tamilnadu

img

‘காவல்துறையை பழிதீர்க்க வில்சனை கொன்றோம்’

கைதான 2 பேர் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தகவல்

குழித்துறை,ஜன.16-  கன்னியாகுமரி மாவட்டத்தில், கேரள எல்லைப்பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் ஜனவரி 8ஆம் தேதி இரவு 9.40 மணியளவில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் நான்கு இடங்களில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்களும் இருந்தன.  தமிழக காவல்துறையினர், கியூ பிரிவினர் மற்றும் கேரள காவல்துறையினர் இணைந்து கொலையாளிகளான தீவிரவாதிகளைத் தேடி வந்தனர். இதற்காக ஐஜி சண்முக ராஜேஷ்வரன் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டார். சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாடகை கார் ஓட்டுநரான இஜாஸ் பாஷா என்பவரை பெங்களூர் ராம்நகரில் கடந்த திங்கள்கிழமையன்று காவல்துறையினர் கைதுசெய்தனர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மும்பையிலிருந்து கொண்டுவந்த துப்பாக்கியை இஜாஸ் பாஷா கொடுத்தது தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின்படி, திருவனந்தபுரத்திலிருந்து வேராவல் விரைவு ரயிலில் தீவிரவாதிகள் இருவரும் பயணம் செய்வது தெரியவந்தது. இதையடுத்து, உடுப்பி ரயில் நிலையத்தில் ஜனவரி 14ஆம் தேதி தமிழக, கர்நாடக, ரயில்வே மற்றும் கியூ பிரிவு காவல்துறை ஆகியோர் தெளபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோரைக் கைதுசெய்தனர்.   இருவரும் புதனன்று தமிழக காவல்துறையினரிடம் ஒப்படை க்கப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர் அவர்கள் இருவரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று தக்கலை காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தக்கலையிலும் குழித்துறை நீதிமன்றப் பகுதியிலும்  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

விசாரணை அதிகாரியான குமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஸ்ரீநாத் தலைமையிலான தனிப்படையினர், கியூ பிரிவு மற்றும் தீவிரவாத தடுப்புப்படையினர் ஆகியோர் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, தங்களது இயக்கத்தினர் மற்றும் அல்உம்மா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகளைச் சேர்ந்த பலரையும் தேசிய புலனாய்வுத் துறை கைது செய்து வருவதால், அதற்குப் பழி தீர்க்க சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக்கொன்றோம் என்று கூறியுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.   கைதான 2 பேரும் தமிழ்நாடு நேஷனல் லீக் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்துடன்  நேரடி தொடர்பு வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. விசார ணைக்குப்பின்னர் இருவரும் தக்கலை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.  பின்னர் இருவரையும் குழித்துறை சார்பு நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிமன்ற  நீதிபதி (பொறுப்பு) ஜெயசங்கர் முன்பு ஆஜர்படுத்தினர்.

;