புதுக்கோட்டை, ஜூலை 10- எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், கே.பி. வேளாண்மைத்துறை மற்றும் வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையம் ஆகிய அமைப்புகள் இணைந்து மக்காச்சோளத்தில் படைப்புழுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் புதன்கிழமை நடத்தின. நிகழ்ச்சிக்கு வம்பன் வேளாண்மை அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் மு.ரா.லதா தலைமை வகித்தார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜ்குமார் பிரச்சாரத்தின் நோக்கங்களை விளக்கி பேசும்போது, படைப்புழுவின் தாக்குதலை சரியான தருணத்தில் கட்டுப்படுத்தாவிட்டால் 60 முதல் 80 சதவிகிதம் வரை மகசூல் இழப்பினை ஏற்படுத்தும். இந்தப்படைப்புழு 2016 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளில் பரவி 2018 முதல் நமது பகுதிகளில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படைப்புழு மற்ற பயிர்களிலும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, இது குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் அரசு மற்றும் பிற அமைப்புகளுடன் இணைத்து ஆகஸ்டு 15 வரை பல்வேறு வடிவங்களில் பிரச்சாரம் நடத்தவுள்ளது என்றார். நிகழ்ச்சியில் கேபி அமைப்பின் இந்தியாவிற்கான ஒருங்கிணைப்பாளர் ஆர்.கணேசமூர்த்தி, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பூச்சியல் நிபுணர் பிலிப்டெய்லர், வம்பன் வேளாண்மை அறிவியல் மைய விஞ்ஞானிகள் முனைவர் சண்முகபாக்கியம், முனைவர் சிவபாலன் ஆகியோர் விளக்க உரையாற்றினர். நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வேளாண்மை பட்டய படிப்பு மாணவிகள் பங்கேற்றனர். முன்னதாக எ.முகமது பிலால் வரவேற்க, ஏசுதாஸ் நன்றி கூறினார்.