tamilnadu

படிப்பை தொடர முடியாத மாணவிக்கு ஆட்சியர் உதவி

 திருநெல்வேலி, மே 18-படிப்பை தொடர முடியாத மாணவி ஜெனிபர் என்பவருக்கு நெல்லை மாவட்டஆட்சியர் ஷில்பா பிரபாகர் உதவியால் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்துள்ளது. தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின்மூலம் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கென்று மாவட்டத்தில் 14 இடங்களில் சிறப்புப் பயிற்சி மையங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சிறப்புப் பயிற்சி மையங்களில் பயிலும் குழந்தைகள் இரண்டு வருடங்கள் கல்வியில் ஆர்வமூட்டப்பட்டு, முறையான பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள்.இத் திட்டத்தின் மூலம் இதுவரை 5,596 குழந்தைகள் முறையான பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 5,534 குழந்தைகள் வாழ்க்கைக் கல்வியுடன் தொழிற்கல்வி பயின்று வெளியேறியுள்ளார்கள். முறையான பள்ளியில் சேர்க்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் தற்போது மேற்படிப்பு பயின்று வருகிறார்கள். 2012 ஆம் ஆண்டு முறையான பள்ளியில்சேர்க்கப்பட்ட மாணவி ஜெனிபர், தற்போதுமேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்ச்சி பெற்று 488 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இம்மாணவி வறுமையின் காரணமாக மேற்படிப்பை தொடர முடியாத சூழ்நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியரை அணுகினார்.நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர் சதீஷ், மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில், எம்இடி கல்லூரிகளின் நிறுவன தலைவர், தங்கள் நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் பைன் ஆர்ட்ஸ் கல்லூரியில் இலவசமாக பேசன் டிசைனிங் நான்காண்டு பட்டப்படிப்பு பயிலஅனுமதி அளித்துள்ளார். எம்இடி கல்லூரி முதல்வர் செந்தில்குமார்,ஆட்சியர் முன்னிலையில் இலவச பட்டப்படிப்பிற்கான அனுமதி கடிதத்தை மாணவியிடம் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்டஇயக்குநர் சந்திரகுமார் மற்றும் திட்ட மேலாளர், விஸ்வநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

;