tamilnadu

img

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை உருவாக்குக.... தமிழக அரசுக்கு அறிவியல் இயக்க சமம் குழு வேண்டுகோள்....

சென்னை:
பெண் குழந்தைகளின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை வடிவமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஆண் பெண் சமத்துவத்துக்கான மாநில சமம் உப குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்துஅக்குழுவின் சார்பில் வெளியிடப் பட்டுள்ள அறிக்கை வருமாறு:

சென்னை, பத்ம சேஷாத்திரி பால பவன் பள்ளியில், இணைய வழி வகுப்புகள் நடந்த போது, ஓர் ஆசிரியர் தொடர்ச்சியாக மேற்கொண்ட பல்வேறு வகையானபாலியல் சீண்டல்கள் மற்றும் வக்கிரங்களை குழந்தைகள் மீதான கடுமையான   பாலியல் தாக்குதல் என்றே கொள்ள வேண்டும். இச்சம்பவத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின், மாநில சமம் உபகுழு  வன்மையாக  கண்டிக்கிறது.  பத்ம சேஷாத்ரி பள்ளியில் முன்பு இயங்கி வந்த பாலர் பள்ளி  நிலம் அரசுக்கு சொந்தமானது.  

அரசு நோக்கத்திற்காக இந்த நிலம் பயன்படுத்தப்பட வில்லை. எனவே அதனை மீண்டும் அரசே எடுத்துக் கொள்ள வேண்டும்.  கட்டிடங்கள் சென்னை மாநகராட்சி அனுமதி இன்றி கட்டப்பட்டது. அதன் மேல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றச் சாட்டுகள் வலுவாக எழுந்துள்ளது.பள்ளியில் படிக்கும்  பெண் குழந்தைகள் மீது, ஏவப்படும் இத்தகைய பாலியல் சீண்டல் மற்றும் பாலியல்துன்புறுத்தல் கஸ்டடியில் நடந்த பாலியல் குற்றமாகவே கருதப்படவேண்டும்.  இது தீவிர பாலியல் குற்றம் (Aggravated Sexual Assault)என போக்சோ சட்டம் குறிப்பிடுகிறது. எனவே,   தமிழ்நாடு அரசு  தனியார் பள்ளிகளில்  இத்தகைய செயல்கள் நடைபெறக் காரணம் என்ன என்று கண்டறிந்து, அதனை முற்றாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் நடக்கும் இத்தகைய பாலியல் அத்துமீறல்களுக்கு  பள்ளிகளே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். பெண் குழந்தைகளின்  பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.பாலியல் வன்முறைகளை பள்ளி- 
கல்லூரி வளாகங்களில் இருந்து முற்றாக துடைத்தெறிய ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் முறைமை அவசியம்.

ஆசிரியர்களுக்கு இதுதொடர்பான  வகுப்புகள் நடத்தப்பட  வேண்டும். இந்த குற்றங்களின் தன்மை அது பாதிக்கும்விதம், தண்டனைகள், சமூகப் பொறுப்பு ஆகியவை பயிற்றுவிக்கப்பட வேண்டும். பெண் குழந்தைகளிடம்  ஆசிரியர்கள்எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற, நடத்தை விதிகள் தெள்ளத் தெளிவாக வரையறை செய்ய வேண்டும்.  பாலியல் சீண்டல்கள், அத்துமீறல்கள் நடைபெறும் போது  மாணவர்கள் அதனை எப்படிக் கையாள வேண்டும்? இத்தகைய சிறிய சீண்டல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையும் கற்றுத் தர வேண்டும்.பள்ளி வகுப்பு பாடத்திட்டத்தில் பாலின சமத்துவக் கல்வியை இணைக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் எளிதில் பயன்படுத்தும் விதமாக புகார் பெட்டி வைக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் உளவியல் ஆலோசகர் நியமிப்பது அவசியம் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.