tamilnadu

புத்தூர் பாசன வாய்க்காலை தூர்வாரிடக் கோரிக்கை

சீர்காழி, ஏப்.22-கொள்ளிடம் அருகே புத்தூரில் பாசன வாய்க்காலில் தேங்கியுள்ள சாக்கடை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூர் கடைவீதியையொட்டி பாசன மற்றும் வடிகால் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் கடுக்காமரம், புத்தூர், திருமயிலாடி உள்ளிட்ட 10 கிராமங்களில் உள்ள விளை நிலங்களுக்கு பாசன மற்றும் வடிகால் வாய்க்காலாக இருந்து வருகிறது. இந்த வாய்க்கால் கடந்த 10 வருடங்களாக தூர் வாரப்படாததால், வாய்க்காலின் பெரும்பகுதி மூடி கிடக்கிறது. இதனால் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி வடியாமல் மாதக்கணக்கில் தேங்கியே கிடக்கிறது. அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் சாக்கடை நீரும் ஒன்றாக கலந்து மாதக்கணக்கில் தேங்கிக் கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் நடமாடவே அஞ்சுகின்றனர். பல வகையான பிளாஸ்டிக் பொருட்கள் இந்த சாக்கடை நீரில் தேங்கி கிடக்கிறது. எனவே சுற்றுப்புறத்தை பாதிக்கும் சாக்கடை நீரை அகற்றி இந்த வாய்க்காலை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர் வாரி ஆழப்படுத்த பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது.

;