tamilnadu

img

தண்டலை விளமல் பகுதியில் தேங்கிக் கிடக்கும் கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

திருவாரூர், அக்.1- திருவாரூர் வட்டார ஊராட்சி ஒன்றியம், தண்டலை ஊராட்சியில் உள்ள விளமல் தெற்குத்தெரு கிராம மக்கள் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.  இப்பகுதி 7வது வார்டில் நூற்று க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 1998 ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியின் போது சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. 40 காலனி வீடுகளும் கட்டித் தரப்பட்டது. அவற்றின் நிலை தற்போது மிகவும் மோசமாக உள்ளது. அதன் பிறகு எந்த வளர்ச்சித் திட்டங்களும் நடைபெறவில்லை என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது இங்குள்ள ஓடம்போக்கி ஆற்றின் வடிகால் தூர்வாராமல் தூர்ந்து போய் இருப்பதுடன் ஆக்கிரமிப்பாளர்களால் காணாமல் போய் விட்டது. இதன் காரணமாக மழைநீர் வடியாமல் இப்பகுதியில் தேங்கி விடுகிறது. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாக்கடை மற்றும் கழிவு நீர் ஓடுவதற்கு பாதையில்லாமல் தேங்கி நிற்கும் மழைநீரோடு கலந்து விடுகிறது. இத னால் சுகாதாரமற்ற நிலையில் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.  பருவ மழைக் காலங்களில் டெங்கு உள்ளிட்ட உயிர் பறிக்கும் நோய் பரவும் அபாயம் உள்ள சூழ்நிலையில் இப்பகுதியில் நிலவும் சுகாதாரக்கேடு மிகுந்த ஆபத்தை விளைவிப்பதாகவும், குறிப்பாக தொற்றுநோய் எளிதில் பாதிக்கும் குழந்தைகளின் உடல் நலனும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. தற்போது உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இல்லாததால் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  அக்.2 ஆம் தேதி காந்தி பிறந்த நாளன்று அரசு நிர்வாகம் தூய்மைப் பணியை முன்னெடுக்கும் சூழலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ள தண்டலை ஊராட்சியில் இப்பகுதி விளங்குகிறது. அலட்சியம் காட்டாமல் விரைவாக செயல்பட்டு இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும், தொற்றுநோய் அபாயத்திலிருந்து மக்களை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்தி இப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி ஓடம்போக்கி ஆற்று வாய்க்காலை தூர்வாரி தடையின்றி நீர் செல்வதற்கும், சாக்கடை மற்றும் கழிவு நீர் கலக்காமல் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

;