tamilnadu

img

காவி வேட்டி கட்டி மோடியிடம் மண்டியிட்டுக் கிடக்கும் ஓபிஎஸ்

ஆண்டிபட்டி:

காவி வேட்டி கட்டி பிரதமர் மோடியிடம் மண்டியிட்டுக் கிடக்கிறார் துணை முதல்வர் ஓபிஎஸ். தமிழகத்தில் வருகின்ற 23 ஆம் தேதிக்குப் பின்னர் அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். மீண்டும் தமிழகத்தில் பொதுத் தேர்தல் வரும் என்று அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார். 


அமமுக கட்சியினர் தேர்தலுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்து தேனி மாவட்ட மத்திய சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். பின்னர் அமமுக வழக்கறிஞர் செல்வம் என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவர்களை சிறையில் சந்திப்பதற்காக அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ் செல்வன் வந்திருந்தார். 


அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

எங்கள் கட்சியினர் மீது திட்டமிட்டு பொய் வழக்கு ஜோடித்துள்ளனர். முறைப்படி அவர்களை ஜாமீனில் எடுத்து வழக்கை சந்திப்போம்.அமைச்சர் ஜெயக்குமார் பேசும் போது பாரதிய ஜனதாவிடம் தினகரன் மண்டியிட்டு கிடக்கிறார் என்று கூறியுள்ளார். முற்றிலும் இது தவறு.ஓ.பன்னீர்செல்வம் தான் அதிமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று கூறி தர்மயுத்தம் நடத்தினார். ஆனால் பதவி தந்தவுடன் அதிமுகவில் இருந்து கொண்டு தற்போது வாரணாசிக்கு சென்று காவி வேட்டி கட்டி மோடியிடம் மண்டியிட்டு கிடக்கிறார். 

எங்கள் ஆதரவு 3 எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில் இரண்டு எம்.எல்.ஏ க்கள் மட்டும் சபாநாயகரிடம் விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் பிரபு மட்டும் கால அவகாசம் கேட்டுள்ளார். இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. தற்போது வரை அந்த 3 பேரும் எங்கள் கட்சியில் இல்லை. 


வரும் 23ஆம் தேதி தேர்தல் முடிவில் 22 தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெறும். அப்போது எடப்பாடி பழனிச்சாமி அரசை வீட்டுக்கு அனுப்புவோம். அதே சமயம் திமுக ஆட்சி அமைக்க ஆதரவு தர மாட்டோம். இதன் மூலம் கட்டாயம் தமிழகத்தில் பொதுத் தேர்தல் வரும். அப்போது டி.டி.வி.தினகரன் தலைமையிலான எங்கள் அணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்போம். இடைத்தேர்தலில் ஆர்.கே.நகர் போல 22 தொகுதிகளிலும் நாங்க வெற்றி பெறுவது உறுதி என்று கூறினார். பேட்டியின் போது ஆண்டிபட்டி தொகுதி அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் உள்பட கட்சியினர் உடனிருந்தனர்.

;