tamilnadu

img

நீதியை நிலைநாட்ட நெடிய போராட்டம் - சி.ஸ்ரீராமுலு

“பணியிடத்தில் பாலியல் வன்முறை என்பது மனித உரிமை மீறல் நடவடிக்கையாகும். இதனை உச்ச நீதிமன்றம் 1997 ஆம் ஆண்டில் ‘விசாகா’ வழக்கில் ஏற்றுக்கொண்டது. இதனடிப்படையில்தான், சட்டம் இயற்றும் சூழல் உருவாகியது. பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான விசாகா என்னும் பெண் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த நீதிமன்றம் பணியிடங்க ளில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள், வன்முறைகள், சீண்டல்களை தடுக்க வேண்டி பெண்கள் பணி புரியும் அனைத்து நிறுவனங்களிலும் விசாகா எனும் குழு அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதனை ஏற்று  பணி யிடத்தில் பாலியல் வன்முறை தடுப்பு, பாதுகாப்பு, குறை தீர்ப்பு சட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2013 ஆம் ஆண்டில் நிறைவேற்றியது.

துன்பப்படும் மக்கள் அதிகாரிகளிடம் முறையிடுவார்கள். அந்த அதிகாரியே தவறு செய்யும்போது அந்த மக்கள் யாரிடம் முறையிட முடியும்? அப்படி ஒரு சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறி இருக்கிறது. ஊழியர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய ஒரு துறையின் உயர் அதிகாரி அத்துமீறலுக்கு ‘கடிவாளம்’ போட்ட ஒரு சம்பவம் குறித்து சற்று அலசுவோம்:-

குமுறும் ஊழியர்கள்...

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது புதுச்சேரி யூனியன் பிரதேசம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அர சாங்கம் ஆட்சியில் இருந்தாலும் மத்திய அரசின் ஆளுமைக் குட்பட்டதாகும். புதுவை அரசின் கால்நடை வளர்ச்சி மற்றும் நலத் துறையின் இணை இயக்குனராக பணியாற்றி வந்த வர் மருத்துவர் பத்மநாபன். இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டில் இயக்குனர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது. உயர் அதிகாரி என்பதால் ‘வல்லான் வகுத்ததே சட்டம்’ என்ற மமதையுடன் செயல்பட்டுள்ளார். உடலை தொட முயற்சித்தல், பாலியல் இச்சையை நிறை வேற்ற வற்புறுத்துவது, பாலியலை தூண்டும் விதமாக பேசு வது, உடல் அசைவுகளை வெளிப்படுத்துவது என இந்த அதிகாரி கொடுத்த தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல. இவரால் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்கள் பலர். 

“பந்தாடப்பட்ட மருத்துவர்”

ஒரு பெண் மருத்துவரின் கணவர் கால்நடைத் துறை யில் மருத்துவராக மும்பையில் பணியாற்றியதால், மகன், மகள், அம்மா ஆகியோருடன் புதுவையில் வசித்து வந்தார். அவருக்கு கால்நடை துறையில் பணி கிடைத்திருக்கிறது. அந்தத் துறையில் உயர் அதிகாரியான மருத்துவர் பத்மநா பன் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கொடுத்த பாலியல் தொல்லைகள் சொல்லிமாளாது. எப்படியும் தனது வலைக்குள் சிக்கவைக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சித்திருக்கிறார். அந்தப் பெண் மருத்துவர் எச்சரித்ததால் எரிச்சல் அடைந்த பத்மநாபன், பெண் மருத்துவரை புதுச்சேரி யில் இருந்து சுமார் 630 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மாகேவிற்கு (கேரளாவில் உள்ளது) இரு முறையும், காரைக் காலிற்கு இரண்டு முறையும், புதுச்சேரி, பாகூர், தட்டாஞ்சாவடி என மாறி, மாறி பணியிடை மாற்றம் செய்து பந்தாடியிருக்கி றார்.  மகன் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் அத்தனை இடங்களுக்கும் சென்று மிக சிறப்பாக பணியாற்றியிருக்கிறார் அந்த பெண் மருத்துவர்.

தன்னிடம் தேவைக்கு மேலான பணமும், வானளாவிய அதிகாரமும் இருக்கிறது என்கிற  போதை, சகோதரர் ஆறு முகம் காவல்துறை எஸ்.பி.,யாக இருக்கிறார் என்பதாலும் ஆணவமாக நடந்து கொள்கிறார். அவரது பாலியல் தொல்லை குறித்து அந்தத் துறை யின் இணை இயக்குநரிடம் புகார் செய்தபோது அதை வாங்க மறுத்த அந்த அதிகாரி,  பத்மநாபனை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.”உங்களுக்கு ஏன் இந்த வீண் வேலை” என இலவச ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார்.

