tamilnadu

img

இடைவிடாத புரட்சிப் பயணம்! - என்.குணசேகரன்

லெனின் 150

மனித சமூகத்தின் சரிபாதியாக உள்ள பெண்கள், முதலாளித்துவ சுரண்டலுக்கும், சமூகத்தினால்  பின்னுக்கு தள்ளப்பட்ட நிலையில் ஒடுக்குமுறைக்கும் ஆளாகிறார்கள்.முதலாளித்துவத்தின் கீழ் இரட்டைச் சுரண்டலுக்கு பெண்கள் ஆளாகிறார்கள். இந்நிலைக்கு எதிராக பெண்களை  புரட்சி இலட்சியத்திற்கு அணிதிரட்ட வேண்டுமென லெனின் தொடர்ந்து  வலியுறுத்தி வந்தார்.

ரஷ்யாவின் வரலாற்றில் பெண் போராளிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததது. புரட்சி வாழ்க்கையில் அர்ப்பணித்துக் கொண்ட லெனின் மனைவி குரூப்ஸ்கயா, அலெக்ஸாண்டரா கொலந்தாய் போன்ற பெண் போராளிகள் வரிசை நீண்டது. 

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நடந்த மகளிர் பேரணியும், அதனைத் தொடர்ந்து வெடித்த   மக்கள் போராட்டங்களும் பிப்ரவரி  புரட்சிக்கு இட்டுச் சென்றன. ரஷ்யாவின் ஜூலியன் காலண்டருக்கேற்ப  பிப்ரவரி புரட்சி என  அது அழைக்கப்படுகிறது.1917 மார்ச் 12ஆம் தேதி மன்னன் நிக்கோலஸ்’

பதவியிலிருந்து விரட்டப்பட்டார். கெரன்ஸ்கி தலைமையில் முதலாளித்துவ அரசாங்கம் பதவியேற்றது. அதனை ஆங்கிலேயே - பிரெஞ்ச் மூலதனத்தின் எடுபிடி அரசாங்கம் என்றார்  லெனின். இப்புரட்சியின் முக்கிய கதாநாயகர்கள் தொழிலாளர்கள், விவசாயிகள்தான்.  

காலம் கனியும் உரை...

வெகு வேகமாக மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் கட்சியும், உழைக்கும் வர்க்கமும் என்ன செய்ய வேண்டும் என்பதை லெனின் தொடர்ந்து வழிகாட்டினார். அவரது இரண்டு படைப்புக்கள் முக்கியமானவை. “தொலைவிலிருந்து கடிதங்கள்” “ஏப்ரல் ஆய்வுரைகள்” என்கிற இரண்டும் ரஷ்யாவின் அடுத்தகட்ட வரலாற்றுக்கான வரைபடங்கள். 

சோஷலிசத்திற்கு செல்ல  காலம்  கனியும் வரை முதலாளித்துவ அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் என்று சிலர் கூறியதை அவர் கடுமையாக எதிர்த்தார். சோஷலிசப் புரட்சியின் முதல் கட்டம் நிறைவேறியது. அடுத்து சோசலிச கட்டத்திற்கு செல்ல வேண்டும்; அதை தவிர்த்து முதலாளிகளின் அரசாங்கத்தை ஆதரித்தால்,அது,தொழிலாளி வர்க்கத்திற்கு செய்யும்  துரோகம் என்றார். அடுத்து வரும் சோஷலிச புரட்சிக்கு நாடு முழுவதும் இயங்கி வரும் உழைக்கும் வர்க்கங்களின் அமைப்புக்களான சோவியத்துக்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்ற  லெனின் கருத்து  நாடெங்கும் எதிரொலித்தது.  அவ்வாறு அமைக்கப்படும்  சோசலிச அரசாங்கமே “சமாதானம்” “உணவு”  “சுதந்திரம்” ஆகிய உழைக்கும் மக்களின் நீண்ட கால போராட்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தும் அரசாங்கமாக இருக்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.

