tamilnadu

திருப்பூர் தொகுதியில் தீராத பிரச்சனைகள் ஏராளம்: நாடாளுமன்றத்தில் கே.சுப்பராயன் குரல் ஓங்கி ஒலிக்கும்

 திருப்பூர், ஏப். 13 –திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை தீராத பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு வெற்றிவாய்ப்பு உறுதியாகி இருக்கும் நிலையில், இத்தொகுதி பிரச்சனைகளைத் தீர்க்கும் இவரது குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், பவானி, அந்தியூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன. மொத்த வாக்காளர்கள் 15 லட்சத்து 29 ஆயிரத்து 836 பேர். இதில் ஆண்கள் 7 லட்சத்து 62 ஆயிரத்து 935 பேர், பெண்கள் 7 லட்சத்து 66 ஆயிரத்து 765 பேர், மூன்றாம் பாலினத்தார் 136 பேர் உள்ளனர்.கடந்த 2008ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் முதல் முறை 2009ஆம் ஆண்டு சி.சிவசாமி (அதிமுக), 2014ஆம் ஆண்டு சத்தியபாமா (அதிமுக) ஆகியோர் எம்.பி.க்களாக இருந்துள்ளனர். திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு ஆகிய இரு சட்டப் பேரவை தொகுதிகள் மட்டுமே திருப்பூர் வருவாய் மாவட்டத்தைச் சேர்ந்தது. மற்ற நான்கு சட்டப்பேரவை தொகுதிகளும் ஈரோடு வருவாய் மாவட்டத்தைச் சேர்ந்தவையாகும்.


திருப்பூரில் பிரதானமாக பின்னலாடைத் தொழிலும், பவானி, பெருந்துறை தொகுதிகளில் விசைத்தறி தொழிலும் உள்ளன. பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட குன்னத்தூரில் ஆழ்குழாய் அமைக்கும் ரிக் லாரி தொழிலும் உள்ளன. இதைத் தவிர கோபி, அந்தியூர் உள்ளிட்ட இத்தொகுதியின் பிற பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளது. ஆக தொழிலும், விவசாயமும் ஏறத்தாழ சம முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த தொகுதியின் அமைப்பு உள்ளது.பின்னலாடை, விசைத்தறி ஜவுளித் தொழிலைப் பொறுத்தவரை ஏற்கெனவே மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை கொடூரமான தாக்குதலாக இருந்தது. திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் தொழிற்சாலைகள் இருந்தாலும், பெரியளவு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அதிகபட்சம் நூறு தொழிற்சாலைகள் இருக்கும். ஏறத்தாழ 4 ஆயிரம் நிறுவனங்கள் சிறு, குறு நிறுவனங்கள்தான். பின்னலாடைத் தொழிலில் ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட ஜாப் ஒர்க் துணைத் தொழில் பிரிவுகள் உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு இடையே ரொக்கப் பரிவர்த்தனைதான் நடைபெற்று வந்தது. மோடியின் நேரடி பணமதிப்பு நீக்க தாக்குதலால் பனியன் தொழில் ஸ்தம்பித்துப் போனது. அதில் இருந்து மீள்வதற்கே நான்கைந்து மாதங்கள் ஆனது. 2016 நவம்பரில் தொடங்கி 2017 ஏப்ரல், மே வரை சிறுகச் சிறுக இந்த நிறுவனங்கள் மீடேறி வந்தன.


