tamilnadu

img

வருங்கால வைப்பு நிதிக்கு 8.55 சதவிகிதத்திற்கு மேல் வட்டி தரமுடியாதாம்

புதுதில்லி:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு (EPF), 2018 - 19 ஆண்டில், 8.65 சதவிகிதம் வட்டி வழங்கலாம் என்று ஊழியர் சேமநல நிதியத்தின் டிரஸ்டீக்கள் பரிந்துரை செய்ததாகவும், மத்திய அரசு அதனை ஏற்காமல், 8.55 சதவிகிதம் மட்டும் வட்டி வழங்கி அநீதி இழைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


இந்த 8.55 சதவிகிதம் வட்டி என்பது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகமிகக் குறைவானது என்றும் கூறப்படுகிறது.தொழிலாளர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, ஊழியர் சேமநல நிதியத்தின் டிரஸ்டி-க்கள், வட்டியை உயர்த்த முன்வந்தாலும், நிதி அமைச்சகம் ஒரு கணக்கை வைத்துக் கொண்டு, அனுமதி மறுக்கிறது என்று தொழிலாளர் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


அதாவது, ஊழியர் சேமநல நிதியத்தில் இருக்கும் பணத்தில், 2018 - 19ஆம் ஆண்டுக்கு, பி.எப். கணக்குதாரர்களுக்குக் கடந்த வருடம் போல 8.55 சதவிகிதம் மட்டுமே வட்டி கொடுத்தால் உபரி 771 கோடியே 37 லட்சம் ரூபாயாக இருக்கும். ஒருவேளை டிரஸ்டிக்கள் சொல்வது போல 8.65 சதவிகிதமாக வட்டியை உயர்த்தினால் உபரி நிதி 151 கோடியே 67 லட்சம் ரூபாய்க்கு சரிந்து விடும். இதுவே 8.7 சதவிகிதம் கொடுத்தால், சேமநல நிதியமானது, (EPFO), 158 கோடி ரூபாய் தன் கைகாசைப் போட வேண்டி இருக்குமாம். 

எனவே, மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும், ஊழியர் சேமநல நிதி அமைப்பிடம் (EPFO) அமைப்பிடம், பிஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு 8.65 சதவிகிதம் வட்டி கொடுக்கும் அளவுக்குப் பணம் இருக்கிறதா..? என ரொம்ப நல்லவர்கள் போல மத்திய நிதி அமைச்சகம் கேள்வி எழுப்பி இருக்கிறது. 


இதற்கு ஊழியர் சேமநல நிதி அமைப்பிடம் பதில் இருந்தாலும், அதை விவாதித்தால் பழி தொழிலாளர் நல அமைச்சகத்தின் மீதுதான் விழும் என்ற அடிப்படையில் அவர்கள் மென்று விழுங்கியுள்ளனர். ஏனெனில் சேமநல நிதியத்தின் பணம் சுமார் 575 கோடி ரூபாயை தொழிலாளர் நல அமைச்சகமானது, திவாலான ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு முதலீடு செய்ததற்கு அடிப்படையில் மத்திய அரசின் கொள்கைகள்தான் காரணம் என்றாலும், அதை மூடிமறைத்து பழியை தொழிலாளர் துறை மீது தள்ளிவிட்டு, தப்பித்துக் கொள்ளவே மத்திய அரசு கணக்கு கேட்டுள்ளது.


இருப்பினும், நிதி அமைச்சக அதிகாரிகளோடு, தொழிலாளர் நல அமைச்சக அதிகாரிகள் பல முறை பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்கள். பல கடிதங்களில் பதிலும் அளித்ததாக கூறப்படுகிறது. ஆண்டுக்கு 8.65 சதவிகிதம் வட்டியை கொடுக்க முடியும் என்று வாதிட்டிருக்கிறார்கள். ஆனால், கடைசிவரை நிதியமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை.


“பிஎப் சந்தாரர்களுக்குக் கடந்த 20 வருடங்களுக்கு மேல் வட்டியைக் கணக்கிட்டுக் கொடுத்து வருகிறோம். இதுவரை எங்கள் கணிப்புகள் தப்பியதில்லை. இப்போதும் மத்திய நிதி அமைச்சகம் சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு விளக்கமளித்து வருகிறோம்” என்று தொழிலாளர் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த 2016-ஆம் ஆண்டில், 8.80 சதவிகிதம் வரை வட்டி கொடுப்பதற்கு, பிஎப் டிரஸ்டீக்கள் பரிந்துரைத்தார்கள். ஆனால் மத்திய நிதி அமைச்சகம் 8.70 சதவிகிதம் மட்டுமே கொடுக்க அனுமதித்தது. இதுபற்றி கேள்வி எழும்போதெல்லாம் மத்திய அரசு நிதி நெருக்கடியில் இருக்கிறது; கைக்காசை போட்டு, பி.எப். பணத்திற்கு வட்டி தர முடியாது என்று கூறுவது வழக்கமாகி விட்டதாக கூறப்படுகிறது.


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 8.7 சதவிகிதம் வட்டி கொடுத்தாலும், மத்திய அரசுக்கான கூடுதல் செலவு வெறும் 158 கோடி ரூபாய்தான். அந்த 158 கோடி ரூபாயைத்தான் நாங்கள் தர முடியாது என்று கூறி பிடிவாதம் பிடித்து வருகிறது. அதே மத்திய அரசுதான், ரூ. 2 ஆயிரம் 989 கோடிக்கு படேலுக்கும், ரூ. 3 ஆயிரத்து 643 கோடிக்கு சத்ரபதி சிவாஜிக்கும் சிலை வைப்பதற்கு நிதியை வாரி இறைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


;