9 ஊராட்சிகள் பேரூராட்சியாக தரம் உயர்வு
திருவண்ணாமலை,மே 25- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 9 கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு கிராம ஊராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை இருந்தால், அந்த ஊராட்சி பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும். தற்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில், தேசூர், பெரணமல்லூர், சேத்துப்பட்டு, களம்பூர், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், செங்கம், போளூர், கண்ணமங்கலம், வேட்டவலம் என பத்து பேரூராட்சிகள் நடைமுறையில் உள்ளன. தற்போது புதிதாக, திருவண்ணாமலை மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள வேங்கிக்கால், தேவிகாபுரம், தண்டராம்பட்டு, எஸ்.வி. நகரம், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர், சந்தவாசல் உள்ளிட்ட 9 ஊராட்சிகள், பேரூராட்சிகளாக, தரம் உயர்த்தப்படுகின்றன. இது தொடர்பாக, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, அரசு அதிகாரிகள் தெரி
வித்துள்ளனர்.
ஆசிரியர்கள் வெள்ளி விழா ஆண்டு சந்திப்பு
வேலூர், மே 25- வேலூர் மாவட்டம் சோளிங்கர் அரசினர்பெண்கள் மேனிலைப்பள்ளியில், கடந்த 1992-94 ஆண்டில் ஆசிரியர் பயிற்சி பயின்ற மாணவிகள் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தனர்.சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் அரசு ஆசிரியர்கள் வெள்ளிவிழா ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு திருத்தணி ஒன்றிய முருகப்பட்டு பள்ளி உதவி ஆசிரியர் ஏ.வி.உமாதேவி தலைமை தாங்கினார்.இந்நிகழ்வில், பயிற்றுவித்த ஆசிரியர்கள் வேமன் மற்றும் ஆதிசக்தி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். இதில், தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், அரசுப்பள்ளிகளில் பணியாற்றி கொண்டிருக்கும் 25 ஆசிரியைகள் சந்தித்து, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஒன்றியத்தில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். பங்கேற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில்,மேல்பாடி தலைமை ஆசிரியர் த.ரஜினிநன்றி கூறினார்.