tamilnadu

img

இந்நாள் ஜூன் 4 இதற்கு முன்னால்

1913 - மகளிர் வாக்குரிமைக்கான போராட்டத்தில், குதிரைப் பந்தைய மைதானத்திற்குள் நுழைந்த எமிலி டேவிசன் என்ற பெண்மணி, இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜின் குதிரை மோதி, நான்கு நாட்கள் கழித்து ஜூன் 8 அன்று இறந்துபோனார். மக்களாட்சியின் பிறப்பிடமான பண்டைய ஏதென்சில், சொந்தமாக நிலம் வைத்திருந்த ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்தது. அதன்பின், பெரும்பாலும் முடியரசுகளே உலகம் முழுவதும் நிலவின. அரசவை என்ற அரசரால் நியமிக்கப்பட்ட அவையைக் கடந்து, இங்கிலாந்தின் நாடாளுமன்றம் என்ற வடிவத்திற்கு முன்னோடியாக, பெரும் நிலமும், அதிகாரங்களும் பெற்றிருந்த பிரபுக்கள் அவை உருவானது. நாடாளுமன்றம் என்று அழைக்கும் தகுதியுடைய அவைகள் சில நாடுகளில் முன்பே காணப்பட்டிருந்தாலும்கூட, பேசுவதற்கு (விவாதிப்பதற்கு!) என்ற பொருளுடைய பார்லெர் என்பதிலிருந்து 11ஆம் நூற்றாண்டில் உருவான பழைய பிரெஞ்சுச் சொல்லான பார்லெமெண்ட் என்பதிலிருந்து, பார்லிமெண்ட் என்ற சொல், 14ஆம் நூற்றாண்டில்தான், இங்கிலாந்தில் உருவானது. பின்னாளில், காமன்ஸ் அவை உருவானாலும்கூட, ஆண்களுக்கே, நிலவுடைமை, வரி செலுத்துதல் உள்ளிட்ட தகுதிகள் தேவைப்பட்ட நிலையில், பெண்களுக்கு வாக்குரிமை சாத்தியப்படுமா? ஆனால், இத்தகைய கட்டுப்பாடுகளுடன் கூடிய வாக்குரிமை, 1700களின் விடுதலைக்கால(ஏஜ் ஆஃப் லிபர்ட்டி) ஸ்வீடனில் வழங்கப்பட்டிருந்தது.

பிரிட்டன் தீவுகளில் ஒன்றான மேன் தீவில் 1881இலும், இங்கிலாந்தின் குடியேற்றமாக இருந்த நியூஸிலாந்தில் 1893இலும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டுவிட்டாலும், 1867இலேயே பெண்களின் வாக்குரிமைக்கான தேசிய கழகம் உருவாகி, போராடிக்கொண்டிருந்த இங்கிலாந்தில் மறுக்கப்பட்ட நிலையில், பெண்களுக்கான சமூக, அரசியல் சங்கம் என்பது 1903இல் உருவானது.  1906இல் இதன் உறுப்பினரான டேவிசன், ஏராளமான இயக்கங்களில் ஈடுபட்டு, ஒன்பது முறை கைது செய்யப்பட்டிருக்கிறார். 49 முறை உண்ணாவிரதங்களில் அவருக்குக் கட்டாயப்படுத்தி உணவளிக்கப்பட்டிருக்கிறது. அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, டெர்பியில், அரசரின் குதிரை பங்கேற்ற பந்தைய மைதானத்திற்குள் தங்கள் கொடியுடன் குதித்தார். 50 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் வந்த அரசரின் குதிரை மோதித் தள்ளியதில் நினைவிழந்து விழுந்த டேவிசன், நான்கு நாட்கள் சிகிச்சைக்குப்பின் உயிரிழந்தார். இவற்றுக்கெல்லாம் அசையாத இங்கிலாந்து அரசு, முதல் உலகப்போரில் பெண்களின் பங்களிப்பைக் கண்டபின்னர், 1918இல் வாக்குரிமை அளித்தது.

- அறிவுக்கடல்