tamilnadu

img

மருத்துவம் படிக்க அரசு உதவியை எதிர்பார்க்கும் நான்கு மாணவிகள்....

கிராமப்புற அரசு பள்ளி மாணவ - மாணவிகள் மருத்துவம் படிப்பதற்காக அவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடை தமிழக அரசு கொண்டு வந்தது. மேலும் இந்த கல்வி ஆண்டே உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு கலந்தாய்வு  தொடங்கியது.

அந்த வகையில் கடந்த 18ஆம் தேதி நடந்த முதல் கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் மருத்துவம் படிக்க அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து தேர்வு செய்தனர். அரசு கொண்டுவந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் தான் இவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. அறந்தாங்கி ஒன்றியம் மாங்குடியைச் சேர்ந்த விவசாயி கூலி வேலை செய்யும் சிவகுமார் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிந்து வரும் கூலித் தொழிலாளியான அவரது மனைவி தனலெட்சுமி  இவர்களின் மகள் பிரதீஷா. மாங்குடி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு பின்னர் சுப்பிரமணியபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்றார். இதேபோல் பெ. நர்மதா, து. திலகா, மு. சர்மிளாதேவி ஆகிய மாணவிகளும் இதே சுப்பிரமணியபுரம் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றனர். இவர்கள் அனைவரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த 19ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.அதில் இவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இட ஒதுக்கீடு இல்லை என கூறி   தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அவர்களுக்கு தெரிவித்தனர். அதன்பேரில் பிரதீஷா, கூலித் தொழிலாளியான தனது தந்தை சிவகுமார் ஆண்டுதோறும் மருத்துவ படிப்பிற்கு லட்சக்கணக்கில் செலவினை செய்ய முடியாது. அதனால் தனியார் கல்லூரி வாய்ப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அதே போல் பெ.நர்மதா, து.திலகா, மு. சர்மிளா தேவி ஆகிய மாணவிகளும் லட்சக்கணக்கில் செலவு செய்ய இயலாது என்று தனியார் கல்லூரியை தேர்வு செய்யவில்லை. இந்நிலையில் அவர்கள் காத்திருப்புப் பட்டியலில்  இருப்பதாக சொல்லி அனுப்பி உள்ளனர். 

கலந்தாய்வுக்கு மறுதினம் 20ஆம் தேதி அன்று தமிழக முதல்வர், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தார். இந்நிலையில்  பிரதீஷாவுக்கும் இவரது மற்ற மூன்று மாணவிகளுக்கும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தி அவர்களுக்கு மீண்டும் ஒருவாய்ப்பு ஏற்படுத்தித்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கிராமப்புறக் கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகள் மருத்துவராக  உதவ வேண்டும் என்று அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். (ந.நி.)

;