புதுதில்லி:
புவி வெப்பமயமாதல் காரணமாக கடந்த ஐந்தாண்டுகளில் புயல் உருவாவது 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சமீப காலமாக வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் அடிக்கடி புயல் சின்னங்கள் உருவாகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், புவி வெப்பமாதல் காரணமாக கடந்த ஐந்தாண்டுகளில் புயல் உருவாவது 32 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், பத்து ஆண்டுகளில் 11 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.அதே நேரம், 1985 ஆம் ஆண்டிற்கு பிறகு 2018 மற்றும் 2019ம்ஆண்டுகளில் தலா ஏழு புயல்கள் உருவாகின. அதே ஆண்டுகளில் தலா ஆறு அதிதீவிர புயல்கள் இந்தியாவை தாக்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை மைய அதிகாரி அனுபம் காஷ்யப் கூறும்போது, கடந்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஐந்து புயல்கள் உருவாவதாகவும், அதில் 3 புயல்கள் அதிதீவிர புயலாக மாறுவதாகவும் தெரிவித்துள்ளார்.