விழுப்புரம், நவ.23- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கவரை கிரா மத்தில் அரசு ஆதிதிராவிடர் நல மேல் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 500 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு செல்லும் முக்கிய சாலையானது மழையின் மழைநீர் சாலையில் தேங்கி வெளியேற வழித்தடம் இல்லாமல் அங்கேயே நிற்கிறது. இதனால், அந்த சாலை சேறும் சகதியுமாக உள்ளது. கொசு உற்பத்தி பகுதியாக மாறிவிட்டது. டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால் மாணவர்கள் பள்ளிக்கு அச்சாலை வழியே செல்வதற்கு அச்சப்படுகிறார்கள். கடந்த மாதம் இப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு செஞ்சி தீயணைப்புத்துறையினர் வந்த போது மிகுந்த சிரமத்திற்குளாகியதும் குறிப்பிடத்தக்கது. அங்கு படிக்கும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு தொற்று நோய் பரவும் முன்பு மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், ஆதிதிராவிடர் நலத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த சாலையில் தண்ணீர் தேங்காமல் தடுக்க புதிய சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.