tamilnadu

img

பிடுங்கிக் கொடுப்பதில் பிடிவாதம்! - அ.அறிவுக்கடல்

உலகமே கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கவனமாக இருக்கும்வேளையில், மக்களிடமிருந்து பிடுங்கி முதலாளிகளுக்குக் கொடுப்பதில் கவனமாக உள்ளது மோடி அரசு. கார்ப்பரேட்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாய் சலுகைகள் வழங்கப்பட்டது போதாதென்று பல்லாயிரக்கணக்கான கோடிகள் கடன் தள்ளுபடியும் ‘சிறப்பாக’ செய்யப்படுகிறது. சுங்கச் சாவடிகளைக் கடப்பவை அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமே என்ற நிலையிலும் அவற்றுக்கு நுழைவுக் கட்டணம்(டோல்) வசூலிப்பதன்மூலம் விலை உயரும். பாதிப்பு எளிய மக்களுக்கும், பலன் கார்ப்பரேட்டுகளுக்கும்! அதாவது, டோல் மூலமும் எளிய மக்களிடமிருந்து பிடுங்கி, கார்ப்பரேட்களுக்கு வழங்கப்படுகிறது. 

உலகமெங்கும் கச்சா எண்ணெய் விலை வீழ்ந்து கிடக்கையில், இங்கு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுகிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்கினால், ரூ.7500க்குக் குறையாமல் ‘லாபம்’ பார்க்கிறது அரசு(பார்க்க பட்டியல்). 

அவ்வளவையும், எளிய மக்களிடமிருந்து பறித்து, கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகையாக வழங்குகிறது.

மிகப்பெரிய செல்வந்தர்களிடமிருந்து ‘சூப்பர் ரிச்’ வரியாக 4 சதவீதம் வசூலிக்கலாம் என்று ஆலோசனை சொன்னால், ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் ஈட்டுபவர்களுக்கு 4 சதவீதம் வரி என்று ‘பாட்டுக்குப் பாட்டு’ பாடுகிறது மோடி அரசு. இந்திய ரூபாய்க்கு இன்றைக்கிருக்கிற மதிப்பில், மூத்த அரசு ஊழியர்களே ரூ.10 லட்சத்துக்குமேல் ஈட்டுகிறார்கள் என்றாலும், அவர்களே வீட்டுக் கடனுக்கும், பிள்ளைகளின் கல்விச் செலவுக்கும் போக, பற்றாக்குறையில்தான் வாழ்கிறார்கள். அவர்களையும், நாளொன்றுக்குச் சில கோடிகளை ஊதியமாகவும், அதைவிட அதிகமான தொகையை லாபமாகவும் ஈட்டும் அம்பானி போன்றவர்களையும் ஒன்று என்கிறது இந்தக் கேடுகெட்ட அரசு.

நவீன அறிவியல் முன்னேற்றங்கள் வந்தபின், இவ்வளவு மோசமான ஒரு நெருக்கடியை உலகம் சந்தித்ததில்லை எனுமளவுக்கு, கொரோனா ஆட்டிவைத்துக்கொண்டிருக்கும்போது, மக்களைக் காக்க, ஊரடங்கின்போது எளிய மக்கள் பட்டினியால் சாகாமலிருக்க எந்தத் துரும்பையும் மோடி அரசு அசைக்கவில்லை என்பதுதான் உண்மை.

கடுமையான விமர்சனங்களுக்குப்பின், கடன் தவணைகள் ஒத்திவைப்பு என்று ரிசர்வ் வங்கியும், வேறு சில அறிவிப்புகளை நிதியமைச்சரும் வெளியிட்டனர். அந்தக் காலத்தில் பூ ஓரணா, புஷ்பம் ஓரணா, சூடம் ஓரணா, கற்பூரம் ஓரணா என்று கணக்கெழுதியதாகச் சொல்வார்கள். அதைப் போலவே, மத்திய அரசின் அறிவிப்புகள் பட்ஜெட் அறிவிப்பும் அதுவே, கொரோனா உதவியும் அதுவே என்று வாழைப்பழக் கதையாகவே உள்ளன. 

உதாரணமாக, கடன் தவணைகளை 3 மாதங்களுக்கு ஒத்தி வைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. ஆனால், அந்த 3 மாதங்களுக்கு கடன் திருப்பிச் செலுத்தும் காலம் நீட்டிக்கப்படும் என்றும், நீட்டிக்கப்படும் காலத்திற்குரிய வட்டி வசூலிக்கப்படும் என்றும் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது அந்த அறிவிப்பு.

ஏற்கெனவே, செலுத்தாத வட்டிக்கு ஜிஎஸ்டி வசூலிக்கிற அரசு இது. அதாவது, அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனைத் தளங்களில், நோ காஸ்ட் இஎம்ஐ என்ற வசதி அளிக்கப்படுகிறது அல்லவா? அதில், அந்த வட்டித் தொகையை தள்ளுபடியாக அந்த நிறுவனங்கள் நம் பில்லில் காட்டுவதைப் பலரும் கவனித்திருப்போம். ஆனால், கடைசியாக, ‘வட்டி தள்ளுபடியாகக் கழிக்கப்பட்டு விட்டது, அதனால் மாதந்தோறும் அந்த வட்டியும், அதற்கான ஜிஎஸ்டியும் வங்கியால் வசூலிக்கப்படும்’  என்று குறிப்பிடப்பட்டிருப்பதை நம்மில் பலரும் கவனித்திருக்க மாட்டோம் அதாவது, வட்டி செலுத்தாவிட்டாலும், அதற்குரிய ஜிஎஸ்டி வேண்டும் என்று வசூலிக்கிற அரசு இது. அப்படிப்பட்ட அரசு,  மக்கள் சிரமத்திற்காக எதையுமே இழக்கத் தயாராக இல்லை என்பதன் வெளிப்பாடே ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு. இந்த 3 மாத வட்டிக்கும் ஜிஎஸ்டி உண்டு என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை!

