tamilnadu

உணவே மருந்து முறையை பின்பற்றி நோயின்றி வாழலாம் ஆட்சியர் கருத்து

புதுக்கோட்டை, ஜன.9-  புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற 3-வது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தொடங்கி வைத்துப் பேசியதாவது: தமிழ் மாமுனிவர் அகத்தியர் பிறந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய சித்த மருத்துவ நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாள் ஜன.13 அன்று வருவதையொட்டி வியாழக்கிழமை 3-வது தேசிய சித்த மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது. இம்முகாமில் பழைய சித்த மருத்துவ முறைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்தும், தொற்றா நோய்களை தடுக்கவும், எவ்வித நோய்களும் ஏற்படாமல் வரும்முன் காக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய உணவு முறைகள் குறித்தும், வாழ்நாளை அதிகப்படுத்தக் கூடிய காயகல்பம் குறித்தும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். இன்றைய தினம் நடைபெறும் இந்த சித்த மருத்துவ முகாமில் பொது மக்களுக்கு நாள்பட்ட தோல் நோய்கள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான நோய்கள், தொற்றா நோய்கள் போன்ற பல்வேறு நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதுடன் வர்ம சிகிச்சை, மூலிகை ஆவி சிகிச்சை போன்ற சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. மேலும், மூலிகை கண்காட்சி அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொது மக்கள் தங்கள் உடல்நலனுக்கு ஏற்றுக்கொள்ள கூடிய உணவுகளை உண்ண வேண்டும். இதே போன்று உணவே மருந்து, மருந்தே உணவு என்ற முறையை பின்பற்றினால் பொது மக்கள் நோயற்ற நல்வாழ்வு வாழலாம் என பேசினார்.

;