தேனி:
தேர்தல் நேரத்தில் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க முடியாது என ஏன் சொல்லவில்லை; தினகரனோடு இன்றும்தொடர்பில் உள்ளவர் ஓ.பன்னீர்செல்வம் என திமுக தேனி வடக்கு மாவட்டச் பொறுப்பாளர் தங்க.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
போடியில் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எனக்கு கம்பம் தொகுதி தான் அதிமுகவில் ஒதுக்கப்பட்டது. ஆனால் தினகரனுடன், ஓ.பன்னீர் செல்வம்கூட்டுச் சேர்ந்து எனக்கு ஆண்டிபட்டி தொகுதியை வழங்கினார்கள். அங்கும் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு, 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடுவதற்காக என்னை அழைத்து ராஜினாமா செய்யச் சொன்னார்கள். அதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், எப்போது ராஜினாமா செய்ய வேண்டும் என்று தான் கேட்டேன். ராஜினாமாவும் செய்தேன். 66 கோடி ரூபாய் ஊழல் செய்த ஜெயலலிதாவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தனது மகன் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ரூ.500கோடி வரை செலவு செய்த பன்னீர்செல்வம் மீது நடவடிக்கை எடுப்பது யார்? கடந்த ஆட்சியின் போது அமைச்சர்களின் ஊழல்பட்டியலை திமுக சார்பில் ஆளுநரிடம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.