tamilnadu

img

நியாயம் கேட்டு போராடியவர்கள் மீது காவல்துறை தடியடி-கைது

சிதம்பரம், ஏப். 4-


காட்டுமன்னார்கோயில் அருகே மெய்யாத்தூர் கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த 8-ஆம் வகுப்பு படிக்கும் துர்காதேவி என்ற மாணவி பள்ளியின் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் தூக்கிட்டநிலையில் புதனன்று இறந்து கிடந்தார். அதனை தொடர்ந்து மாணவியின் உடன் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க கடலூர் மாவட்டச் செயலாளர் தேன்மொழி மார்க்சிஸ்ட் கட்சியின் குமராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணிவண்ணன்,பாலமுருகன் ஆகியோர் தலைமையில் வியாழனன்று(ஏப்.4) சம்பந்தபட்ட பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் வாசுதேவன், சத்துணவு பொறுப்பாளர் விக்டர் ஆகிய இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். மாணவி சாவில் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் கைது செய்து தீவிர விசாரணை மேற் கொள்ள வேண்டும் என்றும் மாணவியின் உடலை வைத்துக் காட்டுமன்னார்கோயில்-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தவர்த்தாம்பட்டு கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை சேத்தியாதோப்பு துணை கண்காணிப்பாளர் ஜவகர்லால் தலைமையிலான காவலர்கள் தடியடி நடத்தினர். இதில் பலர் பலத்த காயமடைந்தனர்.மேலும், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தேன்மொழி, மார்க் சிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மணிவண்ணன், பாலமுருகன் மற்றும் கிராம மக்கள் பலரையும் காவல்துறையினர் கைது செய்து குமராட்சி காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.

;