tamilnadu

img

சிறுவன் சுஜித்தை மீட்க 4 நாட்களாக நீடித்த மீட்புப் பணி

திருச்சிராப்பள்ளி:
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ்(40), விவசாயி. இவரது மனைவி கலாமேரி. இவர்களுக்கு புனித்ரோஷின்(4), சுஜித்வில்சன்(2) என 2 மகன்கள். இந்நிலையில் ஆரோக்கியராஜ் வீட்டருகே சோளம் சாகுபடி செய்திருந்தார். சோளக்காட்டிற்கு மத்தியில் கடந்த 5 வருடத்திற்கு முன் 600 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தார். அதில் தண்ணீர்வராததால் அந்த ஆழ்துளை கிணற்றில் பிளாஸ்டிக் மூடி போட்டு மூடி வைத்திருந்தார். 

இந்நிலையில் கடந்த 25-ந் தேதி மாலை 5 மணியளவில் ஆரோக்கியராஜின் முதல் மகன் புனித்ரோஷின், சுஜித்வில்சன் ஆகியோர்அருகில் உள்ள பெரியப்பா வீட்டிற்கு சோளக்காட்டு வழியாக சென்றனர். அப்போதுஆழ்துளை கிணறு இருப்பது தெரியாத சுஜித்அதில் தவறி விழுந்துவிட்டான். சுஜித், ஆழ்துளை கிணற்றில் விழுந்ததை அறிந்த அவரது தாயார் கலாமேரி அவரது தந்தை மற்றும் உறவினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த உறவினர் மற்றும் ஊர்மக்கள் அங்கு கூடினர். சுஜித்தை கயிறு கட்டி இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அது பலனளிக்கவில்லை. முதலில் 5 அடி ஆழத்தில் சிக்கி இருந்தசுஜித் நேரம் ஆக, ஆக கீழே குழிக்குள் இறங்கிக் கொண்டிருந்தான். தகவலறிந்த தீயணைப்புநிலைய வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்துவந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களும் கயிறு கட்டி சுஜித்தை மேலே கொண்டுவந்து விடலாம் என முயற்சித்தனர். ஆனால்அது பலனளிக்கவில்லை. உடனடியாக மாவட்ட ஆட்சியர் சிவராசு, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், நடராஜன். வளர்மதி மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் அங்கு வந்தனர். 

மீட்புப் பணிக்காக திருச்சி, நாமக்கல், பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் இருந்துஆழ்துளை கிணறுகளில் இறங்கி மீட்பு பணிகளில் அனுபவம் பெற்ற தன்னார்வ தொண்டர்கள் வந்து கயிறு மூலம் சுஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த முயற்சியும் வெற்றிப் பெறவில்லை. குழந்தை மேலும் கிணற்றின் ஆழத்தில் கீழே இறங்கியது. இதற்கிடையே பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் குழித் தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சி மேற்கொள் ளப்பட்டது. பொக்லைன் இயந்திரம் மூலம் 20 அடி ஆழம் தோண்டிய போது அதற்கு மேல்பாறைகள் இருந்ததால் குழி தோண்ட முடியவில்லை. இதனால் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ரோபோட் மூலம் சுஜித்தை மீட்கும் பணியில்ஈடுபட்டனர். அதுவும் பலன் அளிக்கவில்லை. இந்நிலையில் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர், கடந்த 26-ந் தேதி பகல் 12 மணியளவில் நடுக்காட்டுப்பட்டிக்கு வந்து சேட்டிலைட் மூலம்சுஜித் நிலையை கண்காணித்து மீட்புப் பணிகளை தொடங்கினர். ஆனால் பலனளிக்கவில்லை. இதனிடையே சுரங்கம் தோண்டுவதில் அனுபவம் பெற்ற ஓஎன்ஜிசி, என்எல்சி வல்லுனர்கள் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். குழந்தை சிக்கி இருக்கும் இடம் வரை கேமரா செலுத்தப்பட்டு குழந்தையின் நிலைமை கண்காணிக்கப்பட்டது. 26-ந் தேதி அதிகாலைக்கு பின்னர் குழந்தையின் சுவாசம் குறித்து அறிந்து கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பொக்லைன் மூலம் சுஜித்தை மீட்க முடியாது என உறுதி செய்யப்பட்ட நிலையில் அரியலூரில் இருந்து தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது.  இதன் மூலம் 20 அடி ஆழம் மட்டுமே தோண்டிய நிலையில் அதற்கு கீழே கடினமான பாறைகள் இருந்ததால் அதை துளையிட முடியாத நிலை ஏற்பட்டது. ரிக் இயந்திரமும் அடிக்கடி பழுதானது. இதையடுத்து இதை விட 3 மடங்கு அதிக சக்தியுள்ள மற்றொரு ரிக் இயந்திரம் இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினத்தில் இருந்து ஞாயிறு அன்று இரவு கொண்டு வரப்பட்டது. அதில் கருவிகளை பொருத்தி நள்ளிரவு 12.45 மணிக்கு பணியை தொடங்கினர். ரிக் இயந்திரம் 1.2 மீட்டர் விட்டத்தில் துளையிட்டு வருகிறது. இந்த துளை வழியாக உள்ளே இறங்கி சுஜித்தை மீட்க 3 தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். முதலில் துறையூரை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் ராஜாராமன், தனபால் ஆகியோர் அந்த குழிக்குள் இறங்குவதாக கூறப்பட்டது. மேலும் குழிக்குள் எப்படி இறங்கி சுஜித்தை மீட்க வேண்டும் என ஞாயிறுக்கிழமை அவர்கள் ஒத்திகை பார்த்தனர். குழந்தை சிக்கி இருக்கும் இடத்திற்கு சென்றதும். குழியில் இறங்கும் தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்து போர்வெல் இருக்கும் இடத்திற்கு நவீன உபகரணம் மூலம் குழித் தோண்டி சுஜித்தை மீட்டு மேலே கொண்டு வர திட்டமிடப்பட்டது. இந்நிலையில் ஞாயிறு அன்று இரவு 11.40 மணிக்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி., ஆகியோர் அங்கு வந்து பணிகளை பார்வையிட்டனர். பின்னர் சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். 4-வது நாளான திங்கள்கிழமை காலை வரை 40 அடி ஆழம் மட்டுமே தோண்டப்பட்டது. பாறை கடினமாக இருந்ததால் ரிக் இயந்திரத்தில் துளையிடும் பற்கள் அடிக்கடி உடைந்தன. ஆனாலும் புதிய உபகரணங்களை பொருத்தி பணிகள் தொடர்ந்தது. இதற்கிடையே அவ்வப்போது லேசான மழையும் பெய்தது. தார்ப்பாய் கட்டிக் கொண்டு பணிகளை தொடர்ந்தனர். 

