tamilnadu

img

நெல்லை கண்ணனுக்கு ஜாமீன்...  மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

திருநெல்வேலி:
பிரதமர் மோடி குறித்து சர்ச்சையான வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் குடியுரிமைப் பாதுகாப்பு மாநாடு, கடந்த மாதம் 29 ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி நெல்லை கண்ணன் மீது திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் பாஜகவினா் புகார் அளித்தனா். அதைத் தொடா்ந்து, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் நெல்லை கண்ணன் மீது மேலப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தப் புகாரின்பேரில், பெரம்பலூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த நெல்லை கண்ணனை, காவல்துறையினர் கடந்த 1  ஆம் தேதி கைது செய்தனா். பின்னா் 2 ஆம் தேதி திருநெல்வேலிமுதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை, இம் மாதம் 13 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவா் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, திருநெல்வேலி இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் கடந்த 3 ஆம் தேதி நெல்லை கண்ணன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து ஜாமீன் வழங்கக் கோரி, திருநெல்வேலி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு மீது மாவட்ட முதன்மை நீதிபதி நசீா் அகமது விசாரணை நடத்தினார். அப்போது அரசு தரப்பில் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்குமாறு கோரப்பட்டது. இதையடுத்து நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

;