tamilnadu

img

மிக ஆபத்தான 2வது இன்னிங்ஸ்

மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பட்ஜெட் குறித்து பெரிய எதிர்பார்ப்புகள் உருவாக்கப்பட்டன. புதிய அரசு, புதிய இந்தியா, புதிய நிதியமைச்சர் என அனைத்திலும் புதுமை புதுமை என்று சொல்லப்பட்ட இந்த பட்ஜெட்டில் உண்மையில் என்ன நடந்திருக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும். புதிய இந்தியாவை உருவாக்கப் போகிறேன் என்ற பெயரில் வந்துள்ள பட்ஜெட் இது என்பதாலும் இதை நாம் கூர்ந்து கவனித்தாக வேண்டும். வராக் கடன்கள் குறித்து இந்த பட்ஜெட் வாயே திறக்கவில்லை.  ‘இந்தியாவின் செல்வங்களை உருவாக்குபவர்கள் கார்ப்பரேட்கள் (பெரு முதலாளிகள்)’ என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு வார்த்தையை திரும்பத் திரும்பச் சொன்னார். இது ஒரு வியப்பான சொல் ஆகும். கோடிக்கணக்கான விவசாயிகளும் தொழிலாளர்களும் இந்த நாட்டின் செல்வங்களை உருவாக்குகிறார்கள். ஆனால் நிதியமைச்சர் கண்ணிலோ இந்திய பெருமுதலாளிகள் தான் செல்வங்களை உருவாக்குபவர்களாக திகழ்கிறார்கள். இதுபோன்ற பார்வை அவருக்கும் அரசுக்கும் ஆழமாக இருக்கிறது என்பதைத்தான் அவரது உரை காட்டுகிறது. அதே நேரத்தில் இந்த பட்ஜெட்டில் பிரமாதமாக எதையும் அறிவித்துவிடவில்லை. நாடு இன்று சந்தித்துள்ளவிவசாய நெருக்கடி, வேலையின்மை உள்ளிட்ட பல முக்கியமான பிரச்சனைகள் குறித்து இந்த பட்ஜெட் கண்டு கொள்ளவில்லை. இந்த பிரச்சனைகளுக்கு  தீர்வு காண நம்பிக்கை ஊட்டுவதாகவும் பட்ஜெட் யோசனைகள் அமையவில்லை. விவசாயத்தை எடுத்துக்கொண்டால் கடந்த ஆண்டை விட மிக அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது  போன்ற தோற்றத்தை மோடி அரசு ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆழமாக பார்த்தால் அதற்கான தொகையில் பெரும்பகுதி நில உடமையாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்திற்குத் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த இடைக்கால பட்ஜெட்டில் தேர்தலை மனதிற்கொண்டு அறிவிக்கப்பட்ட அந்த திட்டத்திற்கு ரூ.75ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்கு ரூ.6 ஆயிரம் தரப்போகிறார்கள்.  இது விவசாயிகள் சிறுபகுதியினருக்கு கிடைத்தாலும் பெரும்பகுதி நிலத்தின் உரிமையாளர்களுக்குதான் கிடைக்கப்போகிறது.

நில உச்சவரம்பு நீக்கம்
இரண்டாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறும் நில உடமையாளர்களுக்கான நில  உச்சவரம்பை நீக்கிவிட்டது. எல்லோருக்கும் இந்த திட்டம் பொருந்தும் என்றாலும் குத்தகை விவசாயிகளுக்கு பொருந்துமா என்ற கேள்விக்கு இதுவரை  விடையில்லை. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6ஆயிரம் பணப்பட்டுவாடா செய்தால் போதும்; அரசின் கடமை முடிந்து விட்டது என்ற  மோடி அரசு கருதுகிறது. இந்த கோணத்தில் இன்றைய வேளாண் நெருக்கடியை அரசு பார்க்குமானால் அது அரசின் மிகப்பெரிய தவறாக முடியும். இன்று விவசாயிகள் நெருக்கடியில் இருந்து  மீளவேண்டும் என்றால்  விவசாயத்திற்கு தேவையான ஏராளமான முதலீடுகளை அரசு மேற்கொள்ளவேண்டும். விரிவாக்கப்பணிகளை அதிகரிக்கவேண்டும், கடன் உதவிகளை வலுப்படுத்தவேண்டும். தேசிய வேளாண் ஆராய்ச்சிமையத்தை பலப்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில்  பாசனத்தை விரிவுபடுத்த வேண்டும்.

