tamilnadu

img

அரசு கல்லூரியில் பாஜகவினர் அராஜகம்: மாணவிகள் பதிலடி

திருப்பூர் அரசு கல்லூரிகளில் ஆள் சேர்க்க அத்து மீறி அராஜக முயற்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் ஈடுபட்டனர். அவர்களிடம் மாணவிகள் நோட்டீஸ் வாங்க மறுத்ததுடன், அவர்களை எதிர்த்துப் பேசி புறக்கணித்துச் சென்றனர். இதனால் அவமானப்பட்டு அவர்கள் திரும்பும் நிலை ஏற்பட்டது.
பல்லடம் அருகே பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் கூட்டம் வரும்  17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியையொட்டி  மாவட்டம் முழுவதும் பாஜகவினர் லட்சக்கணக்கில் விளம்பரத்திற்காக செலவு செய்து  தட்டிகள் வைத்துள்ளனர். அத்துடன் கல்லூரி மாணவர்களையும் இந்த கூட்டத்துக்கு வர வைப்பதற்கு என வெள்ளிக்கிழமை  ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
திருப்பூர் எல்ஆர்ஜி அரசுக் கல்லூரி மற்றும் சிக்கண்ணா அரசு கல்லூரியில் "செல்ஃபி வித் அண்ணா " போட்டிக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறும் என சமூக ஊடகங்களில் பாஜகவினர் விளம்பரம் செய்திருந்தனர்.
அரசு கல்லூரி வளாகத்தில் அரசியல் கட்சி நிகழ்ச்சியா என்ற கேள்வியுடன் எல்ஆர்ஜி மற்றும் சிக்கண்ணா கல்லூரி முதல்வர்களை ஊடகத்தினர் தொடர்பு கொண்டனர். அத்தகைய நிகழ்ச்சி நடத்துவதாக யாரும் அணுகவில்லை, யாருக்கும் அனுமதி எதுவும் தரவில்லை என்றும் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எல்ஆர்ஜி மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் மெய்.இரெ.எழிலி, சிக்கண்ணா அரசு கல்லூரி முதல்வர் முனைவர் வ.கிருஷ்ணன் இருவரும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், கல்லூரி கல்வி இணை இயக்குநர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பினர்.
இந்த நிகழ்ச்சி குறித்து பாஜகவினரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கல்லூரிக்குள் நடத்தவில்லை, கல்லூரிக்கு வெளியே நடத்துகிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் சமூக ஊடகத்தில் கல்லூரிக்குள் நடத்துவதாக தகவல் பரப்பியது பற்றி கேட்டபோது பதில் கூறாமல் மழுப்பிவிட்டனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பாஜக நிர்வாகிகள் சிலருடன், மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் சிலர் கல்லூரி நுழைவாயில் அருகில் டேபிள் அமைத்து, அண்ணாமலை உருவ கட் அவுட் ஒன்றையும் வைத்து நின்று கொண்டிருந்தனர். எனினும் பிரதான வாயிலை காவல் துறையினர் ஆலோசனையின் பேரில் கல்லூரி நிர்வாகத்தினர் பூட்டி விட்டனர். வகுப்பு முடிந்து வெளியேறிய மாணவிகளை பக்கவாட்டு வாசல் வழியாக வெளியே அனுப்பினர். உடனே பாஜகவின் மாவட்டச் செயலாளர் செந்தில்வேல் உள்ளிட்ட சிலர் அத்துமீறி கல்லூரிக்குள் நுழைந்து சென்று அங்கிருந்த பேராசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அங்கு வந்து அவர்களை வெளியே செல்லும்படி கேட்டுக் கொண்டனர். பின்னர் காவல் துறையினர் கேட்டுக்கொண்டபடி பிரதான நுழைவாயில் திறக்கப்பட்டது.
அதன் பிறகு கல்லூரியை விட்டு வெளியே வந்த மாணவிகளிடம் பாஜகவினர் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அவர்களைப் பார்த்து பல மாணவிகள் விலகிச் சென்றனர். வலுக்கட்டாயமாக அவர்களிடம் சென்று பாஜக பெண்கள் நோட்டீஸ் கொடுத்தனர். அப்போது சில மாணவிகள் தேர்வு உள்ள சமயத்தில் தங்களுக்கு இது போன்ற இடையூறுகளை எதற்காக ஏற்படுத்துகிறீர்கள், வெளியே வர முடியாத சூழலுக்கு பாஜகவினர் தங்களை உள்ளாக்குவதாக குற்றம் சாட்டினர். சில மாணவிகள் எதிர்த்து நின்று பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் பாஜகவினர் திணறிய நிலையில் காவல் துறையினர் அவர்களை சமாதானபடுத்தினர்.
அத்துடன் கல்லூரிக்கு முன்பாக இது போன்ற பிரச்சார நிகழ்ச்சி நடத்த போலீசாரிடம் அனுமதி பெறாததால் கலைந்து போகும்படி காவல் துறையினர் எச்சரித்தனர். இதையடுத்து பாஜகவினர் அங்கிருந்து வெளியேறினர். அதன் பிறகு அருகாமையில் இருந்த கடைகளில் நின்று கொண்டிருந்த மாணவிகளிடம் பாஜகவினர் வலுக்கட்டாயமாகச் சென்று நோட்டீஸ்களைத் திணித்தனர். எனினும்  மாணவிகள் அதைப் பெறாமல் விலகிச் சென்றனர். கட்டாயப்படுத்திய நிலையில் சிலர் வேண்டா வெறுப்பாக நோட்டீஸை வாங்கி கீழே போட்டு விட்டு சென்றனர்.
கல்லூரி வளாகத்தில் தனிப்பட்ட அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்ற விதிமுறை இருந்தும் பாஜகவினர் மேற்கொண்ட இந்த இழி முயற்சிக்கு மாணவிகள் புறக்கணிப்பு செய்தது சரியான பதிலடியாக இருந்தது.