tamilnadu

நீட் தேர்வு: திருப்பூர் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள் 13 சதவிகிதம் மட்டுமே தேர்ச்சி: 87 சதவிகிதம் தோல்வி

திருப்பூர், ஜூன் 7- திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 480 பேர் நீட் தேர்வு எழுதியதில் 62 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர். 418 பேர் தோல்வி அடைந்தனர். தேர்வெழுதியதில் 13 சதவிகிதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்த நிலையில், 87 சதவிகிதம் பேர் தோல்வி அடைந்தனர். நீட் தேர்வு என்பது சாதாரண, ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை தகர்க்கிறது. பெருநகரங்களில் வசதி படைத்த, மத்திய பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களும், ஆண்டு முழுவதும் நீட் பயிற்சி வகுப்புக்கு பல லட்சம் கட்டணம் செலுத்தி படிக்க வசதியுள்ள மாணவர்களுக்கும்தான் மருத்துவம் படிக்க வாய்ப்பளிக்கிறது என்று தமிழகத்தில் எதிர்க்கட்சிகளும், பல்வேறு கல்வியாளர்களும், மாணவர் அமைப்புகளும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 87 சதவிகிதம் பேர் தோல்வி அடைந்திருப்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றது. கடந்த கல்வி ஆண்டில் சிறப்பான தேர்ச்சி விகிதம் பெற்றிருந்தும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு சிறப்பு நீட் பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தியும் கூட 13 சதவிகிதம் பேர் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடிந்திருக்கிறது என்பது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பட்டவர்த்தனமாகக் காட்டுவதாக உள்ளது. இதிலும் அவிநாசி அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் எஸ்.வசந்தகுமார் 720 மதிப்பெண்ணுக்கு  200 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். ஆனால் இந்த மதிப்பெண்ணுக்கு அரசு மருத்துவக்  கல்லூரியில் வாய்ப்புக் கிடைக்காது. இவரது தந்தை செந்தில்குமார் திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அரசு பள்ளியில் நீட் பயிற்சி பெற்றும் கூட குறைவான மதிப்பெண்களையே பெற முடிந்திருக்கிறது. நீட் தேர்வில் 420க்கு மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்குத்தான் அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படியானால் திருப்பூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த 13 சதவிகிதம் பேரில் ஒருவர் கூட அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முடியாது என்பதே கசப்பான உண்மை. நீட்டில் தேர்ச்சி பெற்றாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பெருமளவு கட்டணம் கொடுத்துத்தான் மருத்துவப் படிப்பில் சேர முடியும். அதற்கும் பலருக்கு வாய்ப்பிருக்காது என்பதே எதார்த்த நிலையாக உள்ளது.  முதலிடம் பெற்ற வசந்தகுமார் கூறுகையில், தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து ஓராண்டுக்குத் தனியாக பயிற்சி பெறப் போவதாக தெரிவித்தார்.  இது ஒருபுறம் இருக்க திருப்பூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களில் நீட் தேர்வில் பங்கேற்றோர், தேர்ச்சி அடைந்தோர் பற்றிய புள்ளி விபரம் மாவட்ட கல்வித்துறையிடம் இல்லை. அந்த விபரம் கிடைத்தால்தான் தனியார் பள்ளிகளில் குறிப்பாக சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்தவர்களில் எத்தனை பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்ற விபரத்தை அறிய முடியும்.  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, மொத்த தமிழகத்தின் நிலை எப்படி இருக்கும் என்பதற்குத் திருப்பூர் மாவட்ட நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் எடுத்துக்காட்டாக உள்ளது. இதில் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களுக்கு, அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு வாய்ப்பு இல்லை என்பது மீண்டும் தெளிவாக நிரூபணம் ஆகி இருக்கிறது. நீட் தேர்வை எதிர்க்க ரிதுஸ்ரீ போன்ற மாணவிகளின் இழப்பு மட்டுமே காரணமாக இல்லை, அதை விடவும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தலைமுறையே மருத்துவப் படிப்புக்கான கதவு மூடப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதுதான் மிகத் துயரமானதும், மாற்ற வேண்டியதுமாகும். அதற்கான போராட்டத்தை விடாமல் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதையே நீட் தேர்ச்சி விகிதம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. - வே.தூயவன்

;