ஆப்பு அசைத்த குரங்காய்...

“பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் பொங்கி எழுந்த அந்தப் பெண் மருத்துவர் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி யிடம் முறையீடு செய்திருக்கிறார். இதனையடுத்து மாவட்ட உள்ளூர் புகார் குழு (டிஎல்சிசி)  விசாரணைக்கு உத்தர விடப்பட்டது. அந்தக் குழுவின் தலைவர் வித்யாராம் தலைமையில் விசாரணை துவங்கியது. நேரில் ஆஜராகிய பெண் மருத்து வர்,  பத்மநாபன் மீதான அனைத்து குற்றங்களுக்கும் ஆதா ரத்துடன் விளக்கம் அளித்திருக்கிறார். சிலர் சாட்சியம் அளித்த தோடு தாங்களும் இதுபோன்று பாதித்ததாக பத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பத்மநாபன் மீது புகார் செய்துள்ளனர்.

பின்னர், பத்மநாபனை நேரில் ஆஜராகி விளக்கம் தருமாறு அந்த குழு கூறியிருக்கிறது.வசமாக சிக்கிக் கொண்ட தால் செய்வதறியாமல் ஆப்பு அசைத்த குரங்காய் திகைத்த தோடு குற்றவாளி கூண்டில் ஏற்றப்படுவதை தடுத்து நிறுத்த சட்டத்தின் ஓட்டைகளை மூலை முடுக்கெல்லாம் தேடித்தேடி ‘இந்த புகார் சம்பவங்கள் அனைத்தும் விசாகா குழு அமைப்ப தற்கு முன்பு கூறப்பட்டிருப்பதால் உள்ளூர் மாவட்ட புகார்குழு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று  சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஓடியிருக்கிறார் பத்மநா பன். இதை விசாரித்த ஒரு நபர் அமர்வு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் புகார் குழு விசாரணைக்கு 24 ஆம் தேதி தடை விதித்தது.  கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் மருத்துவரை வழிமறித்த ஒரு கும்பல் உயரதிகாரி பத்மநாபன் மீதான புகாரை திரும்பப் பெற வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்துள் ளது. மும்பையிலிருந்து தமிழ்நாட்டிற்கு மாறுதலாகிய கண வரும் துறை ரீதியாக அவரது அதிகாரிகள் மூலம் மிரட்டப் பட்டிருக்கிறார். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்த கதையாக பத்மநாபனின் அடியாட்கள் வீட்டிற்கே வந்து மிரட்டி இருக்கிறார் கள்.  இந்த மிரட்டல் சம்பவங்கள் குறித்து மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் புகார் செய்தபோது தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் பாதுகாப்பு தேவை எனில் சிசிடிவி கேமரா பொருத்திக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர்.  

இதற்கிடையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம்,  அந்தப் பெண் மருத்துவர் புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டதாக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பி இருக்கிறார்கள்.  அந்த அதிகாரியின் இப்படிப்பட்ட மிரட்டல், சதி வேலை களையும் அம்பலப்படுத்தினார். மேலும் ஆத்திரமடைந்த அந்த அதிகாரி மாவட்ட உள்ளூர் புகார் குழுவை கலைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் இரண்டாவதாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

தடைகள் தகர்ப்பு...

எதற்கும் அஞ்சாத அந்த பெண் மருத்துவர் குடும்பத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆதரவு கரம் கொடுத்தது. இந்த சம்பவத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி கால்நடைத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையினர் போராட்டம் நடத்திய மாதர் சங்கத்தினர் மீது உண்மைக்கு மாறாக வழக்கு தொடுத்திருக்கின்றனர். உயர் அதிகாரி பத்மநாபனின் இரண்டு வழக்குகளின் இறுதி விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்தி பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. புதுவை அரசு சார்பிலும் மாவட்ட உள்ளூர் புகார் குழு சார்பாகவும் வழக்கறி ஞர் ஸ்டாலின் அபிமன்யு ஆஜராகி வாதாடினார். பாதிக்கப் பட்ட பெண் மருத்துவருக்காக வழக்கறிஞர் உதயகுமார் ஆஜ ராகினார்.

முதலில் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்த உயரதி காரி பத்மநாபனின் வழக்கறிஞர்,  வேண்டுமென்றே திட்டமிட்டு புகார் சுமத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்ததோடு சட்டத்தின் ஓட்டை, உடைசல், சந்து பொந்துகள் அனைத்திலும் புகுந்து பத்மநாபனை தப்பிக்க வைக்க  முயற்சித்திருக்கிறார்.