அரசு என்ன செய்யவேண்டும்?
விவசாயிகள் சந்தைகளுக்கு தங்களது விளைபொருட்களை கொண்டு செல்லும் வகையில் சாலைகளை மேம்படுத்த வேண்டும். விவசாய விளை பொருட்களை சேமித்து வைக்க கிடங்குகள் அதிகரிக்கப்பட வேண்டும். இவ்வாறு விவசாயத்தின் பல துறைகளில் அரசின் முதலீடு தேவைப்படுகிறது. அதைச் செய்ய மறுக்கும் அரசு ஏதோ 3 தவணைகளில் ரூ.2ஆயிரம் கொடுத்தால் போதும் என்று பார்ப்பது தவறு. இந்த பட்ஜெட்டும் அதே திசையில்தான் செல்கிறது. 

அடிப்படைப் பிரச்சனைகளை பேசாத பட்ஜெட்
நாடு எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய பிரச்சனை வேளாண் நெருக்கடியாகும். தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் துயரில் உழலும் நிலையில் அதைப்பற்றி பட்ஜெட் வாய்திறக்க மறுக்கிறது. கடன் ரத்து குறித்தும் ஏதும் சொல்லவில்லை. எனவே இது வேளாண் துறையின் மிகவும் அடிப்படையான பிரச்சனைகளை காண மறுக்கும் பட்ஜெட்தான். இதனால் விவசாயத்துறை சந்திக்கும் அடிப்படையான பிரச்சனைகளை எதிர்கொள்ள இந்த பட்ஜெட் உதவாது.

அரசு அறிக்கையே காட்டிக்கொடுத்தது...
நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ள சூழலில் வேலையின்மை குறித்து அறிக்கையே வெளியிடக்கூடாது என்று சொன்ன அரசாங்கம்தான் மோடி அரசாங்கம். ஆனால் வேறு வழியின்றி வெளியிடப்பட்ட அறிக்கை மூலமாக கடுமையான வேலையின்மை நிலவுவது தெளிவாக வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. ‘உலகிலேயே மக்கள் தொகையில்  இளைஞர்களை அதிகமாக கொண்டுள்ள நாடு இந்தியா என்று பொருளாதார  ஆய்வறிக்கையில் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். இந்த பெருமை மட்டும் போதுமா? அவர்களை நாட்டின் உற்பத்தியில் எப்படி இணைப்பது என்பது குறித்து அரசுக்கு பார்வை இருக்கவேண்டாமா? நிதியமைச்சர் பார்வையில் பெருமுதலாளிகள்தான் இந்தியாவின் செல்வத்தை உருவாக்குகிறார்கள் என்றிருக்கும் போது இவர்களை பற்றி அவர் ஏன் கவலைப்படப் போகிறார்?

ஊதாரி போல் செயல்படும் அரசு 
இவை மட்டுமல்ல; மேலும் கவலைப்படத்தக்க அம்சங்கள் அதிகமாக இந்த பட்ஜெட்டில் உள்ளன. ஒன்று, இந்தாண்டு அரசின் வரவுகளில் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கோடி ரூபாயை எப்படி திரட்டப் போகிறார்கள்  என்றால் பொதுத்துறை பங்குகளை விற்று அந்த தொகையை பெறுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். கிராமங்களில் சொத்தை விற்று வாழ்க்கை நடத்தினால் ஊதாரி என்று சொல்வார்கள். ஒரு நாட்டின் மிக முக்கியமான மக்கள் சொத்துக்கள் தான் பொதுத்துறை நிறுவனங்கள். ஒருஅரசு வரலாம் போகலாம். ஆனால் பொதுத்துறை நிறுவனங்கள் என்பது அரசுக்கு நிரந்தரமான சொத்து. கடந்தாண்டு இந்த சொத்துக்களை 80 ஆயிரம் கோடி ரூபாய் என்று முதலில், சொல்லி பின்னர் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு விற்றார்கள்.

கல்விக்கும் சுகாதாரத்திற்கும் மிகக்குறைவான தொகையே ஒதுக்கீடு
2014 ஆண்டுக்கு பிறகு பாஜக ஆட்சியில் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்கள் விற்கப்பட்டு வருகிறது. ஒரு ஆண்டுக்கு சராசரியாக ரூ.80ஆயிரம் கோடி முதல் ரூ.1லட்சம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படுகிறது என்றால் மிக விரைவிலேயே பொதுத்துறை நிறுவனங்கள் காணாமல் போகும். பொதுத்துறை இல்லை என்றால் என்னவாகும்? சமூக நீதி என்று சொல்லக்கூடிய இடஒதுக்கீடு உள்பட எல்லாமே காணாமல் போகும். இதனால் மக்களின் குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த முடியாது. இதே நிலைமை தான் கல்வியிலும் சுகாதாரத் துறையிலும் நீடிக்கிறது. இந்தாண்டு கூட கல்வித்துறைக்கும் சுகாதாரத்துறைக்கும்  மோடி அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகமிகக் குறைவான தொகையைத்தான் ஒதுக்கியுள்ளது.

