tamilnadu

img

இந்நாள் டிச. 26 இதற்கு முன்னால்

1941 - அமெரிக்காவின் நன்றி நவிலல் நாள், நவம்பர் மாதத்தின் நான்காம் வியாழக்கிழமையில் கடைப்பிடிக்கப்படும் என்ற நாடாளுமன்றத்தின் தீர்மானத்தில், குடியரசுத்தலைவர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் கையெழுத்திட்டு, அதைச் சட்டமாக்கினார். 1863இல், ஒவ்வோராண்டும் நவம்பரின் கடைசி வியாழனில் நன்றி நவிலல் கடைப்பிடிக்கப்படும் என்று அப்போதைய குடியரசுத்தலைவர் ஆப்ரஹாம் லிங்கன் அறிவித்து, அரசு விடுமுறையாகவும் ஆக்கியதிலிருந்து, ஒருங்கிணைக்கப்பட்டு அமெரிக்கா முழுவதும் அதே நாளில் இவ்விழா கொண்டாடப்பட்டுவந்தது.

1939இல் நவம்பரில் 5 வியாழக்கிழமைகள் என்பதால், கடைசி வியாழன் நவம்பர் 30இல் வந்தது. அக்காலத்தில், நன்றி நவிலல் விழா முடிவதற்கு முன்பாக கிறிஸ்துமசுக்கான பொருட்களை விற்பனைக்கு வைப்பதும், கடைகளில் கிறிஸ்துமஸ் சிறப்பு விற்பனைக்கான அலங்காரங்கள் செய்வதும் தவறான நடவடிக்கையாகக் கருதப்பட்டது. நவம்பர் 30இல் நன்றி நவிலல் கடைப்பிடிக்கப்பட்டால், அதன்பின் கிறிஸ்துமசுக்கான விற்பனைகளுக்கு மிகக் குறைந்த கால அவகாசமே கிடைக்கும் என்பதால், விற்பனை பாதிக்கப்படும் என்று உலர் பொருட்கள் சில்லரை விற்பனையாளர்கள் சங்கத்தின் நிர்வாகி லியூ ஹான், வணிகத்துறைச் செயலாளர்(அமைச்சர்) ஹாரி ஹாப்கின்சிடம் தெரிவித்தார்.

பெரும் பொருளாதார மந்தத்தின் பாதிப்புகள் முழுமையாக முடிவுக்கு வந்திராத நிலையில், பொருளாதாரத்தை ஊக்குவிக்கவேண்டிய கிறிஸ்துமஸ் சிறப்பு விற்பனை பாதிக்கப்படுவது நல்லதல்ல என்று கருதிய ரூஸ்வெல்ட், அவ்வாண்டு நவம்பரின் கடைசிக்கு முந்தைய (நான்காம்) வியாழக்கிழமை கொண்டாடப்படும் என்று அறிவித்தார். இதைக் கடுமையாக எதிர்த்த எதிர்க்கட்சியினர், தேங்க்ஸ்-கிவிங் பிராங்ளின் டி ரூஸ்வெல்ட்டுக்காக பிராங்க்ஸ் -கிவிங் ஆக மாறிவிட்டதாக விமர்சித்தனர்.

அவ்வாண்டில், 23 மாநிலங்கள் புதிய தேதியை ஏற்க, 22 மாநிலங்கள் பழைய தேதியையே கடைப்பிடிக்க, 3 மாநிலங் கள் இரு நாட்களுக்கும் விடுமுறை அறிவித்தன! அடுத்த இரு ஆண்டுகளிலும் கடைசிக்கு முந்தைய(மூன்றாவது!) வியாழக்கிழமை இவ்விழா அறிவிக்கப்பட, 1941இல் மரபுப்படி இனி கடைசி வியாழன் என்று நாடாளுமன்றம் தீர்மானம் இயற்றியது. 1941இல் 5 வியாழன்கள் என்பதால் நவம்பர் 29இல் கடைப்பிடிக்கப் பட்ட நன்றி நவிலல், வியாபாரத்தில் ஏற்படுத்திய பாதிப்பால் வணிகர்கள் அழுத்தம் கொடுக்க, 1942இல் நான்காவது வியாழன் என்று நிறைவேற்றப்பட்டதிருத்தத் தீர்மானமே குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் நன்றி நவிலல் விழாவுக்கான முதல் சட்டமாகி, உடனடியாகப் பெரும்பாலான மாநிலங்களால் ஏற்கப்பட்டது!

- அறிவுக்கடல்

;