tamilnadu

img

‘சஹமத்’ அமைப்பை உருவாக்கிய பிஷம் சஹானி

பிஷம் சஹானி இந்தி எழுத்தாளர், நாடக ஆசிரியர், நடிகர் என்ற பன்முகக் கலைஞர். பத்மபூஷன் உள்ளிட்ட பெருமைகள் பெற்றவர். நடிகர் பால்ராஜ் சஹனியின் உடன் பிறந்த தம்பி. பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 8.8.1915ல் பிறந்த இவர் ஆங்கில இலக்கியத்தில் புலமை பெற்றவர். இளம் வயதிலேயே காங்கிரசின் சேர்ந்து விடுதலைப் போரில் பங்கேற்றார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட கலவர சேதங்களில்  நிவாரண வேலைகளில் பங்கேற்று சேவை செய்தார். 1947க்குப் பின் காங்கிரசிலிருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். இப்டாவில் சேர்ந்து அதன் பணிகளில் பங்கேற்றார். அமிர்தசரசில் கங்சா கல்லூரியில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.  முதன்முதலாக நாட்டின் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தை துவக்கியது பிஷம் தான் என்ற பெருமை பெற்றவர். 1956 முதல் 1964 வரை ஏழாண்டுகள் மாஸ்கோவில் அயல்மொழிப் பதிப்பகத்தில் ரஷ்ய இலக்கியங்களை இந்தியில் மொழியாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டார். லியோ டால்ஸ்டாய் முதல் மாக்சிம் கார்க்கி வரை இந்தியில் ரஷ்ய இலக்கியங்களைக் கொண்டு வந்தார். பின்பு நாடு திரும்பி டில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். 1965 முதல் 1967 வரை நை கஹானியன் என்ற இலக்கிய இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். பஞ்சாபி, ஆங்கிலம், உருது, சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். பிஷம் சஹானி பல்கலை இலக்கிய அமைப்புகளோடு இணைந்து செயலாற்றினார். 1975 முதல் 1995 வரை பத்தாண்டுகள் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். கலாச்சார, கலை இலக்கியப் பிரச்சார அமைப்பாக “சஹமத்” என்ற அமைப்பை தோற்றுவித்தார்.  சப்தர் ஹஷ்மி படுகொலையைத் தொடர்ந்து இந்த அமைப்பு அவர் நினைவாக உருவாக்கப்பட்டது.  பிஷமின் புகழ்மிக்க படைப்பு “தமஸ் (அறியாமை இருள்). இது இந்தியப் பிரிவினையின் போது ராயல்பிண்டியில் அவர் நேர்கண்ட காட்சிகளை கருவாக வைத்து எழுதப்பட்டது. மூளையற்ற மதவெறி பயங்கரம், வன்முறை, அழிவு, தமிழகம், மரணங்கள் என நடந்தேறிய கொடூரங்களை தமஸ் வர்ணிக்கிறது. இந்த நாவல் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், ஜப்பான் மற்றும் பல இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளியானது. தமிழ், மலையாளம், காஷ்மீரி, மணிபுரி மொழிகளில் இந்த நாவல் அதிகம் விற்பனையானது. தமசுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. 1987ல் தமசை பிரபல இயக்குனர் கோவிந் நிஹானி டெலி பிலிமாக தயாரித்து வெளியிட்டார். இந்தியப் பிரிவினை குறித்த ‘பாலி’, ‘அமிர்தசரஸ் ஆஜா  ஹை’ இரண்டும் புகழ்மிக்க சிறுகதைகளாகும். அவரது இந்தி நாவல்களான ஜாரோசி, கடியன், பசந்தி, மய்யாதாஸ் கிமாடி, குன்ட்டோ, நீலு, நீலிமா, நிலோபர்  ஆகியவை சிறப்பானவை. அவரது பத்து சிறுகதைத் தொகுப்புகள் பாக்யரேகா, பாலபதா, பாதந்தி ராக், பாட்ரியன், வாங் சு, சோபயாத்ரா, நிஷாச்சார், பாலி, தாயான் ஆகியவையாகும். அவரது ஐந்து நாடகங்கள் ஹனுஷ், கபீரா கதா பஜார் மெய்ன், மாதவி, முபாப்சே, ஆஸம்கீர் பலமுறை மேடையேற்றப்பட்டன. குமார் சஹானி தயாரித்த “கஸ்பா” என்ற திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதினார். பஞ்சாபில் கல்சா ராஜ்யம் நடந்த போது இருந்த நல்வாழ்வு பிரிட்டிஷ் ஆட்சி வந்த பின் அனைத்தும் தலைகீழானது. மாறிப் போனதைப் பற்றி அவர் எழுதிய ‘மய்யாதாசின் கோட்டை’ என்ற வரலாற்று நாவலை பஞ்சாபி மக்கள் கொண்டாடினார்கள். எழுத்தாளர்களில் அன்டன் செகாவை அவருக்கு மிகவும் பிடிக்கும். பிஷம் சஹானி தனது படைப்புகளில் மனிதம், மனிதாபிமானம், அடக்குமுறை எதிர்ப்பு, மனிதநேயம் நல்லிணக்கத்தையே வலியுறுத்தினார். அவரது எழுத்துக்களில் தேவையற்ற விசயங்களோ, ஆபாசமோ துளியும் இருக்காது. அவரது நகைச்சுவை கூட மென்மையாக இருக்கும். ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வை ஊடுருவிப் பார்த்த தனது படைப்புகளின் மூலம் வழிகாட்டினார். அவரது கதைகளில் எளிய, குடும்ப மனிதர்களையே படைத்தார். இவர்கள் வாழ்வை அறிந்து கொள்வதற்காக கிராமங்களுக்கு இப்டா கலைக்குழுக்களோடு சென்று அனுபவங்களைப் பெற்றார். இறுதி வரை அவரது வாழ்வும், இலக்கியமும் எளிமையாகவே இருந்தது. பிரேம்சந்த், ஹரிசங்கர் பர்சாய் இருவருக்குப் பின் கதை நாவல்களில் மூன்றாவது இடத்தில் பிஷம் இடம்பிடித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தனது 87வது வயதில் 11.7.2003ல் டில்லியில் காலமானார். இந்திய இடதுசாரி இலக்கியத்திற்கு அவரது பங்களிப்பு மகத்தானது.

;