அதற்குள்ளாக 2017 ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி விதிப்பு திணிக்கப்பட்டது. தள்ளாடி கீழே விழுந்த நிறுவனங்கள் தட்டுத்தடுமாறி எழுந்து நிற்க தொடங்கியபோது ஜிஎஸ்டி வரி விதிப்பு படுகுழியில் தள்ளிவிட்டது.ஜிஎஸ்டி ஒற்றை வரி விதிப்பினால் பொருட்கள் விலை குறையும், வரி செலுத்தும் நடைமுறை எளிதாகும் என்று நம்பி அதை வரவேற்ற உற்பத்தியாளர்கள் மத்திய அரசின் குளறுபடி நடவடிக்கையால் கதிகலங்கிப் போனார்கள். அதன் நடைமுறை பலருக்கு இன்று வரை பிடிபடவே இல்லை. ஆடிட்டர்கள் கூட திணறி திக்குமுக்காடி வருகின்றனர். இது போதாதென்று பிடித்தம் செய்த வரித் தொகை ரீபண்ட் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், பலருக்கு ரீபண்ட் கிடைக்கவில்லை. இந்த நடைமுறையில் ஒரு பகுதி கம்பெனி இயங்குவதற்கான நடைமுறை முதலீட்டுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஜாப் ஒர்க் மற்றும் வீட்டுத் தொழிலாக குடும்பத்தார் செய்து வந்த பனியன் தொழிலில் பலர் தொழிலைக் கைவிடும் நிலை ஏற்பட்டது. ஈரோடு சந்தைக்குச் செல்வோரும், திருப்பூர் காதர்பேட்டை சந்தையும் மோடி அரசின் துல்லியத் தாக்குதலில் நிலைகுலைந்து கீழே வீழ்ந்துவிட்டது.தொழில் செய்வோர் நிலை இதுவென்றால் தொழிலாளர்கள் நிலை அதைவிட மோசம். பணமதிப்பு நீக்கம் பெண் தொழிலாளர்களை அவர்களது சிறுசேமிப்பை தாக்கியது. குடும்பம் நடத்த முடியாத நிலையில் அவர்கள் பேதலித்துப் போனார்கள். அவர்கள் பெற்ற சுயவுதவிக்குழு, மைக்ரோ பைனான்ஸ் நிறுவனக் கடன்களை அடைக்க முடியாமல் வசைச் சொல்லுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது.


சுருக்கமாகச் சொல்வதென்றால் வேலைவாய்ப்பு நகரம் திருப்பூர் கட்டிடங்கள் காலியாக வாடகைக்கு குடோன்கள் உள்ளன என்ற நிலைதான் இப்போது நிலவுகிறது. திருப்பூர் ஏற்ற வற்றாத காமதேனுவின் அடிமடியில் கைவைத்த மோடி அரசை மன்னிப்பதற்கு திருப்பூர் மக்கள் தயாராக இல்லை.இதே நிலைதான் பவானி ஜமுக்காளம் தொழிலுக்கும், விசைத்தறி தொழில்களுக்கும் பணமதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டியும் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இன்னும் மீள முடியவில்லை.வேலையில்லா திண்டாட்டம் என்பது இந்த தொகுதியின் மிக முக்கியப் பிரச்சனையாகும். குறிப்பாக பெருந்துறை தொகுதிக்குள் 10 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதேபோல் திருப்பூரிலும் பல கல்லூரிகள் உள்ளன. படித்துவிட்டு வந்தவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு இங்கே இல்லை. ஸ்விக்கி, ஜூமாட்டோ, டோமினோஸ் என ஆன்லைன் பதிவு மூலம் உணவுகளை வீட்டுக்குக் கொண்டு வந்து தரும் நிறுவனங்களின் முத்திரையுடன் கூடிய சீருடை அணிந்தவர்களாக இருசக்கர வாகனங்களில் இங்குமங்கும் விரைந்து செல்லக்கூடிய இளைஞர்கள் ஒவ்வொருவரும் பட்டதாரிகள். பொறியியல் பட்டம், எம்பிஏ, எம்சிஏ படித்தவர்கள் கூட இதுபோன்ற வேலைகளைச் செய்யும் நிலைதான் உள்ளது.விவசாயப் பகுதிகளில் மானாவாரி விவசாய சாகுபடி என்பது பொய்த்து போனது.


பருவமழை குறைவு, வறட்சி காலத்தில் உரிய நிவாரணம் கிடைப்பதில்லை. மத்திய அரசின் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளை வஞ்சித்து ஏமாற்றும் மிகப்பெரும் மோசடித் திட்டமாக உள்ளது என்று விவசாயிகள் குமுறுகின்றனர். கடன் வலையில் சிக்காத விவசாயிகளே இங்கு இல்லை.அந்தியூர், பவானி கோபி பகுதிகளிலும் விவசாய நெருக்கடி கடுமையாக உள்ளது. கடைக்கோடி கிராமங்கள் வரை மோடியின் பணமதிப்பு நீக்கம் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதை, இந்த வட்டார கிராமவாசிகள் மோடியின் மீது வெளிப்படுத்தும் கோபத்தில் உணர முடிகிறது. இது போக சமீப காலத்தில்ஏற்பட்ட தாக்குதலான கேபிள் டிவி கட்டணம் குறைந்த பட்சம் ரூ.250 ஆக உயர்த்தி இருப்பதும், சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை நேரடி வங்கிக் கணக்கில் செலுத்துவதாகச் சொல்லி ரூ.1000 வரை உயர்த்தி இருப்பதும் பெண்களின் ஏகோபித்த கோபத்தை மத்திய அரசின் மீது குவித்துள்ளது.நான்கு வழிச்சாலை பாஜக அரசின் சாதனை என்று சொல்லிக் கொண்டாலும், கோவை – சேலம் நெடுஞ்சாலையில் செங்கப்பள்ளி – குமாரபாளையம் இடையிலான நான்குவழிச் சாலையில் இருபுறமும் இருக்கக்கூடிய கிராமப்புற மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்காக போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். பெருந்துறை நகரை மையப்படுத்திநான்கு வழிச்சாலையில் இணைப்புச் சாலை இல்லாமல்,மேம்பாலமோ, குறுக்கே கடந்து செல்ல தரைமட்டப்பாலமோ இல்லாததால் ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன.


