tamilnadu

திருப்பூரில் தீ விபத்து: ரசாயனத்தால் கண் எரிச்சல்

திருப்பூர், ஏப். 12 -திருப்பூரில் கெமிக்கல் குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. இங்குள்ள ரசாயன பொருட்களில் பற்றிய தீயால் அப்பகுதி பொதுக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. திருப்பூர் எஸ்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் ஆண்டிபாளையம் நாச்சம்மாள் காலனி பகுதியில் சாய ஆலைகளுக்கு மொத்தம் மற்றும் சில்லறையாக ரசாயனங்களை விற்பனை செய்து வருகிறார். இவரது நிறுவனத்தில் வியாழனன்று மாலை வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 75க்கும் மேற்பட்ட ஹைட்ரஜன் பெராக்ஸைடு காலி பரல்களில் அதிக வெப்பம் காரணமாக தீப்பற்றியது. இதைப் பார்த்த ஊழியர்கள் உடனடியாகத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் ஹைட்ரஜன் பெராக்ஸைடில் தீ கொழுந்து விட்டு எரிய துவங்கியது. எனவே ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.இதைத் தொடர்ந்து விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் அருகில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான ஹைட்ரஜன் பெராக்ஸைடு ரசாயனங்கள் தீயில் சிக்காமல் தப்பியது. ரசாயனங்களில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஏற்பட்ட புகை மண்டலத்தால் சுற்றுப்பகுதியில் இருந்த பொது மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது என்று கூறினர்.

;