சூதாட்ட நிறுவனங்களுக்கு சலுகை மேல் சலுகை
கல்வி, வேளாண்மை, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற மிக முக்கியமான பிரச்சனைகளுக்கு இந்த பட்ஜெட்டில் எந்த விடையும் இல்லை. உண்மையில் யாருக்கு இந்த பட்ஜெட் பயன்படப் போகிறது என்றால்  வெளிநாடுகளில் இருந்து பணம் கொண்டு வருவோருக்குத்தான் இது பயன்படும். வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய முதலீடுகளில் ஒன்று நேரடி அந்நிய முதலீடு (எஃப்டிஐ). மற்றொன்று அந்நிய நிதி மூலதனம். இரண்டாவது நிதி, நேரடியாக உற்பத்தியில் ஈடுபடாமல் நமது நாட்டின் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து சூதாட்டம் நடத்தும் மூலதனமாகும். இப்படிப்பட்ட நிறுவனங்களுக்கு மோடி அரசின் பட்ஜெட்டில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. 

அந்நிய மூலதனம் நாட்டைக்  காப்பாற்றுமா?  
இரண்டாவதாக  இந்த அந்நிய நேரடி முதலீடு நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படையான மூலதனம் போன்று பேசப்படுகிறது. உண்மை என்னவென்றால் 68 பில்லியன் டாலர்கள் (6800 கோடி டாலர்) நேரடி அந்நிய முதலீடு மூலமாக  வந்துள்ளதாக நிதியமைச்சர் கூறுகிறார். ஆனால் இந்திய பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு 3 டிரில்லியன் டாலர்கள் (3 லட்சம் கோடி டாலர்) ஆகும். அதாவது தேச உற்பத்தியில் சுமார் 2 விழுக்காடு மட்டுமே இருக்கிற அந்நிய முதலீடுதான்  நமது நாட்டையே மேம்படுத்தும் என்றால் அது எப்படிப்பட்ட  பார்வையாக இருக்கும். இந்திய மக்களுடைய உழைப்பை முழுமையாகவும் திறமையாகவும் பயன்படுத்துவது, உற்பத்தித் திறனை உயர்த்துவது போன்ற அடிப்படையான பணிகளை கைவிட்டு விட்டு  அந்நிய  மூலதனம் வரும்; அது நம்மைக் காப்பாற்றும் என்ற பார்வையை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்; அல்லது பெருமுதலாளிகள் காப்பாற்றுவார்கள் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ளமுடியும்?

பெருமுதலாளிகள் காப்பாற்றுவார்களாம்
அரசின் பொருளாதாரக் கொள்கை அந்நிய நேரடி முதலீட்டையும் இந்திய பெருமுதலாளிகளையும் சார்ந்து நிற்கிறது. இந்தியாவின் உழைக்கும் மக்களை அது கணக்கிலேயே கொள்ளவில்லை. 
அடுத்து நிதி ஒதுக்கீட்டை பார்த்தால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்திற்கு சென்றாண்டு (2018-19) 61 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கினார்கள்.  இந்தாண்டு ஒதுக்கியிருப்பது ரூ.60 ஆயிரம் கோடிதான். இது சென்றாண்டை விட குறைவு. நாட்டில் வறட்சி அதிகரித்துள்ள நிலையில் அதிகப்படியான மக்களுக்கு சில நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய இதுபோன்ற திட்டங்களுக்கு நிதியை குறைத்து விட்டார்கள்.  வேளாண் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அரசின் முதலீட்டை அதிகரிப்பதற்கு பதிலாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்து சமாளிக்கலாம் என்று அரசு கருதுகிறது. மற்ற எல்லாத்துறைகளையும் அதாவது ரயில்வே உள்பட  தனியாரிடம் விட்டு விடலாம் என்று  சொல்கிறார்கள். பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களையும் விற்றுவிடலாம் என்று யோசனை சொல்கிறார்கள். 

அப்படியென்றால் அரசு என்ன செய்யும்? 
தனியார் பெருநிறுவனங்களுக்கு உதவி செய்யும். இந்த நிறுவனங்கள்  செலுத்த வேண்டிய வரி வருமானம் தொடர்பாக முந்தைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒரு சலுகையை அறிவித்தார்.  ஆண்டு விற்பனை மதிப்பு 250 கோடி ரூபாய்க்கு குறைவாக இருந்தால்  அந்த நிறுவனங்களின் வருமான வரி 30விழுக்காட்டில் இருந்து 25 விழுக்காடாக குறைக்கப்பட்டது. இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.250 கோடி ரூபாய் என்ற வரம்பை ரூ.400கோடி ரூபாயாக உயர்த்தி விட்டனர். 

