிறார்.  


கார்க்கரே ஒரு துணிச்சல் மிக்க போலீஸ் அதிகாரியாவார். 2008 நவம்பரில் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலின் போது பலியானார். அத்தகைய சிறந்த போலீஸ் அதிகாரியை மிகவும் இழிவுப்படுத்தும் வகையிலும், அவர் மீது வெறுப்பையும் வன்மத்தையும் வெளிப்படுத்தும் வகையிலும் மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விதத்தில் பாஜக வேட்பாளரான பிரக்யா வாக்குமூலம் அளித்துள்ள போதிலும், அதனைக் கண்டித்திட பாஜக முன்வரவில்லை. மாறாக அது அவருடைய சொந்தக்கருத்து என்றும், அநேகமாக காவல்துறையினரின் துன்புறுத்தல்களால் பாதிப்புக்கு ஆளானதன் விளைவாக அவர் அவ்வாறு கூறியிருக்கலாம் என்றும் மட்டும்தான் கூறியிருக்கிறது.

தனக்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்துக் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் அதன் குவிமாடத்தில் தான் நின்று கொண்டிருந்ததாகவும் அதேபோல் அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும்போது தான் அங்கே இருப்பேன் என்றும் பிரக்யா பீற்றிக் கொண்டிருக்கிறார்.


வக்காலத்து வாங்கும் மோடி

நரேந்திர மோடி பிரக்யாவைத் தேர்வு செய்திருப்பதற்கு வக்காலத்து வாங்குவதிலிருந்தே, பாஜக நன்கு சிந்தித்துத்தான் அவரைத் தேர்வு செய்திருக்கிறது என்பது புலனாகிறது. பிரக்யா தாகூர் போட்டியிடுவது தொடர்பாக ஒரு நேர்காணலில் மோடி கூறுகையில், “பிரக்யா தாகூரை வேட்பாளராக நிறுத்தியிருப்பதென்பது, வாசுதைவ குடும்பகத்தில் நம்பிக்கையுள்ள ஐயாயிரம் ஆண்டு கால நாகரிகத்தின்மீது அவதூறை வீசுபவர்களுக்குப் பதிலடி அளிப்பதாகும். அவர்கள்தான் வாசுதைவ குடும்பகத்தாரை பயங்கரவாதிகள் என்று அழைக்கிறார்கள்” என கூறியிருக்கிறார். (வாசுதைவ குடும்பகம் என்பது ஒரு சமஸ்கிருத சொற்றொடர். இதன் பொருள், உலகத்தில் உள்ள அனைவரும் ஒரே குடும்பத்தினர் என்பதாகும்.) இதற்கு முன்பு ஏப்ரல் 1 அன்று வார்தாவில் மோடி பேசும்போது, “இந்து பயங்கரவாதம் என்று பேசுவோர் ஒட்டுமொத்த இந்து சமூகத்தினரையும் அவமதிக்கிறார்கள்” என்று கூறியிருந்தார். அவர் மேலும், “கடந்த ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில் இந்து பயங்கரவாத செயலைக் காட்டக்கூடிய விதத்தில் ஒரு சம்பவம் கூட நிகழ்ந்ததில்லை,” என்றும் அறிவித்திருந்தார்.  


பிரக்யா ஒரு அப்பாவியா?

இதைவிட அபத்தம் வேறென்ன இருக்க முடியும்? நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றதிலிருந்து, குஜராத்தில் 2012ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டது வரையிலும்; பின்னர் தபோல்கர், பன்சாரே, கல்புர்கி மற்றும் கௌரி லங்கேஷ் முதலானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது வரை – அனைத்தும் இந்துத்துவா ‘பயங்கரவாதத்தின் தொடர் நடவடிக்கைகளேயாகும். இவர்களின் கூற்றுகளை நுணுகி ஆராய்ந்தோமானால், அவர்களைப் பொறுத்தவரையிலும் “பயங்கரவாதிகள் என்றால் அவர்கள் இந்துக்களாக இருக்க முடியாது, மாறாக அவர்கள் முஸ்லிம்களாக மட்டுமே இருக்க முடியும்’’ என்பதேயாகும்.

