tamilnadu

img

நாகையில் வரலாறு கூறும் கொடிமேடைகள் இடிப்பு

நாகப்பட்டினம், மே 3-இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், கடந்த மார்ச் மாதம் முதல், தேர்தல் விதிகள் என்னும் பெயரில், நாகப்பட்டினம் நகரிலும் மாவட்டப் பகுதிகளிலும் காவல்துறை செய்த அராஜகங்கள் கொஞ்சநஞ்சமல்ல.அரசியல் கட்சிகளின் கொடிமேடைகள் கொடிக் கம்பங்களுடன், ஜே.சி.பி. இயந்திரங்கள் மூலம் இடித்துச் சிதைக்கப்பட்டன. பெரிய அரசியல் கட்சிகள் மீண்டும் கொடிமேடைகளைக் கட்டிக் கொள்ளக் கூடும். ஆனால், சி.ஐ.டி.யு. போன்ற தொழிற்சங்கத் தொழிலாளர்களால் கட்டப்பட்ட கொடிமேடைகள், உண்டியல் குலுக்கி, வியர்வையால் கட்டப்பட்டவையாகும். அவற்றில் உள்ள கல்வெட்டுகள் வெறும் கற்கள் அல்ல. பெரிய பெரிய தலைவர்கள் கல்வெட்டுகளைத் திறந்து வைத்துக் கொடியேற்றி வைத்த வரலாற்றுச் சின்னங்கள். இவையாவும் சிதைக்கப்பட்டன.

தேசியக் கொடிமேடை தகர்ப்பு

நாகப்பட்டினம்- மறைமலை நகரில் தேசியக் கொடிமேடை இருந்தது. மாவட்ட உதவிக் கருவூல அலுவலராகப் பணியாற்றிய மா.சரோஜா என்பவரால் மறைமலை நகர் குடியிருப்போர் சங்கத்திற்காகக் கட்டிக் கொடுத்த கொடிமேடை அது. சுதந்திர தினம், குடியரசு தினங்களில், தேசியக் கொடியேற்றி, விழா கொண்டாடப்படும். அந்த தேசியக் கொடிமேடையை 2008-ஆகஸ்ட்-15 அன்று, அப்போது நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் வி.மாரிமுத்து, கல்வெட்டைத் திறந்து வைத்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.இந்த தேசியக் கொடிமேடையையும் கொடிக் கம்பத்துடன் ஜே.சி.பி.இயந்திரத்தால் தகர்த்து விட்டார்கள். ‘‘ஏன், தேசியக் கொடிமேடையை இடிக்கிறீர்கள்?’’ என்று மறைமலை நகர் மக்கள் கேட்டதற்கு, இந்தக் கல்வெட்டில் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பெயர் இருக்கிறது எனக் கூறியிருக்கிறார்கள். இந்தக் கொடுமையை எங்கு போய்ச் சொல்வது? 

மே தினத்தில் சிபிஎம் கொடிக்கம்பம் சாய்ப்பு

தேர்தல் விதிகள் நடைமுறையில் இருப்பதால், மேதினத்தன்று எந்தக் கொடிகளையும் ஏற்றக் கூடாது என்று காவல்துறை தெரிவித்துவிட்டது. பின்னர், சி.ஐ.டி.யு. மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன், இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் மூலமாக, மேதின விழாவைக் கொண்டாடும் பொருட்டு, அன்று கொடிகள் ஏற்றிக் கொள்ளலாம் என்னும் உத்தரவு நகலை அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார். அந்த உத்தரவைக் காட்டி, காவல் துறையின் அனுமதி பெற்று மே தினத்தன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்கங்கள் ஆகியவை புதிய கம்பங்கள் தற்காலிகமாக நட்டுச் சிறப்பாக மே தினக் கொடியேற்று நிகழ்ச்சிகளை நிறைவு செய்தார்கள்.இப்படி நாகப்பட்டினம் அண்ணா சிலை எதிரில் சி.பி.எம். சார்பில் கொடிக்கம்பம் நட்டுச் செங்கொடி ஏற்றப்பட்டது. மாலையில் கொடியை இறக்கப் போவதற்கு முன் நாகை நகரக் காவல் துறையினர் அங்கு வந்து கொடிக்கம்பத்தை முறித்துக் கீழே சாய்த்து விட்டுக் கொடியைக் கொண்டு சென்று விட்டார்கள்.வெள்ளிக்கிழமை அன்று சி.பி.எம். மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து, நாகை ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு, நாகை நகரச் செயலாளர் எம்.பெரியசாமி ஆகியோர் நாகை நகரக் காவல் நிலையம் சென்று பேசியதற்குக் காவல்துறையினர் மன்னிப்புக் கேட்டுத் தலைவர்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


- ந.காவியன்  


;