tamilnadu

ராசிபுரத்தில் குழந்தைகள் விற்கப்பட்ட சம்பவம்: தாராபுரம் தனியார் மருத்துவமனைக்கு தொடர்பா?

தாராபுரம், ஏப்.28 -ராசிபுரத்தில், குழந்தைகள் விற்கப்பட்ட சம்பவத்திற்கு தாராபுரம் தனியார் மருத்துவமனைக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்த அமுதவள்ளி. இவர் குழந்தைகளை விற்கும் இடைத்தரகராக செயல்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினரும், சுகாதார பிரிவு அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை குழந்தைகளை விற்றது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமுதவள்ளி இலங்கையை சேர்ந்த தம்பதிகளுக்கு விற்கப்பட்ட குழந்தை தாராபுரம், பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவம் நடைபெற்றதாக மருத்துவமனை பதிவேடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு தாராபுரம் நகராட்சி சுகாதார பிரிவில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும் தாராபுரம் தனிப்பிரிவு மற்றும் நுண்ணறிவு பிரிவு காவலர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சென்னையில் உள்ளதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறினார்கள். மேலும் தனிப்படை காவலர்கள் மருத்துவமனையின் ஊழியர்களை விசாரித்தபோது தற்போது பணியாற்றும் ஊழியர்கள் பணியில் சேர்ந்து 3 மாதம்தான் ஆகிறது என தெரிவித்தனர். இதனால் தங்களுக்கு 2014 ஆம் ஆண்டு நடந்த எந்த விபரமும் தெரியாது எனவும், ஆவணங்கள் உள்ள அறை பூட்டப்பட்டுள்ளது என கூறினர். மேலும் கணினியில் பதிவுகள், ஒரு ஆண்டுக்கான பதிவுகள் மட்டுமே உள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில் தனிப்பிரிவு காவல்துறையினர் மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு தகவல் அளித்துள்ளார். தலைமை மருத்துவர் சென்னையில் இருந்து தாராபுரம் வந்தபிறகு தலைமை மருத்துவரிடம் விசாரித்தால்தான் இச்சம்பவத்தில் மருத்துவமனைக்கு உள்ள தொடர்பு குறித்து தெரியவரும் என கூறப்படுகிறது. ராசிபுரம் சம்பவத்தில் தாராபுரத்திற்கும் தொடர்புள்ளது என்கிற செய்தி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

;