tamilnadu

img

பிரம்மாண்ட சிலைகளை பாஜக நிறுவுவது முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கே

புதுதில்லி

முஸ்லிம்கள் மத்தியில் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்துவதற்காகவே, கடவுளர் மற்றும் தலைவர்களின் பிரம்மாண்ட சிலைகளை பாஜக நிறுவி வருகிறது என்று ‘தி பிரிண்ட்’ இணைய இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


இதுதொடர்பாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உலகிலேயே மிக உயரமான சிலைகள் என்ற முழக்கம், இந்தியா முழுவதும் ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. இந்து தேசியத்தை வளர்த்தெடுக்கிறோம் என்ற அடிப்படையிலேயே, பிரம்மாண்ட சிலைகளை அமைப்பதில், பாஜக-வினரும், பிரதமர் மோடியும் தீவிரம் காட்டுகின்றனர்.


படேலுக்கு 597 அடி உயர பிரம்மாண்ட சிலை ஏற்கெனவே நிறுவப்பட்டு விட்டது. தற்போது உத்தரப்பிரதேசத்தில் ராமருக்கு 725 அடி உயர வெண்கலச் சிலை திறக்கப்பட உள்ளது. மகாராஷ்டிராவில் 695 அடி உயரத்திலான சத்ரபதி சிவாஜி சிலை, சுற்றுச்சூழல் பிரச்சனை காரணமாக நிலுவையில் உள்ளது. தமிழ்நாட்டில் கடவுள் சிவனுக்கு அமைக்கப்பட்ட 112 அடி உயர மார்பளவுச் சிலை கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது. இவை அனைத்துமே மோடியின் விருப்பத்தின் பெயரிலேயே நடக்கிறது. 


வரலாற்றை நினைவுகூரும் வகையில் சிலைகள் வைக்கப்படுவது பல நாடுகளிலும் உள்ள வழக்கம்தான். ஆனால், இந்தியாவில் பெரும்பான்மையினர் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, புதிய சிலைகளை அமைப்பதானது, சிறுபான்மையினரை பதற்றம் அடையச் செய்வதற்கான முயற்சியாகவே உள்ளது. சிலைகள் நிறுவுவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு, மக்கள் பிரச்சனைகளில் கண்டுகொள்வதில்லை. 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்க முன்பு, வறுமையை ஒழிப்பேன்: அனைவரையும் முன்னேற்றுவேன் என்று கூறித்தான் மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால், தனிப்பெரும்பான்மை கிடைத்தவுடன், வாக்குறுதிகளை அவர் கண்டுகொள்ளவில்லை.


பணமதிப்பு நீக்கத்தால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த ஐந்தாண்டு கால மோடி ஆட்சியில் ‘இந்து விழிப்புணர்வு’ என்ற போர்வையில், கலவரங்கள்தான் அதிகம் நடந்துள்ளது.பன்முக கலாச்சாரம் கொண்ட இந்தியாவில் 17 கோடி முஸ்லிம்கள் வசிக்கின்றனர். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும், உலகின் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மையினர் 20 சதவிகிதம் பேர். இவர்களை இந்திய ஆட்சியாளர்கள் அச்சுறுத்தப் பார்க்கின்றனர்.இவ்வாறு “தி பிரிண்ட்’ ஏடு எழுதியுள்ளது.


;