அவரது வாதங்களை தவிடுபொடியாக்கிய எதிர்த்தரப்பு வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு, “ மருத்துவர் பத்மநா பன் உண்மையில் குற்றமற்றவர் என்றால் அவர் மாவட்ட உள்ளூர் புகார் குழு விசாரணைக்கு ஆஜராகாமல் ஒளிந்து கொண்டது ஏன்? அவர் அந்தக் குழுவிடம் சென்று தனது வாதங்களை முன்வைத்து தன்னை நிரபராதி என்று நிரூ பிக்க தவறியது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விக்கணை கள் மூலம் திணற அடித்திருக்கிறார். ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவம் என்று கூறப்படு வது உண்மையில்லை கால தாமதமும் ஏற்படவில்லை. விசாகா குழு விசாரணைக்குப் பிறகு மத்திய அரசால் சட்டம் கொண்டுவரப்பட்ட  2016 ஆம் ஆண்டுக்கு முன்பும் பின்பும் பணியிடத்தில் தனக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மருத்துவருக்கு எப்படியெல்லாம் பாலியல் தொல்லைகள் கொடுத்தார் என்பதை பட்டியலிட்டு ஆடியோ, வீடியோ பதிவு ஆதாரங்களையும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு, பெண் மருத்துவரின் வழக்கறிஞர் உதயகுமார் இருவரும் நீதிபதியிடம் சமர்ப்பித்தனர்.

சம்மட்டி அடி!

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் உன்னிப்பாக கவனித்த நீதிபதி பார்த்திபன், வேண்டுமென்றே குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்ற பத்மநாபன் தரப்பின் குற்றச் சாட்டை முழுமையாக நிராகரித்தார். புதுவை அரசின் கால்நடைத்துறையில் விசாகா குழு அமைக்கப்படவில்லை என்பதால் அதற்கு முந்தைய புகார்க ளும் இதில் அடங்கியிருப்பதால் மாவட்ட உள்ளூர் புகார் குழு சட்டத்துக்குட்பட்டுதான் அமைக்கப்பட்டுள்ளது, அதை கலைக்க வேண்டியதில்லை என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

அதேபோல், தனது கீழ் பணிபுரியும் ஊழியர்கள் அதிகாரி கள்மீது கொடுத்த புகார் மீதான விசாரணையில் உண்மை இல்லை என்றால் மாவட்ட உள்ளூர் புகார் குழு முன்பு ஆஜ ராகாமல் தப்பித்துக் கொள்ள நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்ததை அனுமதிக்க முடியாது என்றும் ‘சம்மட்டி அடி’ கொடுத்தார். இந்த உத்தரவை எதிர்த்து பத்மநாபன் இரு அமர்வு கொண்ட நீதிபதிகள் முன்பு மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டில் எந்த முகாந்திரமும் இல்லாத கார ணத்தால் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வும் பத்மநாபனின் முதல் வழக்கு விசாரணைக்கு வந்த அன்றைய தினமே, இது விசாரணைக்கு தகுதியற்றது என்றும் இதில் விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்றும் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

நீதி வென்றது

பாலியல் ரீதியான தொல்லை, துன்புறுத்தல் போன்ற மோசமான குற்றவியல் வழக்கின் விசாரணை உயர்நீதி மன்றத்தின் இடைக்கால உத்தரவால் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மாவட்ட உள்ளூர் புகார் குழு விசாரணை தடைபட்ட நிலையில் உள்ளது என்று எடுத்துரைத்த வழக்கறிஞர் ஸ்டாலின் அபிமன்யு வாதத்தை முழுமையாக ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை மிகத் துரித மாக அதிகபட்சம் மூன்று மாத காலத்துக்குள் முடிக்கவேண்டும் என்றும், பத்மநாபன் தரப்பில் பலவீனமான ஆட்சேபணை களுடன் இந்த நீதிமன்றத்தில் நேரடியாக  தாக்கல் செய்யப் பட்டதால் மேல்முறையீடு செய்ய எந்த முகாந்திரமும் கிடை யாது என்றும் பத்மநாபன் தரப்பினரின் இரண்டு மனுக்களை யும் நிராகரித்தார்.  தற்போது இந்த விசாரணையில் அதிகாரி யாக ஓய்வு பெற்ற நீதிபதி மார்கரெட் நியமிக்கப்பட்டிருப்பதோடு மாவட்ட உள்ளூர் புகார் குழு விசாரணைக்கு பத்மநாபன் கட்டுப்பட வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி பார்த்தி பன் உறுதிபட தெரிவித்துள்ளார். 

நீதிக்கான போராட்டம் தொடர்கிறது.





 

;