1706 - இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளை ஒன்றாக இணைத்த ‘ஒன்றிய ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இணைப்பிற்குப்பின் இது கிரேட் பிரிட்டன் என்று அழைக்கப்பட்டது. பிரிட்டிஷ் தீவுகளின் இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் 16 தனித்தனி நாடுகள் இருந்து, கொஞ்சம்கொஞ்சமாக ஒருங்கிணைந்து, எஞ்சியிருந்தவற்றில் வேல்ஸ் பகுதியை 1284இல் இங்கிலாந்து கைப்பற்றியது. அப்போது இயற்றப்பட்ட ‘ருத்லான் சட்டம்’, சொந்த சட்டங்களின்படியே தொடர்ந்து இயங்கும் வேள்பகுதியாக வேல்ஸ், இங்கிலாந்துடன் இணைக்கப்படுவதாக அறிவித்தது. வேள்பகுதி(பிரின்ஸ்பலிட்டி) என்பது, ஒரு பெரிய நாட்டின் இளவரசரால் ஆளப்படுகிற சிறிய பகுதியாகும்.
பின்னாளில் இம்முறை மாற்றப்பட்டாலும், இங்கிலாந்து முடியரசின் வாரிசுகள் வேல்ஸ் இளவரசர் என்று அழைக்கப்படுவது தொடர்கிறது. எஞ்சியிருந்தவையான இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகியவற்றுக்கிடையே தொடர்ந்து நடைபெற்ற போர்களின் முடிவாக, 1502இல் ஏற்பட்ட நிரந்தர அமைதிக்கான ஒப்பந்தத்தின்படி, இங்கிலாந்து இளவரசி மார்கரெட்டுக்கும், ஸ்காட்லாந்தின் நான்காம் ஜேம்சுக்கும் 1503இல் திருமணம் நடைபெற்றது. இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் திருமணமே செய்துகொள்ளமல் இறந்ததையடுத்து, 1603இல் ஸ்காட்லாந்தின் அரசராக இருந்த ஆறாம் ஜேம்ஸ், இங்கிலாந்துக்கும்(அதன் கட்டுப்பாட்டிலிருந்த அயர்லாந்துக்கும்) அரசரானார். ஒரே அரசரால் ஆளப்பட்டாலும் தனித்தனி நாடுகளாகவே தொடர்ந்த இவற்றை, பாராளுமன்றத்தில் சட்டமியற்றி ஒரே நாடாக்கும் முயற்சிகள் 1606,1667,1689இல் மேற்கொள்ளப்பட்டாலும், ஸ்காட்லாந்தால் ஏற்கப்படவில்லை. அந்நிய வணிகத்தில் ஏகபோகமாக இருக்கவிரும்பிய கிழக்கிந்தியக் கம்பெனி, ஆஃப்ரிக்க வணிகத்துக்கான ஸ்காட்லாந்துக் கம்பெனியை இங்கிலாந்தில் நிதி திரட்டக்கூடாது என்று 1698இல் நெருக்கடி கொடுத்ததால், ஸ்காட்லாந்து வேறுவழியின்றி இந்த இணைப்பிற்கு ஒப்புக்கொண்டது. 1706 ஏப்ரல் 22இலிருந்து, ஜூலை 22வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது. 1541-1691 காலத்தில் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த அயர்லாந்தையும் இணைக்கும் சட்டம் 1800இல் இயற்றப்பட்டு, கிரேட் பிரிட்டன், அயர்லாந்து ஆகியவற்றின் ஐக்கிய முடியரசு என்று பெயரிடப்பட்டது. மூன்றாண்டுகள் போரிட்டு, அயர்லாந்தின் சில பகுதிகள் சுதந்திர ஐரிய நாடு என்று 1922இல் விடுதலைப் பெற்றதைத்தொடர்ந்து, கிரேட் பிரிட்டன், வடஅயர்லாந்து ஆகியவற்றின் ஐக்கிய முடியரசு என்ற தற்போதைய பெயர் சூட்டப்பட்டது.