அமித் ஷா மற்றும் பாஜகவினரின் கூற்றுக்களின்படி, பிரக்யா தாகூர் மிகவும் அப்பாவித்தனமான ஒரு சாமியாரினியாவார்; அவர் பொய் வழக்கில் சேர்க்கப்பட்டுவிட்டார் என்பதாகும். அதே சமயத்தில், சங் பரிவாரக் கும்பல் அவரை, இந்துக்களைக் கொன்றோரை பழிதீர்த்தவர் என்றும் புகழ்பாடுகின்றனர். 


மோடி விஷம்

பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தின் பிரதான அம்சமே மதவெறிதான். அதன்மூலம் வாக்காளர்கள் மத்தியில் மதவெறித் தீயை எந்த அளவிற்கு அதிகமாக விசிறிவிட முடியுமோ அந்த அளவிற்கு விசிறிவிட வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம். இந்த நோக்கத்தின் பின்னணியில்தான் பிரக்யா தாகூரை அவர்கள் வேட்பாளராக முன்னிறுத்துகிறார்கள். சமீபத்தில் நரேந்திர மோடியிலிருந்து அமித் ஷா வரை பாஜக தலைவர்களின் பேச்சுக்கள் எல்லாம் இவ்வாறு மதவெறி விஷத்தைக் கக்கும் விதத்தில் அமைந்திருப்பதைக் காண முடியும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு எதிரிகளிடமிருந்து இந்துக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாகவே முழங்கத் தொடங்கிவிட்டார்கள். சிறுபான்மையினருக்கு எதிராகக் கருத்துக்கள் கூறுவதை இப்போது அநேகமாக அவர்கள் மறைத்து வைப்பதில்லை. மக்கள் மத்தியில் போர் வெறியைத் தூண்டுவதற்காக, ஆயுதப்படையினரின் தியாகத்தையும் இழிவான முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாட்டின் குடிமக்களாக இருப்பவர்களில் “அந்நியர்களைக்” களையெடுப்பதற்காகத்தான் குடியுரிமை (திருத்தச்) சட்டமுன்வடிவு, குடிமக்கள் தேசியப் பதிவேடு ஆகியவற்றைக் கொண்டுவந்திருப்பதாகவும் கூறத் தொடங்கி விட்டார்கள்.

மக்கள் மத்தியில் மதத்தின் அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்திடும் இவர்களின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகத்தான் இப்போது முஸ்லிம்களுக்கு எதிராக வெறித்தனமாக விஷத்தைக் கக்குகிற, பயங்கரவாத வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள, காவி உடை அணிந்துள்ள ஒரு பெண் சாமியாரை ஆர்எஸ்எஸ்/பாஜக நிகழ்ச்சிநிரலின் ஓர் அடையாளமாகத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார்கள். இது ஒன்றும் இவர்களுக்குப் புதிதுமல்ல. முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை உமிழும் மற்றுமொரு இந்துத்துவா மதவெறியன் யோகி ஆதித்யநாத்தை, உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சராகக் கொண்டு வந்தவர்கள்தானே இவர்கள்!


அப்பாவித்தனமாக மோடியை நம்பாதீர்!

இவர்கள் இதுநாள்வரையிலும் கூறிவந்த, “எல்லோருடனும் எல்லோருக்காகவும்” என்கிற முழக்கத்தையெல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டார்கள். அதற்குப் பதிலாக, இந்து மதவெறி – போர்வெறி முழக்கங்களை எழுப்பத் தொடங்கிவிட்டார்கள். இத்தகைய இவர்களின் முழக்கங்கள் மோடி நாட்டின் வளர்ச்சிக்காகத்தான் பிரதமராக ஆனார் என்று இன்னமும் அப்பாவித்தனமாக எண்ணிக் கொண்டிருக்கிறவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இவர்களின் சுயரூபம் இப்போது மிகவும் தெளிவாக தெரிந்துவிட்டது. இந்த நிலையில் நாட்டைக் காப்பாற்றிட ஒரே வழி, 17வது மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் மோடி தோற்கடிக்கப்படுவதை உத்தரவாதப்படுத்துவதேயாகும்.


ஏப்ரல் 24, 2019

தமிழில்: ச. வீரமணி

;