tamilnadu

img

எஜமானரை தீண்ட சீற்றத்துடன் வந்த விஷப் பாம்பை கொன்று தன் உயிரை கொடுத்த நாய்

தஞ்சாவூர், ஏப்.27-தஞ்சாவூர் அருகே எஜமானரை கடிக்க வந்த பாம்பை, வளர்ப்பு நாய் கடித்து கொன்றது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த நாயும் இறந்ததால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.வளர்ப்பு பிராணிகளில் நாய்க்கு எப்போதுமே தனி இடம் உண்டு. நாய் நன்றியுள்ளது. தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிகாடு நடுத்தெருவைச் சேர்ந்தவர் விவசாயி நடராஜன்(50). இவருக்கு தேவகி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நடராஜன் கடந்த 4 ஆண்டுகளாக பப்பி என்ற ஆண் நாயை வளர்த்து வந்தார். பப்பியை தனது குடும்பத்தில் ஒருவராக பார்த்துக் கொண்டார். அதன் மீது அவரது குடும்பத்தினர் அதீத பாசம் கொண்டு இருந்தனர். எப்போதும் வீட்டுக்குள்ளும், வெளியிலும் அதற்கு தனியாக நாற்காலி போட்டு அதில் உட்கார வைத்திருந்தனர்.குடும்பத்தினரோடு அவ்வப்போடு விளையாடி வந்துள்ளது. அதே போல் இரவில் யாராவது மனிதர்கள் நடமாட்டமோ அல்லது வேறு ஏதேனும் கால்நடைகள் வந்தாலோ குரைத்து பயமுறுத்தி வீட்டின் அருகே நெருங்க விடாமல் பார்த்து கொண்டது. 

தினமும் காலை நடராஜன் பப்பியை கூட்டிக்கொண்டு தன்னுடய தோட்டத்துக்கு நடைப்பயிற்சி செல்வது வழக்கம். அதே போல் சனிக்கிழமை காலை பப்பியை அழைத்துக் கொண்டு நடராஜன் தோட்டத்துக்கு சென்றுள்ளார். நடராஜன் முன்னே செல்ல பப்பி நாய் பின்னே வந்துள்ளது.அப்போது 5 அடி நீள நல்ல பாம்பு ஒன்று தோட்டத்தில் இருந்து ஊர்ந்து வந்துள்ளது. அதனை பார்த்த நடராஜன் அதிர்ச்சி அடைந்து அங்கும் இங்கும் நகராமல் அப்படியே நின்றுள்ளார். ஆனால் அந்த பாம்பு நடராஜனை கடிப்பதற்காக சீறியுள்ளது. அதனை பார்த்த பப்பி பாய்ந்து சென்று பாம்பை கடித்துள்ளது. இதில் நாயிக்கும் பாம்புக்கும் இடையே சண்டை கடுமையாக இருந்தது. நடராஜன் உடனே வீட்டுக்கு சென்று கம்பை எடுத்துக் கொண்டு பாம்பை அடிப்பதற்காக ஓடி வந்துள்ளார்.அப்போது அருகிலிருந்து முட்புதருக்குள் சென்ற பாம்பை நாய் விடாமல் முட்புதருக்குள் சென்று பிடித்து வெளியில் கொண்டு வந்து கடித்துக் குதறியது. நாய், பாம்பை விடாமல் துரத்தி துரத்தி கடித்ததால் நடராஜனால் அருகே நெருங்க முடியவில்லை. ஒருகட்டத்தில் நாய் கடித்ததில் பாம்பு இறந்தது. உடனே நாயை கட்டியணைத்து தூக்கி கொண்டு வீட்டுக்கு ஓடி வந்து வீட்டில் உள்ளவர்களிடம் நடந்ததை கூறினார்.

அதே நேரத்தில் நாய் சோர்ந்து போனதை பார்த்த குடும்பத்தினர், உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்தனர். அவரும் வருவதாக கூறினார். இதற்கிடையில் பாம்பின் விஷம் ஏறி சிறிது நேரத்தில் நாயின் உயிர் பிரிந்தது. இதனை கண்ட நடராஜன் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதனர். தங்களது குடும்பத்தில் ஒருவராக இருந்து தன்னை கடிக்க வந்த பாம்பை தடுத்து அதனை விரட்டி அதை கொன்று உயிர் விட்ட நாயின் நன்றியை மறக்க முடியாமல் நடராஜன் குடும்பத்தினரின் சோகத்தில் ஆழ்ந்தனர். தன்னை வளர்த்தெடுத்த தன் எஜமானரை காப்பாற்ற, தன் உயிரை கொடுத்து காப்பாற்றிய நாயின் நன்றியை எண்ணி அப்பகுதியினர் நெகிழ்ச்சி அடைந்தனர்.

;