குழந்தை 88 அடி ஆழத்தில் இருப்பதாக வும், இதற்கு கீழே இறங்க விடாதபடி அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் நவீன கருவி மூலம் ஏர்லைக் செய்துவைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஞாயிறு மதியம் 12 மணியளவில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் நவீன தெர்மல் கேமராவைகுழிக்குள் செலுத்தி ஆய்வு செய்த போது சுஜித்தின் உடலில் வெப்ப நிலை எப்போதும் போல இருக்கிறது. எனவே குழந்தை உயிருடன் இருப்பதாகவே தெரிவித்தனர்.  தண்ணீர் இன்றி, உணவின்றி ஒருவரால் 75 மணி நேரம் உயிர் வாழ முடியும் என்றும், அதே நேரத்தில் பயத்தின் காரணமாக சுஜித்திற்கு ஆபத்து நேரிடலாம் என்றும் மருத்துவர்கள் கூறினர். ஆனாலும் நம்பிக்கையுடன் 4-வ து நாளாக திங்களன்று மீட்புப் பணி நடைபெற்றது. இப்பணியில் ஈடுபட்ட ரிக் இயந்திரம் 1 மணி நேரத்திற்கு 12 அடி ஆழம் தோண்ட வேண்டும்.ஆனால் இங்கு பாறை கடினமாக இருப்பதால் மணிக்கு 2 அல்லது 3 அடி ஆழமே தோண்டப்பட்டது.  குழந்தை சுஜித் வில்சன், ஆழ்துளை கிணற்றில் சுமார் 88 அடி ஆழத்தில் சிக்கி உள்ளார். குழந்தையை மீட்பதற்கு ரிக் இயந்திரத்தின் மூலம் ஆழ்துளை கிணறுக்கு இணையாக கீழ் நோக்கி 98 அடி ஆழத்தில் குழி தோண்டும் பணி தொடர்ந்தது.  ரிக் இயந்திரத்தில் தொடர்ந்து தோண்டுவதில் தாமதம் ஏற்பட்டதால் போர்வெல் இயந்திரம் மூலம் துளைகள் இடப்பட்டும், ரிக் இயந்திரம் மூலமும் துளைகள் இடப்பட்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.4 பொக்லைன் இயந்திரம் மற்றும் 6 டிப்பர்லாரிகள் ரிக் இயந்திரத்தின் மூலம் தோண்டப்படும் மண்ணை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்ல தயார் நிலையில் இருந்தன. இந்த மீட்புப் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர், தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஓஎன்ஜிசி. என்எல்சி, எல் அண்ட் டி நிறுவன வல்லுனர்கள் உள்படசுமார் 300 பேர் ஈடுபட்டுள்ளனர். (ந.நி.)

;