அரசின் தன்மை குறித்து, அவர் “அரசும் புரட்சியும்” நூலில் தெளிவுபடுத்தி யிருந்தார். அரசு என்பது குறிப்பிட்ட வர்க்கங்களின் கருவி;கெரன்ஸ்கி அரசாங்கம் முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் கருவி;அமையவிருக்கும் சோசலிச அரசாங்கம் பாட்டாளி வர்க்கத்தின் கருவியாக செயல்படும் என்றும் லெனின் விளக்கினார். புரட்சிக் காலகட்டத்தில் அந்த புரிதல் உழைக்கும் மக்களுக்கு புரட்சியில் ஈடுபடும் உந்துதலை ஏற்படுத்தியது.ஜூலையில்,பெட்ரோகிராட் நகரில் 5 இலட்சம் மக்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு, பல்லாயிரம் பேர் பலியானார்கள். 

லெனின் “ஏப்ரல் ஆய்வுரை”களில் வெளியிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் காலம் வந்துவிட்டதை இந்த நிகழ்வுகள் உறுதிப்படுத்தின. புரட்சி அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிடவேண்டும் என்பதும், தொழிலாளி-விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் கூட்டணி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதும் அனைவரும் ஏற்கும் திட்டங்களாக மாறின. இதற்கு லெனின்  மூன்று வாரங்கள் கருத்துப் போராட்டம் நடத்தி அனைவரையும் இந்தக் கடமைகளில் ஈடுபட வைத்தார். இதனால்,1917 நவம்பர் 7,அன்று சோசலிசப் புரட்சி வெற்றிபெற்று, லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. 

கடுமையான சூழலில் திறமையாக செயல்பட்டு...

அனைத்து ரஷ்ய சோவியத்துக்களின் மாநாட்டில் புரட்சிகர அரசாங்கம் பாட்டாளி வர்க்கத் தலைமையில் அமைக்கப்பட்டது என லெனின் அறிவித்தார். போர்க்கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைத்து நாட்டில் சமாதானம் நிலவும் என்றும், ரஷ்யாவின் நிலங்கள், அதில் பாடுபடுகிற விவசாயிக்கு சொந்தம் என்றும் முக்கிய தீர்மானமாங்களாக நிறைவேற்றப்பட்டன.  எனினும், புதிய அரசை பாதுகாப்பதற்கு பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. அதனை கவிழ்த்திட ஏகாதிபத்திய நாடுகள் ரஷ்யாவை சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு லெனினது அரசு உறுதியாக செயல்பட்டது.

போரினால் ஏற்பட்ட கடும் நெருக்கடி, கடன்சுமை, கடுமையான பஞ்சம் பொருளாதார நெருக்கடிகள் ஆகியவற்றால் நாடு திவாலாகியிருந்தது.இந்நிலையில்தான், அரசாங்கத்தினை வழிநடத்த வேண்டிய நிலை இருந்தது. எனினும், ஒரு குறுகிய காலத்தில் மக்கள் வாழ்வில் ஓரளவு முன்னேற்றம் காணும் வகையில் சோவியத் அரசு செயல்பட்டது.

ரஷ்யா பின்தங்கிய நாடாக இருந்ததால், முழுமையான சோசலிசப் பொருளாதாரம் உடனடியாக சாத்தியமில்லை. மாறாக,சமூக உற்பத்தியின் பலன்கள் உழைப்பவர்க்கு கிடைத்திடச் செய்கிற  வகையிலான பொருளாதார  அமைப்பை லெனின் அரசு அமைத்தது. உற்பத்தி, விநியோகம் ஆகியவை தொழி லாளி வர்க்க அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதன் வழியாக படிப்படியாக சோசலிசத்தை நோக்கி செல்ல முடியும் என்று லெனின் வழிகாட்டினார். 

லெனின் மட்டுமல்லாது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையும், மத்தியக்குழுவும், கடுமையான சூழலை திறமையாக கையாண்டது. லெனின் கட்சியின் மத்தியகுழு பற்றி குறிப்பிடுகிறபோது மகத்தான சிந்தனைகளின் சங்கமம் என்று குறிப்பிட்டார். ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் சிறந்த ஆராய்ச்சியாளர்கள் தரத்துடன் மத்திய குழு விவாதித்து முடிவுகளை எடுத்தது.பேராசிரியர்களின் கருத்தரங்கமாக மத்திய குழு கூட்டம் நடைபெறும் என்று லெனின் பெருமிதத்துடன்  தெரிவித்தார். இதனால்தான் ஒரு பின்தங்கிய நாட்டை  மகத்தான வலிமை மிக்கநாடாக குறுகிய காலத்தில் உருவாக்க முடிந்தது. 

