புலரும் செவ்வானப் பொழுது -
புலம்பெய ரும்பாதச் சுவடு -
எதிலே ரத்தம் அதிகம்?
இடுகாட்டு நெருப்பின் வெப்பம் -
ஈரமி லாஅரசின் இதயம் -
எதிலே உஷ்ணம் அதிகம்?
தங்க நாற்கரச் சாலை - உங்கள்
தங்க நாற்கரச் சாலை
நடையாய் நாங்கள்
நடக்கையில் சில கணம்
தங்க நாற்கரச் சாலை - ஓய்வாய்
தங்க நாற்கரச் சாலை
(புலம்)
வாய்க்கரி சிக்கும் வழிஇல்லை இதுதான்
வளர்ச்சிக் கான திட்டமோ?
கோரைப் பாயும் கொடுக்க மாட்டீர்;
ரத்தினக் கம்பளம் தருவீரோ?
இருபது கோடிப் பாதமும்
இந்தியச் சாலையில் யாத்திரை.
ஒவ்வொரு பாதப் புண்ணுமே
மோடிகள் பதித்த முத்திரை.
(புலம்)
தவித்த வாய்க்கு தண்ணீர்ப் பந்தல்
கேட்பது சிறுமை சிறுமையே!
வகை வகை யாக நீங்கள் போடும்
வாய்ப்பந் தல்தான் அருமையே!
தண்ட வாளத்துச் சாவு உம்
வண்ட வாளத்தைக் கூறுதே.
தொண்டை நீளம் தான் எனினும்உம்
தொண்டின் நீளமோ பூஜ்யமே!
(புலம்)
வீட்டுக்கு - எங்கள் ஊருக்கு - செல்வது
நகர்முத லாளிக்கு நட்டமோ?
மாட்டுக்கு நெல்லும் மனிதர்க்குப் புல்லும்
நாளைய உங்கள் திட்டமோ?
பாதப் புண்ணின் சிவப்புஎம்
கோபச் சிவப்பாய் கண்ணிலே..
இடம்பெயர் கின்ற நாள் வரும்!
எழுதிக்கொள் வீர் இதை நெஞ்சிலே!
(புலம்)