tamilnadu

img

இந்நாள் நவ. 22 இதற்கு முன்னால்

1986 - மிகக்குறைந்த வயதில்  ஹெவிவெய்ட் குத்துச்சண்டைச் சாம்ப்பியன் பட்டம் வென்றவராக 20 ஆண்டுகள் 4 மாதங்கள் 22 நாட்கள் வயதாகியிருந்த மைக் டைசன் ஆனார். இன்றுவரை அசைக்க முடியாத இந்தச் சாதனையைச் செய்த டைசன், மொத்தம் 56 தொழில்முறை போட்டிகளில் விளையாடி, 50இல் வென்றுள்ளார். இந்த 50இல் 44 போட்டிகளை நாக் அவுட் மூலம் வென்றார்! இவர் விளையாடிய முதல் 19 தொழில்முறை போட்டிகளை நாக் அவுட் மூலமே வென்றார் என்பதும், அவற்றில் 12 முதல் சுற்றிலேயே பெற்ற வெற்றிகள் என்பதும் இன்றும் குத்துச்சண்டை உலகின் அதிசயங்கள்! உலகக் குத்துச்சண்டைச் சங்கம், உலகக் குத்துச்சண்டைக் கவுன்சில், பன்னாட்டு குத்துச்சண்டைக் கூட்டமைப்பு ஆகிய மூன்றின் வௌpவெய்ட் சாம்ப்பியன் பட்டங்களையும் ஒருசேர வென்ற முதல் வீரர் டைசன்தான் என்பதுடன், இவற்றைத் தொடர்ச்சியாக வென்ற ஒரே வீரரும் அவர்தான். சிறு வயதில் தந்தையின்றி வறுமையில் வாடிய டைசன், குற்றங்கள் மலிந்த பகுதியில் வளர்ந்தார்.

13 வயதானபோது, 38 முறை சிறிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டிருந்தார். சிறார் குற்றவாளிகளுக்கு அறிவுரை வழங்கும் பணியிலிருந்த பாபி ஸ்டூவர்ட் என்பவர்தான் டைசனின் குத்துச்சண்டைத் திறமையைக் கண்டறிந்து, முதலில் பயிற்சியும் அளித்தார். 1981, 1982 ஜூனியர் ஒலிம்ப்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற டைசன், வெறும் 8 நொடிகளில் நாக் அவுட் வெற்றி பெற்றவர் என்ற சாதனையையும் புரிந்தார். 18 வயதில் தொழில்முறைப் போட்டிகளில் விளையாடத் தொடங்கிய டைசன், 5 ஆண்டுகள் கழித்து, 38ஆவது போட்டியில்தான் முதல் தோல்வியையே சந்தித்தார். 1992இல் பாலியல் வன்புணர்வுக் குற்றம் சாட்டப்பட்டு, 6 ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற டைசன் 3 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டதும், மீண்டும் சாம்ப்பியன் பட்டங்களை வென்றார். 37 வயதில், தோற்று விடுவார் என்று கணிக்கப்பட்ட போட்டியில் கடைசியாகப்பெற்ற தொழில் முறை வெற்றியைக்கூட, முதல் சுற்றிலேயே, அதுவும் வெறும் 49 நொடிகளில் நாக் அவுட் மூலம் பெற்ற டைசன், கோடிக்கணக்கான டாலர்களை ஈட்டினாலும், 2003இல் திவாலானார் என்பதும், குத்துச்சண்டையில் கவனம் செலுத்தி வாழ்க்கை இழந்துவிட்டதாகப் பின்னாளில் வருந்தினார் என்பதும் குறிப்பிடவேண்டியவை. (டைசனில் தொடங்கி குத்துச்சண்டை வரலாற்றை எழுதும் முயற்சியை டைசன் தோற்க டித்துவிட்டதால், குத்துச்சண்டை வரலாறு மார்ச் 5இல்!)