1924 - உலகின் முதல் வனத்தன்மைப் பகுதியாக(வைல்டர்னஸ் ஏரியா), அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாநிலத்தில் உள்ள கிலா அறிவிக்கப்பட்டது. வனத்தன்மைப் பகுதி என்பது, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, வன உயிரியல் பூங்கா முதலானவற்றிலிருந்து மாறுபட்டு, அவற்றைவிட அதிகம் பாதுகாக்கப்பட்டதாக உள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் அறிவியல் ஆய்வுகள்தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் மனித நடமாட்டம் அனுமதிக்கப்படுவதில்லை. அவ்வாறு ஆய்வுக்குச் செல்பவர்கள்கூட, இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்த அனுமதியில்லை. குதிரை வண்டிகள் போன்றவற்றைத்தான் பயன்படுத்தவேண்டும். இயற்கையான உயிரியல் சுழற்சி பாதிக்கப்படாத பகுதிகள்மட்டுமே இவ்வாறு அறிவிக்கத் தகுதியானவை என்று உலகம் முழுவதும் இவற்றைக் கண்காணிக்கும் வைல்ட் அமைப்பு கூறுகிறது. இயற்கைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியம் (ஐயூசிஎன்) 1ஏ, 1பி என்று இரு பிரிவுகளில் இதை வரையறுக்கிறது. மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், செயற்கையான மாற்றங்களால் பாதிக்கப்படாமல் அதன் இயல்புகள் நீடித்திருப்பதாகவும், அவற்றைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் ஏற்பாடுகள் உள்ளதாகவும் வனத்தன்மைப் பகுதிகள் இருக்க வேண்டும் என்று விதி 1பி வரையறுக்கிறது. உலகில் மனிதன் நுழையவே நுழையாத வனம் என்று எதுவுமே இல்லை என்றே இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றன. இப்போது இல்லையெனினும், வரலாற்றின் ஏதோவொரு காலத்தில்பழங்குடியினராவது நடமாடியவையாகவே மிகப்பெரும்பாலான வனப்பகுதிகள் விளங்குகின்றன. மனித நடமாட்டத்தைத் தடுப்பதன்மூலம் காட்டின் உயிர்ச்சூழலையும், விலங்குகளின் இடம்பெயர்வையும் தடுத்து, வனத்தின் இயற்கையான தன்மை பாதுகாக்கப்படுகிறது. இவ்வாறு வகைப்படுத்தப்படும் பகுதிசட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்படவேண்டும் என்று கூறும் வைல்ட் அமைப்பின் விதியின்படி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் வனத்தன்மைப் பகுதிகளைப் பராமரிக்கின்றன. கிலா ஆறு உற்பத்தியாகுமிடத்தை மாசுபடாமல் பாதுகாப்பதற்காக, கிலா தேசியப்பூங்காவிற்கு உட்பட்ட 5.58 லட்சம் ஏக்கர் வனம், வனத்தன்மைப் பகுதியாக 1924 ஜூன் 3இல் அறிவிக்கப்பட்டன. 64 கி.மீ. நீளமும், 43 கி.மீ. அகலமும்கொண்ட இப்பகுதிக்குள் சாலை அமைப்பது உட்பட எந்த நடவடிக்கைக்கும் அனுமதியில்லை.அறிவுக்கடல்