tamilnadu

img

பழைய திருப்பூர் அல்ல; புதிய திருப்பூராக மாறி இருக்கிறது புதிய முறையில் தொழிலாளர்களை சங்கமாக்க வேண்டும்

திருப்பூர், மே 20 -பழைய திருப்பூர் இப்போது இல்லை, புதிய திருப்பூராக மாறி இருக்கிறது. பழைய முதலாளிகள் இல்லை, புதிய முதலாளிகள் வந்திருக்கிறார்கள். புதிய சூழலில், புதிய முறையில் தொழிலாளர் கோரிக்கைகளை உருவாக்கி சங்கத்தை வலுப்படுத்த வேண்டும்என்று சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.திருப்பூர் பனியன், பொதுத் தொழிலாளர் சங்கத்தின் 37ஆவது தலைமை மகாசபை காந்திநகர் எம்.சி.மஹாலில் திங்களன்று நடைபெற்றது. இதில் சங்கத் துணைத் தலைவர் கே.காமராஜ் செங்கொடியை ஏற்றி வைத்தார். தலைவர் சி.மூர்த்தி தலைமை ஏற்று உரையாற்றினார். செயலர் கே.நாகராஜ் வரவேற்றார். பொதுச் செயலாளர் ஜி.சம்பத், பொருளாளர் ஏ.ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் அறிக்கையை முன்வைத்து பேசினர். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினார். இம்மகாசபையை தொடக்கி வைத்து எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், மாறியுள்ள சூழலுக்கு ஏற்ப தொழிலாளர்களின் குடியிருப்பு, மருத்துவம், நிர்வாகத்தில் பங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை சிஐடியு உருவாக்கி உள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சங்கமாக அணிதிரட்டி வருகிறது. புதிய போராட்டங்கள் உருவாகி வருகின்றன. பாரம்பரியம் மிக்க திருப்பூரின் தொழிற்சங்க போராட்ட அனுபவத்தை தற்போதுள்ள சூழலில் இங்கு வந்துள்ள பிற மாநிலத் தொழிலாளர்களையும் அணிதிரட்டும்போது, அவர்கள் மூலம்அது இந்தியா முழுவதும் வழிகாட்டுவதாக இருக்கும் என்று எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

தீர்மானங்கள்

திருப்பூரில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களில் பெரும்பாலோருக்கு சட்ட உரிமைகள், சலுகைகள் அமலாக்கப்படுவது இல்லை. எனவே வருகைபதிவேடு, ஈஎஸ்ஐ,பிஎப்,வாரவிடுமுறை, தொழிற்சாலை சட்டப்படி உணவுக்கூடம், ஓய்வறை, கழிப்பிட வசதி, சம்பளப் பட்டியல், பண்டிகை விடுமுறை, மிகைநேர வேலைக்கு இரட்டிப்புச்சம்பளம் போன்றவற்றை அமலாக்க வேண்டும் முடங்கிப்போயுள்ள தொழிற்சாலை ஆய்வாளர் அலுவலகம் முழு வீச்சுடன்செயல்பட்டு சட்ட உரிமைகளை அமலாக்குவதை உறுதிப்படுத்த நடவடிக்கைஎடுக்க வேண்டும்.பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி இரண்டாவது முறையாக அடிக்கல் நாட்டிய ஈஎஸ்ஐ மருத்துவமனை கட்டுமானப் பணி இதுவரை தொடங்கப்படவில்லை. இம்மாவட்டத்தில் உள்ள பல லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற உடனடியாக ஈஎஸ்ஐமருத்துவமனையைத் தொடங்க வேண்டும், நாளொன்றுக்கு 8 மணிநேர வேலைக்கு மாதம் ரூ.18 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம்வழங்க வேண்டும், சட்டவிரோதமாக தினமும் 12 முதல் 16 மணிநேரம் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதை தடுத்து சட்டப்படியான 8 மணி நேர வேலையைஅமல்படுத்த வேண்டும். தொழிலாளர் உரிமையைப் பறிக்கும் காண்ட்ராக்ட் முறையை கைவிட வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர் நலப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.காஞ்சிபுரத்தில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள்தயாரிக்கும் தொழிற்சாலையில், தொழிற்சங்க உரிமைக்காகப் போராடிய சிஐடியு மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் உள்ளிட்ட தொழிலாளர்கள் 145 பேர் மீதுவழக்குப் பதிவு செய்து சிறையில்தள்ளும் நடவடிக்கையைக் கண்டித்தும், போராடும்தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பனியன் தொழிலாளர் மகாசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய நிர்வாகிகள் தேர்வு

இதைத்தொடர்ந்து சங்கத்தின்தலைவராக சி.மூர்த்தி, பொதுச்செயலாளராக ஜி.சம்பத், பொருளாளராக ஏ.ஈஸ்வரமூர்த்தி, துணைத் தலைவர்கள் எம்.சந்திரன், சந்திரசேகர், பாண்டியராஜ், பாரதி, செயலாளர்கள் எம்.என்.நடராஜ், கே.நாகராஜ், ஆர்.மாணிக்கம், ஜெ.சங்கர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 22 பேர், பார்வையாளர்கள் 10 பேர்தேர்வு செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, சிஐடியு மாநில உதவித் தலைவர் எம்.சந்திரன் மகாசபையை நிறைவு செய்து வைத்துப் பேசினார். முடிவில் பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறினார்.