திருச்சிராப்பள்ளி, ஆக.26- வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாநகர் மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் திங்களன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் சிலையின் முன் அமர்ந்து சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனையடுத்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், கன்டோன்மெண்ட் காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தில் வாலிபர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் லெனின், மாவட்ட தலைவர் சந்திரபிரகாஷ், மாவட்ட பொருளாளர் சுரேஷ், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, துணை செயலாளர் லோகநாதன், முன்னாள் பகுதி செயலாளர் சுப்ரமணி, முத்து, சிபிஎம் மேற்கு பகுதி செயலாளர் வெற்றிச்செல்வன், சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்
கும்பகோணத்தில் காந்தி பார்க் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழருவி, தமிழ் புலிகள் இயக்க நிறுவனர் வழக்கறிஞர் இளங்கோவன், திராவிட கழக நகர தலைவர் கௌதமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி , சி.நாகராஜன் பி.பார்த்தசாரதி, ஜி.பக்கிரிசாமி, நகர செயலாளர் க.செந்தில்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் விசிக ஓய்வூதியர் சங்கம் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் ஆக்கூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாவட்ட துணைத் தலைவர் டி.சிம்சன் தலைமையில் திங்களன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் வட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் இராசையன், ரவிச்சந்திரன், வட்டக்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, காபிரியேல், மார்க்ஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்ட செயலாளர் சரவணன், தலைவர் இளையராஜா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.