tamilnadu

மே 19 சூலூர் இடைத்தேர்தல் திருப்பூர் மாவட்டத்தில் 16 வாக்குப்பதிவு மையங்கள்

திருப்பூர், ஏப். 11- கோவை மாவட்டம் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இத்தொகுதியின் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 16 வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஆர்.கனகராஜ் மாரடைப்பால் கடந்த 21 ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. எனவே தமிழகத்தில் ஏற்கெனவே காலியாகஇருக்கும் அரவக்குறிச்சி, திருப்பரக்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுடன் சூலூர் தொகுதிக்கும் வரும் மே 19-ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வேட்புமனு தாக்கல் வரும் 22ஆம் தேதி தொடங்குகிறது. சூலூர் தொகுதி இடைத்தேர்தலுக்காக திருப்பூர் மாவட்டத்தில் 16 வாக்குச்சாவடிகள் இடம் பெற்றுள்ளன. இங்கு ஆயத்தப் பணி நடைபெற்று வருகிறது. பள்ளபாளையம் புனிதவளனார் நடுநிலைப்பள்ளி, வேலாயுதம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காளிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சாமளாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கருகம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி என 5 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 16 வாக்குப்பதிவு மையங்களில் திருப்பூர் மாவட்டமக்கள், சூலூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்காக மே 19 ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தற்போது செய்யத் தொடங்கிஇருப்பது குறிப்பிடத்தக்கது.

;