அவிநாசி, மே 4-அவிநாசி அடுத்த கருவலூரில் வாரச்சந்தை ஏலம்முதிர்வு காலம் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முடிவடைந்த நிலையில், ஏலதாரர் தொடர்ந்து வாடகை வசூலித்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவிநாசி அடுத்த கருவலூர் ஊராட்சியில் வாரச்சந்தை மாரியம்மன் கோயில் பின்புறம்50க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த சந்தைவாரந்தோறும் வெள்ளியன்று நடைபெறும்.இந்த வாரச்சந்தையின் குத்தகை காலம் ஏப்ரல் 10ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால் தற்போது வரை கடைகளுக்கு வாடகையை பழைய ஏலதாரர் வசூலித்து வருகிறார். இதுகுறித்து ஊராட்சிசெயலாளரிடம் கேட்டபோது, பழைய ஏலதாரருக்கு இரண்டு மாத காலம் வசூலிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவு வழங்கி உள்ளது. அதன்படிதான் வாடகை வசூலித்துக் கொண்டு இருக்கிறார். மேலும் வாடகை வசூலிப்பதற்கு அரசாணை உள்ளதாகவும் கூறினார் இதுசம்பந்தமாக ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாந்தி லட்சுமியிடம் தெரிவித்தபோது, பஞ்சாயத்து மூலமாகத்தான் வாடகை வசூல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பழைய ஏலதாரர் வசூல் செய்யவில்லை என கூறினார். இதுகுறித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், வருடந்தோறும் தேர் திருவிழாவிற்கு முன்பாக ஏலம் நடைபெறும். ஆனால் இந்தாண்டு தேர்தல் நடைபெறுவதால் வாரச்சந்தை ஏலம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வாரச்சந்தை வாடகையை பஞ்சாயத்து நிர்வாகம் தான் வசூலிக்கும். ஆனால் தற்போது பழைய ஏலதாரரே வாடகை வசூலித்து வருகிறார். ஊராட்சி செயலாளர் பழைய ஏலதாரருக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக ஊராட்சி செயலாளர் மீது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் தலையீடு செய்து வாடகை வசூலிப்பதை தடுக்க வேண்டும். முறையான ஏலம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.