tamilnadu

துணி விற்பனையாகாமல் தேக்கம் எதிரொலி ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்திக் குறைப்பு

திருப்பூர், ஜூன் 4 -ஜவுளிச் சந்தையில் விசைத்தறி துணி விற்பனையாகாமல் தேங்கி இருப்பதாலும், நூல் விலை உயர்ந்து வரும் நிலையில் துணிக்குக் கட்டுபடியான விலை கிடைக்காத நிலையிலும் ஜவுளி உற்பத்தியை குறைப்பது என்று பல்லடம், திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.நூல் விலையை சீராக வைத்திருக்க வலியுறுத்தியும், மூலப்பொருளான கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்தி, உற்பத்தி பொருட்களான காடா துணியை ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் திருப்பூர், பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் செவ்வாய்க்கிழமை முதல் 25 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளனர். உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தாலும் குறைந்தபட்ச உற்பத்தி நடைபெறும் என்று விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் தரப்பில் கூறப்படுகிறது. எனவே உற்பத்தி நிறுத்தம் என்பதைக் காட்டிலும் உற்பத்திக் குறைப்பாகவே ஜவுளி உற்பத்தியாளர்களின் முடிவு அமலாகும்.இதனால் நாள் ஒன்றுக்கு 25 லட்சம் மீட்டர் காடா துணி உற்பத்தி பாதிப்படையும், 10 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகும் என்றும், நேரடியாக 1 லட்சம் விசைத்தறித் தொழிலாளர்களும், மறைமுகமாக 50 ஆயிரம் தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு பாதிப்பைச் சந்திப்பார்கள் என்றும் விசைத்தறி ஜவுளி வட்டாரத்தினர் தெரிவித்தனர்.குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே விசைத்தறி ஜவுளி விற்பனை மந்தமான நிலையில் இருந்தது என்றும், தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஜிஎஸ்டி வரி விதிப்பில் 5 சதவிகிதம் என்பதில் இருந்து மாற்றம் ஏற்படும், அப்போது ஜவுளி வியாபாரம் வேகமடையும் என்று எதிர்பார்த்ததாக உற்பத்தியாளர்கள் கூறினர். ஆனால் தேர்தல் முடிந்து மீண்டும் பாஜக அரசே பொறுப்பேற்றிருக்கும் நிலையில், ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பதால் ஜவுளி வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அத்துடன் நூல் விலை உயர்ந்து வருகிறது. சந்தையில் துணி விற்பனையாகாமல் தேங்கியிருக்கும் நிலையில் கூடுதல் விலை கொடுத்து நூல் வாங்கி துணியை உற்பத்தி செய்து வைத்தாலும் மேலும் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும் என்பதால் உற்பத்தி குறைப்பு நடவடிக்கையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் ஈடுபட்டிருப்பதாக அந்த வட்டாரத்தினர் தெரிவித்தனர்.