tamilnadu

img

தூத்துக்குடியில் கனிமொழிக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கல்

தூத்துக்குடி, மே 24-தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, பா.ஜனதாவேட்பாளர் தமிழிசையைவிட 3ஙூ லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். கனிமொழி 5,63,143 ஓட்டுகள் வாங்கினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் 2,15,934 ஓட்டுகளை பெற்றார். இவரைவிட 3,47,209 வாக்குகள் அதிகம் பெற்று கனிமொழி வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்ற கனிமொழிக்கு அதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப்நந்தூரி வழங்கினார். அப்போது தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ (தெற்கு), கீதாஜீவன் எம்எல்ஏ (வடக்கு) ஆகியோர் உடன் இருந்தனர்.பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கொடுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினருக்கு நன்றி. இந்த வெற்றியை சாத்தியப்படுத்தி தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோருக்கும், கழகநிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி. தூத்துக்குடி மாவட்ட மக்கள் சாதி, மதம் ஆகியவற்றை கொண்டு வாக்களிக்க மாட்டார்கள். அதை தாண்டி யார் இந்த நாட்டுக்காக உண்மையாக உழைக்கக்கூடியவர்கள்  என்பதை புரிந்து கொண்டு தி.மு.க.வுக்கு வாய்ப்பளித்த தூத்துக்குடி மக்களுக்கு நன்றி. மத்தியில் வெற்றி பெற்றபா.ஜனதாவிற்கும், மோடிக்கும் எனது வாழ்த்துகள்.  தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னது போல், தமிழக மக்களுக்காக திமுக தொடர்ந்து போராடும். இங்கு நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.