கடந்த ஐந்தாறு ஆண்டு காலத்தில் ஏறத்தாழ 600 பேர் இந்த சாலையில் நடைபெற்ற விபத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர். 1000 பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர். மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் இப்பகுதி உள்ளது. மக்களின் உயிரைத் துச்சமென மதிக்கும் இந்த நிர்வாகம் மாற்று ஏற்பாடு, பாலம் கட்டுவதில் கவனம் செலுத்தவில்லை. இதுவரை இருந்த அதிமுக எம்.பி.க்கள் இப்பிரச்சனையைத் தீர்க்கவில்லை. அந்தியூர் பகுதியில் விவசாய பாசனத்திற்கும், குடிநீருக்கும் மேட்டூரில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் பற்றி நீண்ட காலமாகப் பேசப்பட்டாலும் ஆளும் ஆட்சியாளர்கள் இதைப்பற்றி எதுவும் செய்யவில்லை. இதுபோல் எண்ணற்ற பிரச்சனைகள் இந்த தொகுதியில் குவிந்து கிடக்கின்றன. இவற்றின் மீது வலிமையான குரல் கொடுத்து மத்திய அரசின் கவனத்தை ஈர்த்து தீர்க்க வேண்டிய தேவைஉள்ளது.தற்போது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து வரும் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் முன்னாள் அமைச்சர் என்ற நிலையில், அவரை வெற்றி பெறச் செய்ய செங்கோட்டையன், கருப்பணன் மற்றும் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் தலைமையில் வேலை செய்கின்றனர். ஆனால் பணத்தை நம்பி இருக்கும் ஆளும் கட்சி, பாஜகவுடன் கூட்டணி என்பதைச் சொல்லாமல் ஓட்டு வாங்கப் பார்க்கிறது. மோடியின் பெயரைச் சொன்னாலே ஓட்டு கிடைக்காது என்பதை தெளிவாக புரிந்துள்ளனர்.


ஆனாலும் பண பலத்தை நம்பியே இருக்கின்றனர். அதேசமயம் மோடியின் மீதும், அவரது சொல்படி ஆடும் எடப்பாடி அரசின் மீதும் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மறுபடியும் தப்பித்தவறி மோடி ஆட்சி வந்துவிடக் கூடாது என்று அச்சத்துடன் கூடிய கோபம் மக்களிடம் இருக்கிறது. எனவே இம்முறை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளனர். மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகள் பொதுவாக நடுநிலையாக பேசுவது போல் காட்டிக் கொண்டாலும் அவர்கள் மோடிக்கு எதிரான கோபத்தை திசை திருப்பி ஓட்டைப் பிரித்துவிடுவார்கள் என்றும் வாக்காளர்கள் புரிந்து வைத்திருக்கின்றனர். அமமுக சார்பில் போட்டியிடும் செல்வம் அதிமுகவின் முன்னாள் நிர்வாகி, அக்கட்சியின் நிர்வாகிகள், அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்தவர் என்பதால் அதிமுகவின் தேர்தல் “உத்தி” அவருக்கும் தெரியும் என்பதால் அதிமுக வாக்குகளை பிரிப்பார் என்றும் அதிமுகவினரே கூறுகின்றனர். இந்த நிலையில் மக்களின் கோபம் அரசியல்ரீதியாக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் கே.சுப்பராயனுக்கு ஆதரவாக ஒருமுகமாக குவிந்து வருகிறது. எனவே கே.சுப்பராயனின் கதிர் அரிவாள் சின்னத்துக்கு மிகப்பெருவாரியான வாக்குகள் கிடைக்கும் என்பது உறுதி. இதை மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தோரும் ஒப்புக் கொள்கின்றனர். எனவே திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் கொட்டிக் கிடக்கும் பிரச்சனைகளைத் தீர்க்கும் சுப்பராயன் குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் என்று உறுதியாக நம்பலாம்.          

(ந.நி)

;