tamilnadu

img

தடை செய்யப்பட்ட அதிவேக படகு என்ஜின்களை அகற்றக் கோரி பழையாறு மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம்

சீர்காழி, ஆக.17- நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகு, பைபர் படகு மற்றும் நாட்டுப்படகு மூலம் தினந்தோறும் 5 ஆயிரம் மீனவர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்நிலையில் பழையாறு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு பதிவு செய்யப்படாத அதிவேக என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ள அரசால் தடை செய்யப்பட்ட 40 விசைப்படகுகள் கடந்த இரண்டு வருடங்களாக கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்தன. இதனை கண்டித்து பதிவு செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர் கடந்த ஜூலை 19-ந் தேதி முதல் தொடர்ந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனைத் தொடர்ந்து சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் கடந்த ஜூலை 20-ந் தேதி மயிலாடுதுறை ஆர்டிஓ கண்மணி தலைமையில் மீனவர்களின் இரு தரப்பினரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உரிய முடிவு எட்டப்படவில்லை. இதனால் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.  இந்நிலையில் பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு சில விசைப்படகுகளிலிருந்து அகற்றப்பட்ட அதிவேக என்ஜின்களையும் அதற்குப் பதிலாக பொருத்துவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மிதமான வேகமுள்ள எஞ்சின்களையும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் நடராஜன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  அதனைத் தொடர்ந்து துறைமுக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் ஆர்டி.ஓ கண்மணி, மீன்வளத்துறை உதவி இயக்குநர் நடராஜன் விசைப்படகு சங்கத்தலைவர் அருள்செழியன், சுவாமிமலை, மதி மற்றும் மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அதிவேக தடை செய்யப்பட்ட விசைப்படகுகளை பழையாறு துறைமுகத்தில் நிறுத்தக் கூடாது. அதிவேக எஞ்சின்களை அகற்ற வேண்டும். என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை இழுபறியாகவே முடிந்தது.  அதனைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட விசைப்படகுகளை  துறைமுகத்தை விட்டு வெளியேற்றி அதிவேக எஞ்சின்களை அகற்றும் வரை பழையாறு மீனவர்கள் ஒட்டும் மொத்தமாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதில்லை என்று முடிவு செய்தனர்.  இதனால் 28-ஆம் நாளாக வெள்ளியன்று மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. அதிவேக எஞ்சின்களை அகற்றும் வரை மீனவர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என்றும் பதிவு செய்யப்பட்ட விசைப்படகு சங்கத் தலைவர் அருள்செழியன் தெரிவித்தார். 

;