tamilnadu

திருப்பூரில் குடிநீர், சாலை வசதியை மேம்படுத்த மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

திருப்பூர், ஜூன் 15- திருப்பூர் மாநகரில் குடிநீர் விநியோ கத்தை சீர்படுத்துவதுடன், சாலைகளைச் செப்பனிட உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பி.முருகேசன் கோரியுள்ளார். இது குறித்து அவர் சனிக்கிழமை விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதி களில் குடிநீர் விநியோகம் மிக மோசமாக உள்ளது. குறிப்பாக ஒரு வாரத்தில் இருந்து 10, 15 நாட்கள் இடைவெளி விட்டு குடிநீர்  வழங்கப்படுகிறது. இன்னும் சில பகுதி களில் மாதம் ஒருமுறை மட்டும் குடிநீர் வழங்கும் அவலநிலை உள்ளது. எனவே மாநகரின் அனைத்துப் பகுதிகளிலும் சீரான முறையில் அதிகபட்சம் 3 அல்லது 4 நாட்கள் இடைவெளியில் குடிநீர் விநியோகம் செய்வதை உத்தரவாதம் செய்ய வேண்டும். அதேபோல் குப்பை  அகற்றுவதிலும் மெத்தனமாக செயல் படுவதை களைய வேண்டும். பல பகுதி களில் குப்பைகள் வாரக்கணக்கில் அப் புறப்படுத்தாமல் மலை போல் குவிந்து துர் நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது. இதனால்  நோய் தொற்று அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டு உடனடியாக குப்பை  மலைகளை அகற்ற வேண்டும். அப்பகுதி களில் நோய் தடுப்பு மருந்து தெளித்து சுகாதாரம் பேண வேண்டும். நகரில் 4ஆவது குடிநீர் திட்டத்திற்காக அனைத்து பகுதிகளிலும் சாலைகள், தெருக்களில் பள்ளம் தோண்டி புதிய விநி யோக குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வாகன போக்குவரத்து மட்டு மின்றி பாதசாரிகள் நடந்து கூட போக முடி யாதபடி குண்டும், குழியுமாக மேடு பள்ள மாக சீர்குலைந்து கிடக்கின்றன. எனவே அனைத்து சாலைகள், தெருக்களை செப் பனிட்டு முழுமையாக சீர்செய்ய வேண்டும்.

சொத்து வரி உயர்வு
ஏற்கெனவே திருப்பூர் மாநகரில் வீடு,  வணிக கட்டிடங்களுக்கு சொத்து வரியை  உயர்த்துவதாக அதிகாரிகள் மேற் கொண்ட தன்னிச்சை நடவடிக்கை காரண மாக இரண்டு, மூன்று விதமான வரி நிர்ண யிக்கப்பட்டு குளறுபடி உள்ளது. இதிலும் குறிப்பாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்து வரி இனங்களுக்கு நடைமுறைக்கு சாத்தியமில்லாதபடி பல மடங்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக சிலருக்கு 70 மடங்கு, 80 மடங்கு வரைகூட வரி உயர்வு  செய்யப்பட்டுள்ளது. சொத்து மதிப்புக்கு சம்பந்தமின்றி உயர்த்தப்பட்ட இந்த வரி உயர்வை ரத்து செய்யவோ, குறைக்கவோ முடியாது என்றும், கணிப்பொறியில் பதி வேற்றம் செய்து விட்டதால் மாற்ற முடி யாது என்றும் கூறும் அதிகாரிகள் உயர்த்தப்பட்ட வரியை கட்ட வேண்டும்  என்றும் கட்டாயப்படுத்தினர். இந்த  அநியாய வரி உயர்வை ரத்து செய்ய மார்க்சிஸ்ட் கட்சி பல கட்டப் போராட்டங் களை மக்களைத் திரட்டி நடத்தி உள்ளது. எனவே தற்போது இந்த அபரிமித வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். வரிக் குளறுபடிகளை களைந்து மக்கள் தலையில் சுமை ஏற்றாமல் நியாயமான வரியை சீராக நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு மாநகரக்குழு சார்பில் செயலாளர் பி.முருகேசன் மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி உள்ளார்.

;