tamilnadu

img

கஜா புயல் பாதிப்பு எதிரொலி

தஞ்சாவூர் மே.05-தமிழ் வழிக் கல்வி பயிலும் 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவசக் கல்வி வழங்குவதாக பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளி அறிவித்துள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணி பகுதி மாணவர்கள் பயன் பெறும் வகையில் குமரப்பா அறக்கட்டளை பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழ் வழியில் பயில்வதற்கு இலவச கல்வி வழங்குகிறது. குமரப்பா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதரால், பேராவூரணி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. டாக்டர் ஜே.சி.குமரப்பா மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழியில் பயில வரும் மாணவர்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி இலவச கல்வி வழங்க இந்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.  இதுகுறித்து குமரப்பா அறக்கட்டளையினர், நிர்வாக அறங்காவலர், முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் கூறுகையில், "கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணி பகுதிக்கு அறக்கட்டளை மூலம் பல்வேறு பள்ளிகளில் இருந்து பெறப்பட்ட தலா 1000 ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வீட்டு தேவைப் பொருட்கள் அடங்கிய ரூ 1 கோடி மதிப்பிலான, பத்தாயிரம் பைகள் மற்றும் தென்னை விவசாயிகளுக்கு 3,000 தென்னங்கன்றுகளும் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் இப்பகுதி மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்காதவாறு அவர்களுக்கு உதவிடும் நோக்கத்தில் சுமார் 100 மாணவர்களுக்கு மேல்நிலை வகுப்பில் தமிழ் வழியில் பயிலுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் கல்வி கட்டணம் ஏதுமின்றி தங்களது படிப்பை தொடர அறக்கட்டளை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார். குமரப்பா அறக்கட்டளையின் இந்த திட்டத்தை பல்வேறு தரப்பினரும் வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

;