tamilnadu

img

இந்நாள் ஜுன் 01 இதற்கு முன்னால்

1495 - ஸ்காட்ச் விஸ்கி பற்றிய முதல் எழுதப்பட்ட குறிப்பு, ஜான் கோர் என்ற துறவியின் பெயருடன் கிடைத்தது. ஸ்காட்லாந்து அரசு கருவூலத்தின் பதிவேடுகளில், ‘வாழ்க்கையின் நீர்’ தயாரிப்பதற்காக எட்டு ‘போல்’ மால்ட், அரசரின் உத்தரவுப்படி தரப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் அரசு கருவூலத்தில் பதிவேடுகள் 1314இலிருந்தே பராமரிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. ‘போல்’ என்பது சுமார் 211 லிட்டருக்குச் சமமான, அக்காலத்திய ஸ்காட்லாந்து அளவை. மால்ட் என்பது மால்ட்டட்(முளைகட்டி, உரிய முறையில் உலரவைக்கப்பட்ட) பார்லியைக் குறிக்கிறது. கி.மு.2000களிலேயே மெசபடோமியாவில் வடித்தெடுக்கும் முறை இருந்ததாகக் கூறப்பட்டாலும், அதற்கு ஆதாரங்கள் இல்லை. கி.மு.முதல் நூற்றாண்டில் கிரேக்கர்கள் வடித்தெடுத்தலைச் செய்ததற்கு ஆதாரங்கள் இருந்தாலும், வடித்தெடுக்கப்பட்டவை நறுமணப்பொருட்களேதவிர மது அல்ல. 13ஆம் நூற்றாண்டில் இத்தாலியில் ஒயினிலிருந்து மது வடித்தெடுக்கப்பட்டுள்ளது. இதனை, கிறித்தவத் துறவிகள்தான் ஸ்காட்லாந்துக்கு அறிமுகப்படுத்தினார்கள் என்று கூறப்பட்டாலும், உறுதியான ஆதாரங்கள் இல்லை. அயர்லாந்து, ஸ்காட்லாந்தில் புழக்கத்திலிருந்து கேயலிக் மொழியில் உஸ்ஜி பீத்தா(வாழ்க்கையின் நீர்) என்று அழைக்கப்பட்ட இது உஸ்கிபாக் என்றழைக்கப்பட்டு, சுருக்கமாக உஸ்கி என்று குறிப்பிடப்பட்டதிலிருந்து விஸ்கியானது. 19ஆம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்துக்கு வெளியே பரவியதைத் தொடர்ந்து, பிற இடங்களில் தயாரிக்கப்பட்டவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட ஸ்காட்ச் என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது. ஸ்காட்லாந்தின் பொருட்களைக் குறிப்பிட ஸ்காட்ச் என்ற உரிச்சொல் பயன்படுத்தப்பட்டாலும், மனிதர்களை ஸ்காட்ச் என்று குறிப்பிடுவது இழிவாகக் கருதப்படுகிறது. அதனால் மனிதர்களுக்கு ஸ்காட்டிஷ், ஸ்காட்ஸ் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. மால்ட்டட் பார்லி மட்டுமின்றி பிற தானியங்களிலிருந்தும் தயாரிக்கப்பட்டாலும், ஐக்கிய முடியரசு(இங்கிலாந்து) இயற்றியுள்ள சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறையின்படிதான் ஸ்காட்ச் விஸ்கி தயாரிக்கப்படவேண்டும். ஓக் மரப்பீப்பாய்களில் குறைந்தது மூன்றாண்டுகளுக்காவது புளிக்கவைக்கப்பட்டிருப்பது கட்டாயம் என்பதுடன், தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட மிக இளைய(புதிய) விஸ்கியின் வயது உள்ளிட்ட விபரங்களும் விபரச்சீட்டில்(லேபல்) குறிப்பிடப்படுவது சட்டப்படி கட்டாயமாகும். (பட்டர்ஸ்காட்ச் என்பதற்கும் ஸ்காட்லாந்துக்கும் தொடர்பில்லை. விபரமாக இன்னொரு நாள்...!)