கடினமான பணிகளின் விளைவாக 1921-ஆம் ஆண்டு இறுதியிலும் 1922-துவக்கத்திலும்,லெனின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த நிலையிலும்கூட, பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு ஒரு கொள்கை மாற்றத்தை கொண்டு வந்தார்.”புதிய பொருளாதாரக் கொள்கை”என்ற அந்த கொள்கை கூட்டுறவு மற்றும் தனியார் முன்முயற்சிகளை சிறிய அளவில் துவக்கி வைத்தது.பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டை அரசு கையில் வைத்துக்கொண்டே,இந்த கொள்கை கொண்டுவரப்பட்டது.இதனால்,1930 ஆண்டுகளுக்குள், விவசாய,தொழில் வளர்ச்சியில் இருந்த தேக்கநிலை முறியடிக்கப்பட்டு,வளர்ச்சி நோக்கி நாடு சென்றது.

தேசிய இனங்கள் 

பல தேசிய இனங்கள் கொண்ட நாடு ரஷ்யா. ஒவ்வொரு தேசிய இனத்தின் தனித்தன்மைகள் அனைத்தும் சிதைக்கப்பட்டு, ரஷ்ய இனத்தின் மேலாதிக்கம் ஜாரட்சி காலத்தில் இருந்தது.தேசிய இனங்களின் சிறைக்கூடமாக ரஷ்யா இருந்தது. இப்பிரச்சனையை லெனின் மிகத் திறமையாக  கையாண்டார்.தேசிய இனங்களின் பண்பாட்டு வளர்ச்சி, பாதுகாப்புக்கான திட்டத்தை முன்வைத்தார்.

அத்துடன் அனைத்து தேசிய இனங்களின் ஒற்றுமை முழக்கத்தையும் இணைத்தார். புரட்சிக்காக ,தேசிய இனங்கள் சேர்ந்து நிற்கும் ஒரு சூழலை ஏற்படுத்தி னார். அனைத்து  தேசிய இனங்களுக்கும்  முழுமையான சம உரிமைகள்;

தங்களை தாங்களே ஆள்வதற்கான  சுயாட்சி உரிமை; அனைத்து தேசிய இனங்களின் தொழிலாளர் ஒற்றுமை ஆகிய லெனின் முழக்கங்கள் மக்கள் ஆதரவைப் பெற்றன.  மற்றொன்றையும் அவர் தெளிவுபடுத்தினார்.தேசிய பெருமிதம் நமக்கு அந்நியமானதா என்ற கேள்வி எழுப்பி,” நிச்சயமாக இல்லை:நமது மொழியையும் தேசத்தையும் நாம் நேசிக்கிறோம்; அதனால்தான்  அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற நாம் போராடுகிறோம்” என்றார். ஆழமான மத நம்பிக்கை கொண்ட ரஷ்ய மக்கள் அனைவரும் புரட்சிக்கும் புரட்சிகர அரசுக்கும் ஆதரவாக நிற்கும் வகையிலான மதம் குறித்த கொள்கையையும் அவர் உருவாக்கினார். லெனின் தலைமையிலான அரசு அனைத்து மதப்பிரிவுகளுக்கும் வழிபாட்டு உரிமையை உறுதி செய்தது.

புதிய உலகு...

உலகப் பாட்டாளி வர்க்க புரட்சி  பற்றிய நம்பிக்கை லெனினிடம் உறுதியாக இருந்தது.1919-ல் அவர் அமைத்த கம்யூனிஸ்ட் அகிலம் இந்த பாதையை செப்பனிட முயற்சித்தது.கம்யூனிஸ்ட் அகிலம் இந்தியா உள்ளிட்ட காலனி நாடுகளின் விடுதலைக்கு பல திட்டங்களை முன்வைத்தது. உலகப் பாட்டாளி வர்க்க  அதிகாரம் என்ற அகிலத்தின் இலட்சியம் நிறைவேறவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்தை வீழ்த்தி அதிகாரத்தைக் கைப்பற்றி, சமத்துவ உலகம் படைக்க வேண்டுமென்பது இந்த சகாப்தத்தின் தேவையாக உள்ளது. 

