1841 - நவீன ஹிப்னாட்டி சத்தின் தந்தை என்று குறிப்பிடப்படும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ‘ஜெண்டில்மேன் சயிண்ட்டிஸ்ட்’ ஜேம்ஸ் ப்ரெய்ட், ‘அனிமல் மேக்னெட்டி சம்’ என்பதன் செயல்முறை விளக்கத்தை தன்முறையாகக் கண்டார். பல்கலைக்கழகங்கள், அரசுத் துறை அல்லது நிறுவனங்கள் அல்லது கார்ப்பரேட் நிதியுதவி போன்றவையின்றி, யாரையும் சாராமல் ஆய்வுகள் மேற்கொண்ட சுதந்திரமான ஆய்வாளர்கள், ஜெண்டில்மேன் சயிண்ட்டிஸ்ட் என்றழைக்கப்பட்டனர். எல்லா உயிரினங்களிலும் உணர முடியாத ஓர் நேர்மறை சக்தி இருப்பதாகவும், அதை சிகிச்சை உள்ளிட்டவற்றிற்குப் பயன்படுத்தலாம் என்றும் நம்பிய ஜெர்மானிய மருத்துவர் ஃப்ரேன்ஸ் மெஸ்மெர், அதற்கு ‘அனிமல் மேக்னெட்டிசம்’ என்று பெயரிட்டார். இவர், 1774இல் ஒரு பெண் ஹிஸ்டீரியா நோயாளியை இரும்பு கலந்த கலவையொன்றைக் குடிக்கச்செய்து, அவரது உடலில் பல காந்தங்களை வைத்து ஒரு செயற்கை அலையை உருவாக்கினார்.
உடலில் இனம்புரியாத ஏதோ பாய்ந்ததாகவும், பல மணி நேரத்துக்கு பின் அவரது நோயிலிருந்து விடுவித்ததாகவும் அந்த நோயாளி குறிப்பிட்டாலும், காந்தங்களால் அது நிகழ்ந்ததாக மெஸ்மெர் நம்பவில்லை. விரைவிலேயே இந்தச் சிகிச்சையில் காந்தங்களைப் பயன்படுத்துவதை அவர் நிறுத்திவிட்டாலும், அனிமல் மேக்னெட்டிசம் என்றே அவர் அழைத்த பண்புதான் அவர் பெயராலேயே மெஸ்மெரிசம்(மெஸ்மெர்+இசம்) என்றழைக்கப்படுகிறது. இதைக்கொண்டு சிகிச்சையளிப்பவர்கள் மேக்னெட்டைசர் என்றும், இதைப்பற்றிய ஆய்வு மேற்கொள்பவர்கள் மேக்னெட்டி ஸ்ட் என்றும் அழைக்கப்பட்டனர். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரெஞ்ச் மேக்னெட்டைசர் சார்லஸ் லாஃபோன்ட்டைனின் செயல்முறை விளக்கத்தைக்காண அழைக்கப்பட்ட போதுதான் ப்ரெய்ட் இதைக் கண்டார்.
லாஃபோன்ட்டை னின் மேலும் இரு செயல்முறை விளக்கங்களின்போது மேக்னெட்டைஸ் செய்யப்பட்டவர்களின் கண், கண்ணிமை ஆகியவற்றைச் சோதித்த ப்ரெய்ட், அவர்கள் வேறொரு நிலையிலிருப்பதை உணர்ந்தார். தன்னையே செல்ஃப் அல்லது ஆட்டோ-ஹிப்னாட்டைஸ் செய்து மேலும் ஆய்வுகளை மேற்கொண்ட ப்ரெய்ட், அந்த விளைவுகளுக்கும் காந்தத்திற்கும் தொடர்பில்லை என்றும், அது உளம் சார்ந்த உடலியல் என்பதையும் கண்டறிந்தார். ஹிப்னாட்டிசம், ஹிப்னோசிஸ் ஆகிய சொற்கள் பிரெஞ்ச் மேக்னெட்டைசரான கியூவில்லர்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டிருந்தாலும், ப்ரெய்டாலேயே அவை புழக்கத்துக்கு வந்தன. தூக்கம் என்ற பொருளுடைய பண்டைய கிரேக்க மொழிச்சொல்லான ஹிப்னோஸ் என்பது, ஓசிஸ் சேர்க்கப்பட்டு ஹிப்னோசிஸ் என்றாகும்போது தூங்கச்செய்தல் என்ற பொருளைத் தருவதால் அதிலிருந்தே இச்சொற்கள் உருவாயின. சிகிச்சைக்காக ஹிப்னாட்டிசத்தைப் பயன்படுத்தும் ஹிப்னோதெரபி என்பதை முதன்முதலில் செய்தவரும் ப்ரெய்ட்தான்!
- அறிவுக்கடல்