tamilnadu

img

அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தைக்கு மத்திய கூட்டுறவு சங்கத் தலைவர் பதவி

புதுக்கோட்டை:
அதிமுகவில் குடும்ப வாரிசு அரசியல் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் தந்தை புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கத் தலைவர் ஆக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அதிமுக முக்கியப் பிரமுகர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அதில், துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் மட்டும் தேனி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அதிமுகவில் வாரிசு அரசியலால்தான் இத்தகைய பின்னடைவுக்குக் காரணம் என கட்சிக்குள் விவாதம் எழுந்து கொண்டிருக்கிறது. முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகருக்கு எதிராக கரூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை கட்சியில் விருப்ப மனு அளித்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் தம்பித்துரைக்கே வாய்ப்பளிக்கப்பட்டது. 
அந்தத் தேர்தலில் அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்தத் தொகுதியான விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் 62 ஆயிரம் வாக்குகளுக்கும் அதிகமாக தம்பித்துரையைவிட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பெற்றிருந்தார். அப்போதே தம்பித்துரையை தோற்கடிக்க அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளடி வேலை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கத் தேர்தலில் அமைச்சரின் தந்தை சின்னத்தம்பி தலைவர் பதவிக்கும், கே.ஆர்.கணேசன் துணைத் தலைவர் பதவிக்கும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கடந்த முறை எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் எஸ்.செல்லத்துரை தலைவராகவும், தற்பொழுது ஓபிஎஸ் அணியில் உள்ள நகர்மன்ற முன்னாள் தலைவர் ராஜசேகர் துணைத் தலைவராகவும் இருந்தனர். இவர்கள் மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்ய முயன்றபோது அமைச்சரின் அதிகார பலத்தால் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் திங்கள்கிழமையன்று தகவல்பலகையில் ஒட்டப்பட்டது. அதில், தலைவர் பதவிக்கு அமைச்சரின் தந்தை இரா.சின்னத்தம்பி, துணைத் தலைவருக்கு கே.ஆர்.கணேசன் ஆகியோர் மட்டுமே போட்டியிடுவதாக இருந்தது. ஏற்கனவே, 21 இயக்குனர் பதவிகளுக்கு 32 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் 21 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

அமைச்சரின் தந்தை மத்திய கூட்டுறவு சங்கத் தேர்தலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட உள்ள நிலையில் அமைச்சருக்கு எதிரான அதிமுகவினர் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இத்தகைய அதிகார
துஷ்பிரயோகம் அமைச்சரின் சொந்தக் கட்சியினரையே முகம்சுழிக்க வைத்துள்ளது. இதுகுறித்து வருகின்ற 12-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதப் பொருளாகக் கொண்டு செல்வோம் எனவும் தெரிவித்தனர். இந்த ஆட்சி எப்பொழுது கலைக்கப்படுமோ என்ற நிலையில், கிடைக்கின்ற நாட்களைப் பயன்படுத்தி முடிந்த அளவு
அதிகார துஷ்பிரயோகம் செய்வது என ஆட்சியாளர்கள் முடிவெடுத்துள்ளதையே இது காட்டுகிறது.

;