இன்னமும் ஏகாதிபத்தியவாதிகள் அவர்களுக்கான உலகை நிலை நிறுத்தவே முயல்கின்றனர். அமெரிக்காவில் நிக்சன் ஜனாதிபதியாக இருந்த   போது வெளியுறவு அமைச்சராக இருந்த ஹென்றி கிஸ்ஸிங்கர் “கொரோனா விற்கு பிந்தைய  உலகம் புதிய உலகமாக இருக்கும்” என்று தற்போது கூறி யிருக்கிறார். அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியம் மீண்டும் உறுதியாக ஆளுகை செலுத்தும் உலகை உருவாக்க அவர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

உலகில் பல  இடங்களில் போர் நிகழ்த்தி மக்களை கொன்று குவிக்கிற வேலையை ஹென்றி கிஸ்ஸிங்கர் தலைமையில் அமெரிக்கா செய்தது. அமெரிக்காவின் மேலாதிக்கம் என்கிற கொள்கை சார்ந்த உலகை படைப்பதில் அன்று கிஸ்ஸிங்கர் அரசுக் கவிழ்ப்பு உள்ளிட்டு அனைத்து வேலைகளையும் செய்தார்.

ஏகாதிபத்தியத்தை முட்டுக் கொடுத்து நிறுத்த ஒரு புதிய உலகம் தேவை என்பதுதான் அவரது எண்ணம்.

உண்மையில் புதிய உலகு தேவையே.ஆனால் அது மூலதனப் பேரரசுகள் தலைமை தாங்குவதாக அமையக்கூடாது.உலகப் பாட்டாளி வர்க்க அதிகாரம் என்கிற கடமையை லெனின் துவக்கிவைத்தார்.இன்னும்  முற்றுப்பெறாத அந்தக் கடமையை நோக்கி முன்னேற வேண்டிய அவசியம் உள்ளது.  கொரோனோவிற்கு பிந்தைய உலகு லெனின் கனவு கண்ட புதிய உலகமாக இருப்பதுதான்,நல்லது. அதுதான்,நோயினாலும்,பொருளாதார சிக்கல்களாலும் வாழ்விழந்து  தவிக்கும் கோடானுகோடி மக்களுக்கான உலகமாக இருக்கும்.

1923-ல் லெனினுக்கு,மூன்றாவது பக்கவாத தாக்குதல் ஏற்பட்டு அவரது உடல் செயல்படாமல் ஆனது. 1924 ஜனவரி 21ஆம் தேதி அந்த மாமனிதன் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

சோவியத் தந்த பாடங்கள்

அவர் அமைத்த சோவியத் அரசு பின்னாளில் தகர்ந்துவிட்டது. அதனால் லெனினியம் காலாவதியாகிவிட்டது,பொருத்தமற்றது என்றெல்லாம் பேசப்படுகிறது சோவியத் அரசு வீழ்ந்தது,தனியான விவாதம் தேவைப்படுகிற ஒரு விஷயம். ஆனால் லெனினியம் மனிதனை மனிதன் சுரண்டுகிற சமூக அமைப்பை வீழ்த்தி,ஒரு புதிய சமூக அமைப்பைக்  கட்டுவதற்கு வழிகாட்டும் தத்துவம்.ரஷ்யாவில் லெனின் மேற்கொண்ட முயற்சி நீடிக்கவில்லை என்பதை விட ஒரு மாபெரும் பரிசோதனை வரலாற்றில் நடந்ததுதான் முக்கியம்.அதில் பல்லாயிரம் பாடங்கள் கிடைத்திருக்கின்றன. லெனின் வாழ்க்கை பாடமாக அமைந்து இருக்கிறது;புதிய சமூகத்தை அமைக்கும்

போராட்டத்தில் அந்தப் பாடங்கள் வழிகாட்டும். 

நிச்சயமாக,லெனின் சிந்தனைகளாக,எழுத்துக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். புதிய சவால்களை சந்திக்க அவர் லெனினியம் ஆக வழிகாட்டுகிறார். அவர் தலைமையேற்று நடத்திய ரஷ்ய புரட்சி உலக சோசலிச சகாப்தத்தின் பயணத்தை கடந்த நூற்றாண்டில் துவக்கியது அந்தப் பயணம் தொடரும்; அது இந்தியாவிலேயேயும் வெற்றியை எட்டும்!

 






 

;