நிறுவனங்களுக்கு வருமான வரி சலுகை 
ஒரு நிறுவனத்தின் ஆண்டு விற்பனை மதிப்பு 400 கோடி ரூபாய்க்கு குறைவாக இருந்தால் அந்த நிறுவனம் செலுத்தவேண்டிய வருமான வரி விகிதம் 25விழுக்காடுதான். மொத்த நிறுவனங்களில் 99.03விழுக்காடு நிறுவனங்கள் இதன் வரம்புக்குள் வந்துவிடும் என்று அரசே கூறுகிறது. மீதமிருக்கும் நிறுவனங்களின் விகிதம் வெறும் 0.7 விழுக்காடுதான். இன்று நாடு கல்வி, சுகாதாரம், வேளாண்மை என பல்வேறு முதலீடுகளை மேற்கொள்ளவேண்டிய நிலையில் பெரும் நிறுவனங்களிடமிருந்து முறையாக வரியை வசூல் செய்து அவற்றை மக்களின் தேவைக்கு பயன்படுத்துவதுதான் ஒரு அரசின் கடமையாக இருக்கமுடியும். அதற்கு பதிலாக அரசின் வரிக்கொள்கை சாமானிய மக்களின் மீது மேலும் மேலும் வரியை திணிப்பதாக உள்ளது. பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு ஒரு ரூபாய் கூடுதல் வரி விதித்துள்ளனர். மீண்டும் மீண்டும் மக்களை தாக்குகின்ற சரக்கு மற்றும் மறைமுக வரி விகிதங்களை உயர்த்தி பணக்காரர்கள் செலுத்தவேண்டிய நேர்முக வரி விகிதங்களை குறைப்பது என்பதுதான் அரசின் வரிக்கொள்கையாக உள்ளது. இதில் ஒரே ஒரு விதிவிலக்கு என்னவென்றால் ரூ.2 கோடியில் இருந்து ரூ.5கோடி வரைவருமானம் ஈட்டக்கூடியவர்கள் மீது 3விழுக்காடு கூடுதல் வரி என்றும் 5கோடி ரூபாய்க்குமேல் என்றால் 7 விழுக்காடு கூடுதல் வரி என்றும் அறிவித்துள்ளனர். இது கூடுதல்வரி மட்டுமே. இது பெரிய தொகை அல்ல.  இருந்தாலும் இதுமட்டுமே வரவேற்கவேண்டிய விஷயம். (அதே சமயம் இது சர்சார்ஜ் என்பதால் இதனால் கிடைக்கும் வரி வருமானம் மத்திய அரசுக்கே சொந்தம் என்ற வஞ்சனையும் உள்ளது.)  பெரு நிறுவனங்கள் மீதான வரிவிகிதம் அனைத்தும் குறைக்கப்பட்டிருக்கிறது.

அரசு வளங்களை பயன்படுத்துக! 
மத்திய தர வர்க்கம் எதிர்பார்த்த எந்த அறிவிப்பும் இந்தாண்டு பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. உழைத்து சம்பளம் பெற்று செயல்படுகின்றவர்கள் 30 விழுக்காடு கட்டவேண்டியுள்ளது. ஆனால் பெரு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரி 25 விழுக்காடுதான் என்பது ஏற்றுக் கொள்ளமுடியாதது. இதில் வரி விலக்குகளை பயன்படுத்தினால்  அந்த வரிவிகிதம் 20 விழுக்காடு கூட இருக்காது. இந்த விஷயத்தில் உலகத்திலேயே பெரு நிறுவனங்கள் மீது மிகவும் குறைவான வரி விகிதம் உள்ள நாடு இந்தியாதான். அதாவது பணக்காரர்களுக்கு சலுகை அளிப்பதில். நேர்முக வரி, மறைமுக வரி என அனைத்தையும் சேர்த்தாலே வெறும் 15 விழுக்காடுதான் வருகிறது. இது சரியல்ல. செல்வந்தர்களிடமிருந்து முறையாக வரிவசூல் செய்து மக்கள் தேவைகளுக்கு அரசு வளங்களை பயன்படுத்தவேண்டும் என்ற கோட்பாடுதான் சரியாக இருக்கமுடியும்.  சுருங்கச் சொன்னால் தீவிர, தாராளமய, மக்கள் விரோத பாதையில் மோடி அரசு வெகு வேகமாகப் பயணிப்பதை கோடிட்டு காட்டுகிறது இந்த பட்ஜெட்.

தொகுப்பு: அ.விஜயகுமார்

;