அதைப் போலவே விவசாயிகளுக்கு ரூ.2000 அளிக்கப்படும் என்ற அறிவிப்பும்கூட, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, ஆண்டுக்கு ரூ.6000 என்பதன் முதல் தவணைதானே தவிர, கொரோனா ஊரடங்கு நடவடிக்கையால் ஏற்பட்ட இழப்பினை ஈடுகட்ட அல்ல. அதையும்தாண்டி, அந்தத் தொகையைப் பெற விவசாயி என்றும், 5 ஏக்கருக்குக் குறைவான நிலமே உள்ளது என்றும் நிரூபிக்க வேண்டும். இந்த நடைமுறைகள் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை என்பதால், அதாவது, யாருக்குத் தரவேண்டும் என்ற பட்டியலே இன்னும் தயாராகவில்லை என்பதால், இந்த ஊரடங்குக் காலத்தில் இது யாருக்கும் கிடைக்காது. கிடைத்தாலும், அடையாளப் பூர்வமாக (ஃபோட்டோ எடுப்பதற்காக என்று படிக்கவும்!) மிகச் சிலருக்கு வழங்கப்படும்.

அடுத்து, நூறு நாள் வேலைத் திட்டம் என்று பொதுவாக அழைக்கப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஊதியத்தில் ரூ.20 உயர்வு. இதுவும் ஆண்டுதோறும் செய்யப்பட வேண்டிய உயர்வுதானே தவிர, கொரோனாவால் பாதித்த மக்களுக்கான சிறப்பு உதவியெல்லாம் இல்லை என்பது ஒருபுறம். இந்தக் காலகட்டத்தில் இந்த வேலையே நடைபெறாது என்பதால், இதுவும் ஊரடங்கு முடிவுக்கு வரும்வரை கிடைக்காது என்பது மறுபுறம்.

அடுத்து, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் தொகை உயர்த்தப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே நடைமுறையிலுள்ள கடனை முடிக்கும்போதுதான், சுய உதவிக் குழுக்களுக்கு புதிய கடன் வழங்கப்படும் என்பதால் இது உடனடியாகக் கிடைக்காது. அது மட்டுமின்றி, அவ்வாறு கிடைத்தாலும், அதற்கும் வட்டி உட்பட அவர்களே செலுத்தப் போகிறார்கள் என்பதால் இது அரசின் உதவி என்பது உண்மையல்ல!

திரட்டப்பட்ட தொழில்களில் உள்ள தொழிலாளர்களுக்கு 3 மாத வருங்கால வைப்பு நிதியின் தொழிலாளர் பங்கு, முதலாளி பங்கு ஆகிய இரண்டையும் அரசே செலுத்திவிடும் என்பது மற்றொரு  அறிவிப்பு. ஏராளமான சிறிய தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களும் இபிஎஃப் உறுப்பினர்களாக உள்ளனர். பல சிறிய நிறுவனங்கள், இந்த ஊரடங்கால், அவர்களுக்கு ஊதியமே அளிக்க முடியாத அளவுக்கு இழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு ஊதியம் கட்டாயம் அளிக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தினால்கூட, ஊரடங்கெல்லாம் முடிந்து, தொழில் நடக்கத் தொடங்கியபின்தான் அவர்களால் தர முடியும். அப்படியான நிலையில், வைப்பு நிதிக் கணக்கில் செலுத்துவது என்பது, ஊரடங்குக் காலத்தில் அவர்களது தேவைகளுக்கு எவ்விதத்திலும் உதவாது.

மூன்று மாத ஊதியம் என்ற எல்லைக்குட்பட்டு, இபிஎஃப்-பின் 75 சதவீதம் திருப்பிச் செலுத்தும் அவசியமற்ற வகையில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, உங்கள் சேமிப்பை எடுத்து நீங்கள் செலவு செய்துகொள்ளுங்கள், அரசு உங்களுக்கு எதுவும் செய்யாது என்பதை மறைமுகமாகச் சொல்லியிருக்கிறது மத்திய அரசு.

இப்போதைய உடனடித் தேவை, செய்ததாகக் காட்டிக்கொள்வது அல்ல. செய்வது! கேரளா போன்று மாநில அரசுகள்தான் அதைச் செய்துகொண்டிருக்கின்றன. மோடி வழக்கமாகப் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்பதுபோலவே, இப்போதும், காட்டிக்கொள்வதை மட்டுமே செய்துகொண்டிருக்கிறார்.

எளிய மக்களும், தொழிலாளர்களும் சேர்ந்துதான் இந்தியாவின் ஜிடிபியை உருவாக்குகிறார்கள். அவர்கள் இல்லாமற்போனால் இந்தியப் பொருளாதாரமே ஆட்டம் காணும் என்பது ஒருபுறம் என்றால், மறுபுறம் நேரடியாகவே பொருளாதாரத்தை மிகமோசமாகச் சரியச் செய்திருக்கிற கொரோனா தொற்றின்போதுகூட, மோடி அரசு எளிய மக்களிடம் பறித்து முதலாளிகளிடம் கொடுப்பதைத் தொடர்வது என்பது, இந்தியாவின் பொருளாதாரத்திற்கு நாமே தோண்டிக்கொள்கிற குழியாகவே அமையும்!

 

;